கோவை, போத்தனூர் அருகே அம்மன் நகர் உள்ளது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவரது 10 வயது மகளுடன் வந்து தங்கி உள்ளார். அந்தப் பெண்ணை அவரது அத்தை சோனா என்பவர் கடந்த டிசம்பர் மாதம் கோவைக்கு அழைத்து வந்து உள்ளார்.
சோனாவும் அந்த பெண்ணும் அங்கு உள்ள மெஸ்ஸில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சோனா அந்த பெண்ணின் 10 வயது மகளை தினமும் வீட்டில் அடித்து துன்புறுத்தி வந்து உள்ளார். அதோடு அந்தப் பெண்ணையும் அவ்வப் போது அடித்து உள்ளார். ஏதாவது ஒரு வேலையை கூறியதை செய்யவில்லை என்றால், சிறுமி என்று பார்க்காமல் அவரை தினமும் சோனா அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அக்கம், பக்கத்தினர் பார்த்து தட்டிக் கேட்டு உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து சோனா சிறுமியை அடித்து சித்திரவதை செய்து வந்து உள்ளார்.
இதனால் அக்கம், பக்கத்தினர் கோவை குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு குழந்தைகள் நல அலுவலர் ரிபானா ஆஃபரின் மற்றும் அலுவலர்கள் சென்றனர்.
சம்பவம் குறித்து சிறுமி மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சோனா தங்களை அடித்து சித்திரவதை செய்து வருவதை கண்ணீருடன் தெரிவித்தனர்.
மேலும் அந்த சிறுமி இனி மேலும் சோனாவுடன் நாங்கள் வாழ விரும்பவில்லை என்று தெரிவித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர் ரிபானா ஆஃபரின் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியை அடித்து சித்திரவதை செய்ததாக சோனாவின் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையே பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரை போலீசார் அங்கு உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்: