வணிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

"பிரிமியம் பத்மினி முதல் மாடர்ன் கார் வரை" ; கோவையில் களைகட்டிய பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன விற்பனை மேளா!

"பிரிமியம் பத்மினி முதல் மாடர்ன் கார் வரை" ; கோவையில் களைகட்டிய பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன விற்பனை மேளா!

வாடிக்கையாளர்கள் குவிந்ததால் விற்பனை மேளாவை நீட்டிக்கத் திட்டம் : துடியலூர் அருகே ஆயிரக் கணக்கான கார்கள் அணிவகுப்பு!

 கோவை, மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அருகே நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனக் கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் குவிந்து தங்களுக்குப் பிடித்த வாகனங்களை மகிழ்ச்சியோடு வாங்கிச் செல்கின்றனர்.

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள துடியலூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட முன்னணிப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகன (Used Cars) விற்பனை நிறுவனங்கள் இணைந்து நடத்திய அதிரடி விற்பனை மேளா கடந்த 3 நாட்களாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

​இந்தக் கண்காட்சியில் பழமையான பாரம்பரியமிக்க 'பிரிமியம் பத்மினி' (Premier Padmini) கார்கள் முதல் சந்தைக்கு வந்த அதிநவீன ரக மாடர்ன் நான்கு சக்கர வாகனங்கள் வரை ஆயிரக் கணக்கான கார்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. ஒரே இடத்தில் பல்வேறு பிராண்டுகளின் கார்களை நேரில் பார்த்துத் தேர்வு செய்ய முடிவதால், இந்த மேளா வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் குடும்பங்களின் தேவைகளும் பயணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் வெளியூர்களுக்குச் செல்லும் போது, பொதுப் போக்குவரத்து அல்லது பேருந்துகளில் குடும்பத்துடன் பயணிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது. மேலும் அதிக நேரம் விரயமாவதோடு, நீண்ட நேரப் பயணத்தால் உடல்நலக் குறைபாடும் உடல் அசதியும் ஏற்படுகிறது.

​ஒரு குடும்பத்தினர் பாதுகாப்பாகவும், விரைவாகவும், எவ்வித உடல் அசதியுமின்றி உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் சென்று வருவதற்குச் சொந்தமாக நான்கு சக்கர வாகனம் வைத்து இருப்பதே சிறந்தது என்பதால், பொதுமக்கள் மத்தியில் கார்களின் பயன்பாடும் தேவையும் பெருமளவில் அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக, இந்த மேளாவில் ஆயிரக் கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஒரே இடத்தில் தங்களுக்குப் பிடித்தமான கார்களைப் பார்வையிட்டு, மற்றும் வசதிக்கு ஏற்ற வாகனங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

​மக்கள் இடையே கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் வாடிக்கையாளர்களின் வருகை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த விற்பனை மேளாவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க விற்பனை நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "ஒரு பக்கமா சாஞ்சுகிட்டே ஓடும் அரசு பஸ்" - கோவையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட பேருந்தால் பயணிகள் பீதி!

"ஒரு பக்கமா சாஞ்சுகிட்டே ஓடும் அரசு பஸ்" - கோவையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட பேருந்தால் பயணிகள் பீதி!

மலுமிச்சம்பட்டியில் நேராகச் செல்லாமல் சாந்தபடி சென்ற அரசுப் பேருந்து : புதிய பேருந்துகள் வழங்க பொதுமக்கள் கோரிக்கை!

​ கோவை - பொள்ளாச்சி சாலையில் அரசுப் பேருந்து ஒன்று நேராகச் செல்லாமல் ஒருபுறமாகச் சாய்ந்தபடி ஆபத்தான முறையில் இயக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பராமரிப்புக் குறைபாட்டைத் தோலுரித்துக் காட்டி உள்ளது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் இன்று காலை அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது.

​அப்போது, அந்தப் பேருந்து வழக்கம் போல நேராகச் செல்லாமல், வாகனத்தின் ஒருபக்கம் அப்படியே தரையை நோக்கிச் சாய்ந்தபடி (One-sided lean) தள்ளாடியவாறு சென்று கொண்டு இருந்தது. இதைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பேருந்தின் சஸ்பென்ஷன் (Suspension) அல்லது ஆக்சில் (Axle) கோளாறு காரணமாகவே பேருந்து இப்படி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு செல்வதாகவும், இதில் பயணிக்கும் பயணிகளுக்கும் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கும் மாபெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​இந்த ஆபத்தான பயணத்தை பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோவாகப் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் இணையவாசிகளின் கண்டனத்தைப் பெற்று வருகிறது.

தமிழகத்தில் இயங்கி வரும் பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றியும், பழமையான நிலையிலும் இயங்கி வருவதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

​"அரசுப் பேருந்துகளின் தற்போதைய பரிதாப நிலைமைக்கு இந்த வீடியோவே சாட்சி! தற்போதைய அரசாவது உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழைய மற்றும் பழுதடைந்த பேருந்துகளை அகற்றி விட்டுப் புதிய அரசுப் பேருந்துகளை வாங்கி இயக்க வேண்டும்" எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

 "7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயா ?" - கோவை உக்கடத்தில் தனியார் பஸ்ஸை மறித்துக் கேள்வி கேட்ட தைரிய பெண்!

"7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாயா ?" - கோவை உக்கடத்தில் தனியார் பஸ்ஸை மறித்துக் கேள்வி கேட்ட தைரிய பெண்!

"RTO-விடம் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ" என நடத்துநர் அடாவடி: நடுரோட்டில் பஸ்ஸை மறித்ததால் பரபரப்பு!

 கோவையில் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வசூலித்து விட்டு, "இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லையென்றால் இறங்கு" என அடாவடியாகப் பேசிய தனியார் பேருந்து நடத்துநரை, பெண் ஒருவர் நடுரோட்டில் பேருந்தை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காந்திபுரத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.

​இந்நிலையில், உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வதற்காகப் பெண் பயணி ஒருவர் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். வழக்கமாக உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை நிறுத்தத்திற்கு அரசு மற்றும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் 7 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

​ஆனால், குறிப்பிட்ட அந்தத் தனியார் பேருந்தின் நடத்துநர் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வாங்கி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் பயணி, "ஏழு ரூபாய் டிக்கெட்டுக்கு எதுக்கு அண்ணா பத்து ரூபாய் வாங்குறீங்க?" என நியாயமாகக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அந்த நடத்துநர் கனிவாகப் பதில் கூறாமல், "நான் அப்படித் தான் வாங்குவேன்... இஷ்டம் இருந்தா வா, இல்லாட்டி இறங்கிப் போ! வேணும்னா RTO-கிட்ட போய் கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ" என மிக அடாவடித்தனமாகப் பேசி உள்ளார்.

​நடத்துநரின் இந்த அலட்சியமான பதிலால் கொதிப்படைந்த அந்தப் பெண், உடனடியாகப் பேருந்தில் இருந்து கீழே இறங்கி, நடுரோட்டில் நின்று அந்தப் பேருந்தை நகர விடாமல் மறித்து நிறுத்தி நியாயம் கேட்டார்.

ஒரு பெண்ணாக நடுரோட்டில் இறங்கித் தனியார் பேருந்தை மறித்து, நடத்துநரின் அதிகப்படியான கட்டண வசூல் மற்றும் அடாவடிப் பேச்சைத் தைரியமாகக் கேள்வி கேட்ட காட்சியைப் பார்த்து அங்கு இருந்த சக பயணிகளும் பொதுமக்களும் திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் பரபரப்பு நிலவியது.

​கோவையில் சில தனியார் பேருந்துகளில் இதுபோன்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக வசூலிப்பதும், கேள்வி கேட்கும் பயணிகளிடம் நடத்துநர்கள் மரியாதையின்றி நடப்பதும் தொடர் கதையாகி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 எனவே, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) உடனடியாக ஆய்வு நடத்தி, அதிகக் கட்டணம் வசூலித்த அந்தத் தனியார் பேருந்து மற்றும் நடத்துநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 "ரூ.400 கோடியில் கோவை ஃபின்டெக் ஹப்" ; முதலமைச்சருக்கு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் நன்றி!

"ரூ.400 கோடியில் கோவை ஃபின்டெக் ஹப்" ; முதலமைச்சருக்கு கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் நன்றி!

சர்வதேச அளவில் உருவெடுக்கும் கோவை: ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும் என வரவேற்பு!

​ கோவையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'கோயம்புத்தூர் ஃபின்டெக் ஹப்' (Coimbatore FinTech Hub) எனும் மாபெரும் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ் மனமார்ந்த வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்து உள்ளார்.

​ரூ.400 கோடியில் டிஜிட்டல் நிதி மையம்:

கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) சார்பாக ரூ.400 கோடி மதிப்பீட்டில் "Coimbatore FinTech Hub" அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்து இருந்தது.

​இந்தத் திட்டத்தின் கீழ் உலகத் தரத்திலான அலுவலகச் சூழல், நிதிநுட்பப் புத்தொழில் நிறுவனங்களுக்கான (Startups) சிறப்பு வசதிகள், நவீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வகங்கள், மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் போன்றவை அமைக்கப்பட உள்ளன.

​எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் அறிக்கை:

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி சந்தோஷ் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

​"கோயம்புத்தூரின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

​இந்தத் திட்டம் உலகளாவிய முதலீடுகளை கோவைக்கு ஈர்ப்பதற்கும், நிதி நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், நமது பகுதி இளைஞர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.

​தொழில், தொழில்முனைவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஏற்கனவே முன்னணி நகரமாகத் திகழும் கோயம்புத்தூர், இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் முக்கிய FinTech மையங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் கவனம் பெறும் தொழில்நுட்ப நகரமாகவும் மேலும் உயர்வடையும்.

​கோவை மக்களின் நீண்டகால வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கான பொருளாதார வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டு உள்ள இந்த சிறப்புமிக்க திட்டத்தைக் கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் சார்பிலும், கோவை மக்களின் சார்பிலும் மனதார வரவேற்கிறேன்.

 இத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்து உள்ளார்.

கோவையில் வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மெகா மோசடி ; வங்கி அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

கோவையில் வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மெகா மோசடி ; வங்கி அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

 கோவையில் வாடிக்கையாளர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து மெகா மோசடி ; வங்கி அதிகாரிகள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

கோவையை சேர்ந்த கேசவபாண்டியன் என்பவர் 'நேச்சர்ஸ் டச் குளோத்திங் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 2024 ஆம் ஆண்டு புகார் அளித்து இருந்தார். அதில், சியூபி வங்கியில் தனது கணக்கு வாராக்கடனாக வகைப்படுத்தப்பட்ட போது நிலுவைத் தொகையாக இருந்த சுமார் ரூ.3.50 கோடியில், ரூ.2 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.  

ஆனால், வங்கி அதிகாரிகள் சிலர் தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், தனது கையெழுத்து மற்றும் தனது தந்தை முருகன், தாய் பொன்னுத்தாய், சகோதரர் அருண்பாண்டியன் ஆகியோரின் கையெழுத்துகளை போலியாக போட்டு ஆவணங்களை தயார் செய்து உத்தரவாத ஒப்பந்தம், கடன் ஒப்பந்தம், டிமாண்ட் ப்ராமிசரி நோட் உள்ளிட்ட பல ஆவணங்களை போலியாக தயார் செய்து, அதனை உண்மையானது போல காட்டி மோசடி செய்து உள்ளனர். வங்கியின் இந்த மோசடியை வாடிக்கையாளர் வெளியில் காட்டியதால், சியூபி வங்கி போலி ஆவணங்களை வைத்து கடன் தீர்ப்பாயத்தில் ரூ.5 கோடியே 8 லட்சத்து 9 ஆயிரத்து 959 கேட்டு பொய் வழக்கு தொடர்ந்து ஒருதலைப்பட்ச உத்தரவை பெற்றதாகவும் அவர் புகாரில் கூறி இருந்தார்.  

இந்த மோசடி மட்டுமின்றி, வாடிக்கையாளரின் சொத்துக்களை ஏலம் விட்டதிலும் வங்கி அதிகாரிகள் பெரிய அளவில் மோசடி செய்து இருந்தனர்.

2015-16 காலகட்டத்தில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள 5 அடமான சொத்துக்களை, 2022-ல் வங்கி வெறும் ரூ.1.40 கோடி என்ற மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்று உள்ளது. அதில் 56 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்ட ஒரு சொத்தை மட்டும் ஏலம் எடுத்த அதே நிறுவனம் 19-6-2023 அன்று அந்தச் சொத்தை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து ரூ.20 கோடி கடன் பெற்று உள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில், கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் 14-11-2024 அன்று சியூபி வங்கி அதிகாரிகள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இதில் கிளை மேலாளர் அரவிந்த், வங்கி மேலாளர் குஞ்சிதபாதம், உதவி மூத்த மேலாளர் கணேசன் , மூத்த பொது மேலாளர் மகாராஜன் ,மண்டல வளர்ச்சி மேலாளர் சுயம்புலிங்கராஜா, வங்கி அதிகாரி ராமன் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 5-வது குற்றவாளியான வங்கியின் மண்டல வளர்ச்சி மேலாளரான ஜி.சுயம்புலிங்கராஜா, தன் மீதான இந்த மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் தடய அறிவியல் ஆய்விற்காக அசல் ஆவணங்களை சமர்ப்பிப்பதாக ஒப்புக்கொண்ட வங்கி தரப்பு, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தவறியது. இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, வங்கி அதிகாரிக்கு விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத் தடையை நீக்கி , வழக்கை ரத்து செய்ய அதிரடியாக மறுத்து விட்டார். மேலும், கோவை மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடரவும் அவர் உத்தரவிட்டார்.  

வழக்கை விசாரித்த நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:

வங்கி அதிகாரிகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. தணிக்கையாளர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, வாடிக்கையாளருக்கே தெரியாமல் கூடுதல் கடன் வழங்கப்பட்டதாக கணக்கு காட்டி, பழைய கடனை அடைக்க அந்த பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அந்த கடன் தொகையை வாடிக்கையாளர் தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தினாரா அல்லது வங்கி அதிகாரிகள் ஆவணங்களை போலியாக தயாரித்தார்களா என்ற உண்மைகள் போலீஸ் விசாரணையில் தான் முழுமையாக தெரியவரும். எனவே, மோசடி குறித்த போலீஸ் விசாரணையை இப்போது ரத்து செய்ய முடியாது.

இவ்வாறு கூறி, சியூபி வங்கி அதிகாரியின் மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சமயத்தில் வங்கி தரப்பில் தொடர்ந்து வழக்கிற்கு தடை கேட்டு பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு போலீசாரால் விசாரணை செய்ய முடியாமலே இருந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்து உள்ள இந்த தீர்ப்பை தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

பால் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் - MLA கனிமொழி சந்தோஷ் வரவேற்பு !!

பால் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் - MLA கனிமொழி சந்தோஷ் வரவேற்பு !!

 பால் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் - MLA கனிமொழி சந்தோஷ் வரவேற்பு !! 

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளார்.

பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் செலவுகள் மற்றும் அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும்.

மேலும், பால் உற்பத்தியை ஊக்குவித்து, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த விலை உயர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்புக்கு உரிய மதிப்பளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் இந்த அறிவிப்பை வரவேற்பதாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஆர்.டி. கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விலை உயர்வு, அவர்களுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தும். விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்படுவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

டாஸ்மாக் மதுபாட்டிலுக்குள் மிதந்த ஸ்டிக்கர் ; கோவையில் மதுப்பிரியர் அதிர்ச்சி - வீடியோ வைரல் !!!

டாஸ்மாக் மதுபாட்டிலுக்குள் மிதந்த ஸ்டிக்கர் ; கோவையில் மதுப்பிரியர் அதிர்ச்சி - வீடியோ வைரல் !!!

 டாஸ்மாக் மதுபாட்டிலுக்குள் மிதந்த ஸ்டிக்கர் ; கோவையில் மதுப்பிரியர் அதிர்ச்சி - வீடியோ வைரல் !!!

அமைச்சர் விக்னேஷின் தொகுதியிலேயே நேர்ந்த குளறுபடி : உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை !!!

 கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லுக்குழி பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட மதுபாட்டிலுக்குள் ஸ்டிக்கர் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​கிணத்துக்கடவு, கல்லுக்குழி பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 1878-ல் மதுப்பிரியர் ஒருவர் 'Black Pearl XXX Rum' குவாட்டர் பாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார். பாட்டிலைத் திறந்து குடிக்க முயன்ற போது, சீல் வைக்கப்பட்ட அந்த மதுபாட்டிலின் உள்ளே பாட்டிலின் வெளிப்புறம் ஒட்டப்படும் ஸ்டிக்கர் மிதப்பதைக் கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

​சீல் வைக்கப்பட்ட மதுபாட்டிலுக்குள் வெளி ஸ்டிக்கர் எப்படிச் சென்றது என அதிர்ச்சி அடைந்த அவர், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

​"அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் தரம் மற்றும் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது; மதுபான தயாரிப்பு ஆலைகளில் முறையான தரப்பரிசோதனை செய்யப்படுகிறதா ?" எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

​மேலும், இச்சம்பவம் நடைபெற்ற கிணத்துக்கடவு தொகுதி, தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் அவர்களின் சொந்தச் சட்டமன்றத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

​எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட மதுபான ஆலை மற்றும் டாஸ்மாக் கடை மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் மது பிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை... நான் சந்திரா தான்" – 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா கொடுத்த கலகலப்பான பதில்!

"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை... நான் சந்திரா தான்" – 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா கொடுத்த கலகலப்பான பதில்!

"நான் சிம்புவோட அம்மா எல்லாம் இல்லை... நான் சந்திரா தான்" – 'அரசன்' திரைப்படம் குறித்த கேள்விக்கு நடிகை ஆண்ட்ரியா கொடுத்த கலகலப்பான பதில்!


 “இப்பலாம் ஹெவி இருக்கிறது யாருக்குமே பிடிக்காது” ; அழகா இருக்கணும், லைட்டா இருக்கணும் ” - நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஆண்ட்ரியா ஓபன் டாக் !


"இப்போதெல்லாம் யாருக்குமே அதிக எடைகொண்ட ஹெவி ஜுவல்லரி (Heavy Jewels) பிடிப்பதில்லை; பாக்குறதுக்கு அழகாகவும், போடுவதற்கு லேசாகவும் இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு" என நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா தெரிவித்து உள்ளார்.

​பிரபல நடிகையும், பின்னணிப் பாடகியுமான ஆண்ட்ரியா, கோவையில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது ரிப்பன் வெட்டி நகைக் கடையைத் திறந்து வைத்த அவர், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பல்வேறு நவீன மற்றும் பாரம்பரிய ரக நகைகளைப் பார்வையிட்டார்.

​அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்ட்ரியா பேசியதாவது:

​"முன்பெல்லாம் அடுக்கடுக்காகப் பாரமான நகைகளை அணிவது தான் ஃபேஷனாக இருந்தது. ஆனால், இப்போது ட்ரெண்ட் முற்றிலும் மாறி விட்டது. இப்பலாம் ஹெவி ஜுவல்ஸ் யாருக்குமே பிடிக்காது... நகைகள் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கணும், அதேசமயத்தில் போடுவதற்கு ரொம்ப லைட்டாகவும் (Lightweight), உண்மையாகவும் இருக்கணும்னு தான் எல்லாரும் விரும்புறாங்க.​என்று நகை தேர்வு மற்றும் இன்றைய ட்ரெண்ட் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வட சென்னை' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக உள்ள 'அரசன்' (வடசென்னை 2) திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "நான் சிம்புவோட அம்மா இல்லை... நான் சந்திரா தான்" என நடிகை ஆண்ட்ரியா நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் பதில் அளித்தார். 

​நகைக்கடை திறப்பு விழாவில் ஆண்ட்ரியாவின் இந்த கலகலப்பான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சனி, 1 ஆகஸ்ட், 2026

 ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணி ; ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல் -   மடக்கிப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை !!!

ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணி ; ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல் - மடக்கிப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை !!!

ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணி ; ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 93 கிராம் தங்கப் பேஸ்ட், ரூ.8.76 லட்சம் மதிப்பிலான மின்னணு சிகரெட் பறிமுதல் -   மடக்கிப் பிடித்த சுங்கத் துறை அதிகாரிகள் நடவடிக்கை !!!

 கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி எடுத்து வரப்பட்ட தங்கப் பேஸ்ட் ஆகியவற்றை மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றினர்.

 ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளைப் மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரை நிறுத்தி, அவரது சோதனையிடப்பட்ட போது லக்கேஜ் பைகளில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 50,000 ‘எஸ்ஸி சேஞ்ச்’ (Esse Change) பிராண்ட் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் 80 ‘எல்ஃப்பார்’ (Elfbar) மின்னணு சிகரெட்டுகள் (Vapes) இருப்பது கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.8.76 லட்சம் ஆகும்.

​மேலும், அந்தப் பயணியை தீவிரமாகச் சோதனையிட்டதில், அவர் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உட்பகுதியில் சாதுர்யமாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 93 கிராம் எடை உள்ள தங்கப் பேஸ்ட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாழன், 30 ஜூலை, 2026

கோவை புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் பாலாஜி என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை !!!

கோவை புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் பாலாஜி என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை !!!

 கோவை புதூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் பாலாஜி என்பவரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை !!!

கோவை, குனியமுத்தூர் அருகே உள்ள கோவை புதூரில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பாலாஜி வசித்து வருகின்றார். இவரது அலுவலகம் இராமநாதபுரம் சுங்கம் பகுதியில் உள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான தொழிலில் பாலாஜி ஈடுபட்டு வரும் நிலையில் முறையாக வருமான வரி செலுத்தப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் தொழிலதிபர் பாலாஜியின் வீடு மற்றும் சுங்கத்தில் உள்ள அலுவலகம் ஆகிய இரு இடங்களில் 4 கார்களில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் முதலில் வீட்டில் சோதனையை துவங்கினர். 

இதனைதொடர்ந்து சுங்கம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் 10 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைபற்றியுள்ளனர். தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகின்றது.

பயணத்தை ரத்து செய்து விட்டு பணத்தையும் தராத ஆம்னி பேருந்து ; ₹ 25,000 இழப்பீடு வழங்கக் கோவை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!

பயணத்தை ரத்து செய்து விட்டு பணத்தையும் தராத ஆம்னி பேருந்து ; ₹ 25,000 இழப்பீடு வழங்கக் கோவை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!

 பயணத்தை ரத்து செய்து விட்டு பணத்தையும் தராத ஆம்னி பேருந்து ; ₹ 25,000 இழப்பீடு வழங்கக் கோவை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!

கடைசி நேரத்தில் பஸ் கேன்சல்... மாற்று ஏற்பாடும் இல்லை: ஏமாந்த பயணிக்கு நியாயம் வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் !!!

முன்பதிவு செய்த பயணத்தைக் கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டு, அதற்கான கட்டணத்தைத் திரும்பத் தராமல் அலட்சியம் காட்டிய தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு, பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

​கோவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்குக் குடும்பத்துடன் சென்று வருவதற்காக, பிரபல தனியார் ஆம்னி பேருந்தில் 4 பேருக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார். பயணத்திற்காகக் குடும்பத்துடன் தயாராக இருந்த நிலையில், "பேருந்து பழுதாகி விட்டது" எனக் கூறி கடைசி நேரத்தில் பயணத்தை ஆம்னி பேருந்து நிறுவனம் ரத்து செய்தது.

​மேலும், மாற்றுப் பேருந்து எதுவும் ஏற்பாடு செய்து தராததுடன், திரும்புவதற்கான முன்பதிவையும் ரத்து செய்து அதற்குச் செலுத்திய கட்டணத்தையும் திரும்பக் கொடுக்க மறுத்து உள்ளனர்.

 இதனால் பாலமுருகன் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கூடுதல் செலவில் வேறு பேருந்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டது.

 இதுகுறித்து நேரில் சென்று கேட்ட போதும் பேருந்து நிர்வாகம் உரிய பதில் அளிக்காததால், பாலமுருகன் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சம்பத் முத்துக்குமார் மூலமாக வழக்கு தொடர்ந்தார்.

​இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட அமர்வு, சேவை குறைபாட்டைச் சுட்டிக்காட்டி முக்கியத் தீர்ப்பளித்தது. அதில், ஆம்னி பேருந்து நிறுவனம் பயணிக்கு டிக்கெட் கட்டணத் தொகையான ரூ.5,803-ஐத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், அத்துடன் பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20,000 மற்றும் வழக்குச் செலவுத் தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.25,000-க்கும் மேல் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

புதன், 29 ஜூலை, 2026

வியாபாரியிடம் ரூபாய் மூன்று கோடி மோசடி - நகைக்கடை உரிமையாளர் கைது !!!

வியாபாரியிடம் ரூபாய் மூன்று கோடி மோசடி - நகைக்கடை உரிமையாளர் கைது !!!

 வியாபாரியிடம் ரூபாய் மூன்று கோடி மோசடி - நகைக்கடை உரிமையாளர் கைது !!!

கோவை வியாபாரியிடம் ரூபாய் 3 கோடி தங்க நகை மோசடி செய்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

கோவை, ராஜவீதி அசோக் நகரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவர் தங்க நகைகளை தயார் செய்து நகைக்கடை வியாபாரிகளுக்கு கொடுப்பது வழக்கம், இவருக்கு மதுரை தெற்கு ஆவனி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வரும் சுதர்சன் என்பவர் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து தங்க நகைகளை கொடுத்தால் 20 நாட்களில் விற்று பணமாக தருவதாக சுதர்சன் கூறி உள்ளார். அதன்படி தொடக்கத்தில் தங்க நகைகளை வாங்கி விற்று பணம் கொடுத்து உள்ளார். இதனால் சுதர்சன் மீது நம்பிக்கை ஏற்பட்டது. இதை அடுத்து ஆனந்தன் ரூபாய் 3 கோடி மதிப்பு உள்ள தங்க நகைகளை சுதர்சனிடம் கொடுத்து உள்ளார். ஆனால் அதற்குரிய பணத்தை சுதர்சன் கொடுக்கவில்லை, இது பற்றி பலமுறை கேட்டும் அவர் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இது குறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மதுரை நகைக்கடை உரிமையாளர் சுதர்சனை கைது செய்தனர்.

புதன், 22 ஜூலை, 2026

 “சீட்டில் பூச்சி, பெட்டில் தூசி... ஏறியவுடனே வீசிங் கியாரண்டி” ;  essaar பிரைவேட் பஸ்ஸின் அவலம் -ரூ.1614 கொடுத்து புலம்பிய பயணி !!!

“சீட்டில் பூச்சி, பெட்டில் தூசி... ஏறியவுடனே வீசிங் கியாரண்டி” ; essaar பிரைவேட் பஸ்ஸின் அவலம் -ரூ.1614 கொடுத்து புலம்பிய பயணி !!!

 “சீட்டில் பூச்சி, பெட்டில் தூசி... ஏறியவுடனே வீசிங் கியாரண்டி” ;  essaar பிரைவேட் பஸ்ஸின் அவலம் -ரூ.1614 கொடுத்து புலம்பிய பயணி !!!

“ஏசி அளவைக் குறைக்க முடியாதா ?” எனக் கேட்டதற்கு ஓட்டுநரின் அசால்ட் பதில் : இணையத்தைக் கலக்கும் அவல வீடியோ !!!

 கோவையில் இருந்து செங்கல்பட்டு செல்வதற்காக ரூ.1,614 கொடுத்து பிரபல essaar தனியார் ஆம்னி பேருந்தில் டிக்கெட் எடுத்த பயணி ஒருவர், பேருந்தின் சுகாதாரமற்ற மோசமான சூழல் குறித்துத் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ காட்சி, தற்பொழுது இணையத்தில் வைரலாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பயணிகளின் பாதுகாப்பிற்கும் வசதிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டிய முன்னணி ஆம்னி பஸ் நிறுவனங்கள், சீரான பராமரிப்பின்றி இவ்வாறான சேவைகளை வழங்கிப் பயணிகளின் பணத்தைச் சுரண்டி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

அந்த வீடியோவை வெளியிட்ட பயணி ஆதங்கத்துடன் பேசுகையில், 

"இந்த பேருந்தில் ஏறிய சில நிமிடங்களிலேயே இலவசமாக 'வீசிங்' (Wheezing) பிரச்சனை வந்துவிடும் அளவுக்குக் காற்று வீசுகிறது. குளிர்சாதனப் பெட்டியின் (AC) குளிர்சியைக் குறைக்கக் கோரி ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் கேட்டதற்கு, 'ஓரு முறை போட்டால் அப்படித் தான் வரும், குறைக்க முடியாது' என மிகவும் அசால்ட்டாகப் பதிலளித்தனர்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.

 அதுமட்டுமின்றி, பேருந்தின் இருக்கைகள் முழுவதும் தூசிகள் படிந்தும், ஆங்காங்கே பூச்சிகள் ஊர்ந்து கொண்டும் இருந்த சுகாதாரமற்ற நிலையையும் அவர் தனது செல்போனில் பதிவிட்டு உள்ளார்.

 அதிகக் கட்டணம் வசூலித்தும் அடிப்படைப் பராமரிப்பைக் கூட வழங்காத தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகத்தின் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

புதன், 15 ஜூலை, 2026

வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ‘பிட்காயின்’ ஆசை வார்த்தை... கோவையைச் சேர்ந்த துபாய் தொழிலதிபரிடம் ₹27.4 லட்சம்  சுருட்டல் - சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கிய 5 பேர் கொண்ட மோசடி நெட்வொர்க் !!!

வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ‘பிட்காயின்’ ஆசை வார்த்தை... கோவையைச் சேர்ந்த துபாய் தொழிலதிபரிடம் ₹27.4 லட்சம் சுருட்டல் - சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கிய 5 பேர் கொண்ட மோசடி நெட்வொர்க் !!!

 வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ‘பிட்காயின்’ ஆசை வார்த்தை... கோவையைச் சேர்ந்த துபாய் தொழிலதிபரிடம் ₹27.4 லட்சம்  சுருட்டல் - சைபர் கிரைம் போலீசாரிடம் சிக்கிய 5 பேர் கொண்ட மோசடி நெட்வொர்க் !!!

9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள்; அனுமதி இல்லாமல் 250 சிம்கார்டுகளை ஆக்டிவேட் செய்த ஏஜென்ட் - பிலிப்பைன்ஸ் லிங்க் முதல் ‘பேங்க் அக்கவுண்ட்’ வாடகை வரை அதிரவைக்கும் பின்னணி அம்பலம் !!!

whatsapp மற்றும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு பிட்காயின் டிரேடிங் ஆன்லைன் டிரேடிங் என்ற முறையில் முதலீடு செய்தால் அதிக தொகை லாபமாக பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பொதுமக்களிடமிருந்து லட்சக் கணக்கில் பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 கோவை, வடவள்ளி பகுதியைச் சார்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் என்பவர் தற்போது துபாய் அபுதாபியில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவர் கோவையில் இருந்தபோது கடந்த 28/9/2025-ம் தேதி வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் மூலமாக அழைத்த நபர்கள் ஆன்லைன் டிரேடிங் பிட்காயின் டிரேடிங் ஆகியவற்றில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.2745800/- பணத்தை பல்வேறு வங்கி கணக்கில் பெற்று மோசடி செய்து உள்ளனர். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 அதில் கோவை அறிவொளி நகர் பகுதியில் சேர்ந்த வசந்த் (20)என்பவரை கடந்த 24 ஆம் தேதி கைது செய்தும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த அஜல் (22) மற்றும் திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரி சேர்ந்த ஜனகன் (23)ஆகியோரை 26 ஆம் தேதி கைது செய்தும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சிம்கார்டு விற்பனையாளரான பரத் (26) என்பவரை 27ஆம் தேதி கைது செய்தும் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (38) என்பவரை கடந்த 7-ம் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 மேற்படி நபர்கள் அவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் இணைந்து ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. இவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் 9 மாநிலங்களில் 15க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரிய வருகிறது.

மேலும் வசந்த் என்பவர் தனது வங்கி கணக்கை வாடகைக்கு விட்டும் அஜல் என்பவர் கமிஷன் ஏஜென்ட் ஆகவும் ஜனகன் என்பவர் வங்கிக்கணக்கு மற்றும் சிம்கார்டுகளை பெற்றுத்தரும் புரோக்கர் ஆகவும் பரத் என்பவர் பொதுமக்களிடம் ஆதார் கார்டுகளை பெற்று அவர்களது அனுமதி இல்லாமல் பயன்படுத்தி 250க்கும் மேற்பட்ட சிம்காரர்களை குற்ற செயல்களுக்கு பயன்படுத்தியதும் உதயகுமார் என்பவர் ஆன்லைன் கேம் மூலம் பணம் பெறுவது தொடர்பாக பிலிப்பைன்ஸ் சார்ந்த நிறுவனத்தில் பணி புரிந்து பிறகு இந்தியா வந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் வங்கி கணக்குகளை வெளிநாட்டு நபர்களுக்கு மோசடிக்காக பயன்படுத்த அனுப்பும் ஏஜெண்டாக செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வருகிறது உதயகுமாருக்கு சென்னை மத்திய பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.

 மேலும் இவர்களுடன் சேர்ந்த கூட்டாளிகளை கைது செய்யவும் வேறு நபர்கள் யாரேனும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறியவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சனி, 11 ஜூலை, 2026

நாங்க என்ன துபாய்க்கா போறோம்... பக்கத்துல தானே போறோம்....” ; கோவையில் ஓலா ஆட்டோ ஓட்டுநர் அராஜகம் - நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் வாக்குவாதம் – வைரல் வீடியோ !!!

நாங்க என்ன துபாய்க்கா போறோம்... பக்கத்துல தானே போறோம்....” ; கோவையில் ஓலா ஆட்டோ ஓட்டுநர் அராஜகம் - நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் வாக்குவாதம் – வைரல் வீடியோ !!!

 நாங்க என்ன துபாய்க்கா போறோம்... பக்கத்துல தானே போறோம்....” ; கோவையில் ஓலா ஆட்டோ ஓட்டுநர் அராஜகம் - நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் வாக்குவாதம் – வைரல் வீடியோ !!!

 கோவையில் ஆன்லைன் ஆப் மூலம் புக் செய்யப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் கேட்டு, குடும்பத்தினரைத் தாக்கிய ஓலா (OLA) ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் துணிச்சலாகத் தட்டிக்கேட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புக் செய்த ஒரு ஆட்டோ... வந்த மற்றொரு ஆட்டோ:

கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் இருந்து பூசாரிபாளையம் பகுதிக்குச் செல்வதற்காகக் கைக்குழந்தையுடன் வந்த ஒரு குடும்பத்தினர், தங்களது மொபைல் போனில் ஓலா ஆப் மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்து உள்ளனர்.

அப்போது, முதலில் இவர்களது சவாரியை ஏற்றுக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் திடீரென அதனை ரத்து செய்து உள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக அதே இடத்திற்கு மற்றொரு ஓலா ஆட்டோ ஓட்டுநர் வந்து, “நான் தான் உங்களை அழைத்துச் செல்ல வந்தேன், ஏறுங்கள்” எனக் கூறி அக்குடும்பத்தினரை ஏற்றி உள்ளார்.

ஆட்டோ சிறிது தூரம் சென்றதும், ஓலாவில் காட்டிய அசல் கட்டணத் தொகையான 150 ரூபாய்க்குப் பதிலாக, தனக்கு இரட்டிப்பாக 300 ரூபாய் தர வேண்டும் என ஓட்டுநர் கறாராகக் கேட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், “ஏன் இவ்வளவு கூடுதல் கட்டணம் கேட்கிறீர்கள்?” என நியாயமாகக் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதற்கு அந்தப் பெண்ணின் கணவர், “நாங்க என்ன இங்கு இருந்து துபாய்க்கா போறோம்... பக்கத்துல இருக்குற பூசாரிபாளையத்துக்குத் தானே போறோம் ? இதுக்கு எதுக்கு டபுள் மடங்கு காசு கேக்குறீங்க ?” என்று எதார்த்தமாகக் கேட்டு உள்ளார். 

இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த நபரை நடுரோட்டிலேயே தகாத வார்த்தைகளால் திட்டி, திடீரெனக் கைகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தனது கணவனை ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதைக் கண்டு கொதித்தெழுந்த அந்தப் பெண், கையில் தனது பச்சிளம் குழந்தையை வைத்து இருந்ததையும் பொருட்படுத்தாமல், உடனடியாக நடுரோட்டில் இறங்கி ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து விஸ்வரூப வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

“கையில குழந்தையை வெச்சிருக்கோம்னு கூட பார்க்காம எப்படி என் புருஷனை அடிக்கலாம்? ஆப்ல காட்டுற காசை விட ஏண்டா எக்ஸ்ட்ரா கேக்குறீங்க ?” என அந்தப் பெண் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்ப, அங்கு இருந்த பொதுமக்கள் ஓடிவந்து இரு தரப்பையும் தடுத்து நிறுத்தினர்.

 நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், அங்கு இருந்து அவசர அவசரமாகத் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆனார்.

நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரின் அராஜகத்தை எதிர்த்துப் போராடிய இந்தக் காட்சிகளை, அங்கு இருந்த பொதுமக்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

 தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

“கோவையில் சமீபகாலமாக ஓலா, ரேபிடோ, ஊபர் போன்ற ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் கேட்டுப் பொதுமக்களை மிரட்டுவதும், தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

 போக்குவரத்து போலீஸாரும், ஆர்.டி.ஓ அதிகாரிகளும் இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என கோவை மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

தமிழக - கேரளா எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் ஆவணமற்ற 700 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் ; வருமான வரித் துறையிடம் ஒப்படைத்த காவல்துறையினர் !!!

தமிழக - கேரளா எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் ஆவணமற்ற 700 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் ; வருமான வரித் துறையிடம் ஒப்படைத்த காவல்துறையினர் !!!

 தமிழக - கேரளா எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் ஆவணமற்ற 700 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் ; வருமான வரித் துறையிடம் ஒப்படைத்த காவல்துறையினர் !!!

கோவை மாவட்டம், பேரூர் துணைப் பிரிவில் உள்ள கே.ஜி. சாவடி காவல் நிலைய எல்லைக்கு உடட்பட்ட வாளையார் சோதனைச் சாவடியில், நடத்தப்பட்ட வழக்கமான வாகனச் சோதனையின் போது, பாலக்காட்டில் இருந்து கோவைக்கு சென்று கொண்டு இருந்த கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (KSRTC) பேருந்து ஒன்றை காவல்துறையினர் இடைமறித்தனர்.

பின்னர் நடத்திய சோதனையின் போது, கேரளா, திருச்சூர் மாவட்டம், வரவூர், கொட்டுப்புரத்துவில் வசிக்கும் அபுபக்கரின் மகன் முகமது (65) என்பவரிடம், சுமார் 700 கிராம் எடை உள்ள மூன்று உருக்கிய தங்கக் கட்டிகளும், இரண்டு தங்க வளையல்களும் இருப்பது கண்டறியப்பட்டது. 

அந்தத் தங்கப் பொருட்கள் ஒரு வெள்ளை உறையில் சுற்றப்பட்டு அவரது சட்டைப்பையில் வைக்கப்பட்டு இருந்தன.

 முதற்கட்ட விசாரணையில், முகமதுவின் மகன் நஜ்முதீன் (35), கேரளாவின் திருச்சூரில் ஒரு சிறிய நகை பட்டறையை நடத்தி வருவதும், அந்தப் பட்டறையில் உருக்கப்பட்ட பழைய நகைகளை கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படும் தங்கப் பொருட்களும் தெரியவந்து உள்ளது.

தங்கப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான சரியான ஆவணங்களை அந்த நபர் சமர்ப்பிக்கத் தவறியதால், மேலும் விசாரணைக்காக காவல் துறையினர் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

 அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வருமான வரித்துறை ஆய்வாளர் சத்யராஜிடம் ஒப்படைக்கப்பட்டன.

தீவிரப்படுத்தப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கைகளின் போது, மதுக்கரை காவல் நிலையத்தின் உதவி சுரேஷ் மற்றும் வளையார் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறைக் குழுவினரால் இந்தப் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 9 ஜூலை, 2026

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு !!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு !!!

 ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு !!!

ஓணம் திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் முதல் மதுரை வழியாக கேரளம் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு செல்லும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

ஓணம் பண்டிகை, கேரளம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். அதன்படி, இந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 29 வரை ஓணம் திருவிழா கேரள மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் வரை சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

அதன்படி, ஓணம் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலை சமாளிப்பதற்கும், திருவனந்தபுரம் சென்ட்ரல் - தாம்பரம் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06110) அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆம் தேதிகளில் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும், பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் வியாழக் கிழமைகளில் காலை 10 மணி அளவில் தாம்பரம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06109) தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3ஆம் தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பிற்பகல் 2 மணி அளவில் புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும்.

இந்த ரயில்களில் இரண்டடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 2, மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டிகள் 8, படுக்கை வசதி கொண்ட 2ஆம் வகுப்புப் பெட்டிகள் 6, பொதுப்பெட்டிகள் மற்றும் சரக்குப் பெட்டிகள் 6 என மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இரு மார்க்கங்களிலும் மேற்கண்ட ரயில்கள் வர்கலா, கொல்லம், கொட்டாரக்கரா, அவுனேஸ்வரம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவுகள் இன்று (ஜூலை 9) காலை 8 மணி அளவில் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 'நம்பிக்கைக்குரிய நண்பர்கள்' - பிரதமர் மோடி பெருமிதம் !!!

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 'நம்பிக்கைக்குரிய நண்பர்கள்' - பிரதமர் மோடி பெருமிதம் !!!

 இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 'நம்பிக்கைக்குரிய நண்பர்கள்' - பிரதமர் மோடி பெருமிதம் !!!

இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் நம்பிக்கைக்குரிய நண்பர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இந்தோனேசியா சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது 3 நாடுகள் பயணத்தின் அடுத்த கட்டமாக நேற்று ஆஸ்திரேலியா வந்தடைந்தார். அவருக்கு ஆஸ்திரேலிய அரசு மற்றும் புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா - இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை சந்தித்துப் பேசினார்.

இந்த உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மெல்போர்னில் நடைபெற்ற 'இந்தியா-ஆஸ்திரேலியா சிஇஓ மன்றம்' மற்றும் பொருளாதார மன்ற கூட்டத்தில் இரு தலைவர்களும் இணைந்து பங்கேற்றனர்.

சி.இ.ஓ என அழைக்கப்படும் தொழிலதிபர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "தற்போது உலகம் ஒரு இக்கட்டான காலக்கட்டத்தை எதிர் கொண்டு வருகிறது. உலகெங்கும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் நிலவுவதுடன், விநியோகத் தொடர் பாதிப்புகள் மற்றும் கடுமையான எரிசக்தி நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளன. இத்தகைய சூழலில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தங்களின் பலத்தை ஒன்றிணைத்து, நம்பிக்கைக்குரிய கூட்டாளிகளாக இணைந்து முன்னோக்கி செல்வது இயற்கையானதும், காலத்தின் கட்டாயமுமாகும்" என்றார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் வெற்றியை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி இரு மடங்காக அதிகரித்து உள்ளதுடன் இரு நாட்டு நிறுவனங்களும் பெரும் பயன் அடைந்து உள்ளன என்றும் அவர் கூறினார்.

இதன் அடுத்த கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்ல ‘விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம்’ நோக்கிய பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆஸ்திரேலியாவின் நவீன தொழில்நுட்பங்கள் பெருமளவில் உதவும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். குறிப்பாக, 2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனையும், 2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனையும் எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இந்த அணுசக்தித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த ஆஸ்திரேலியாவின் யுரேனியம் இந்தியாவுக்கு மிகவும் இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி, ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இரு நாட்டு பிரதமர்களின் சந்திப்பில் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், கல்வி மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டுவதில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான விரிவான ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதி அளித்தார்.

இந்தோனேசிய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு, மெல்போர்னில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு உள்ள விக்டோரியா அரசு மாளிகையில் ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டினையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

இதற்கு இடையே மெல்போர்னில் உள்ள இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்து இருந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். அங்கு ஆஸ்திரேலியக் கலைஞர்கள் ஆடிய கதக் உள்ளிட்ட இந்தியப் பாரம்பரிய நடனங்களை ரசித்த பிரதமர் மோடி, "இந்திய நடனக் கலைகள் ஆஸ்திரேலியா முழுவதும் பிரபலம் அடைந்து வருவதைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது" எனத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

ஆஸ்திரேலியப் பயணத்தை நிறைவு செய்த பிறகு பிரதமர் மோடி நியூசிலாந்து நாட்டிற்குச் செல்ல உள்ளார்.

ஞாயிறு, 5 ஜூலை, 2026

விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் 6 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் மாயமான இரண்டு வியாபாரிகள் கைது !!!

விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் 6 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் மாயமான இரண்டு வியாபாரிகள் கைது !!!

 விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் 6 கோடி தங்கம், வெள்ளி கட்டிகளுடன் மாயமான இரண்டு வியாபாரிகள் கைது !!!

கோவையில் விற்பனை செய்து தருவதாக வாங்கிய ரூபாய் ஆறு கோடி தங்கம், வெள்ளிக் கட்டிகளுடன் மாயமான வியாபாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகரப் பகுதியில் ஏராளமான நகை பட்டறைகள் உள்ளன. இங்கு தங்க கட்டிகளை வாங்கி நகையாக செய்து வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர்.

 இந்நிலையில் கோவை பெரிய கடை வீதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் அம்பாலால் சோனி, பிரதீப் குமார் சிமன் லால் சோனி ஆகியோர் சேர்ந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகளை விற்பனை செய்யும் மையத்தை தொடங்கினர்.

பின்னர் அவர்கள் கோவையில் உள்ள நகை வியாபாரிகளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் அவர்களிடம் வியாபாரிகள் பலர் தங்க, வெள்ளி கட்டிகளை விற்பனை செய்வதற்காக கொடுத்தனர். அதன்படி அவர்கள் இரண்டு பேரும் வியாபாரிகளிடம் இருந்து 4 கிலோ தங்க கட்டிகள், 6 கிலோ வெள்ளி கட்டிகளை விற்பனை செய்து தருவதாக வாங்கினர். இதை அடுத்து அவர்கள் இரண்டு பேரும் நடத்தி வந்த மையம் பூட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் விசாரித்த போது அவர்கள் இரண்டு பேரும் தங்க, வெள்ளி கட்டிகளுடன் மாயமானது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூபாய் 6 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அடுத்து தங்க, வெள்ளி கட்டிகளுடன் மாயமான விஜய் அம்பாலால் சோனி, பிரதீப் குமார் சிமன் லால் சோனி ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் செல்போன் எண்களை வைத்து விசாரணை தீவிர படுத்தினர். இதில் கோவையில் உள்ள ஒரு வீட்டில் விஜய் அம்பாலால் சோனி, பிரதீப் குமார் சிமன் லால் சோனி ஆகிய இரண்டு பேரும் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே அவர்கள் இரண்டு பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்கள் 4 கிலோ தங்க கட்டிகள் ஆறு கிலோ வெள்ளிக் கட்டியை யாரிடம் கொடுத்தனர். இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

சனி, 4 ஜூலை, 2026

கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் - அமைச்சர் கீர்த்தனா உறுதி !!!

கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் - அமைச்சர் கீர்த்தனா உறுதி !!!

 கோவையில் செமி கண்டெக்டர் பூங்கா வருவது நிச்சயம் - அமைச்சர் கீர்த்தனா உறுதி !!!

மத்திய அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு, கோவைக்கு செமி கண்டெக்டர் பூங்கா கொண்டு வரப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்து உள்ளார்.

அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தென்னிந்திய மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இந்திய தொழில் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தொழில்துறையின் தற்போதைய நிலை, வளர்ச்சிக்கான திட்டங்கள், இரு மாநிலங்கள் சேர்ந்து எவற்றில் கவனம் செலுத்துவது என்பன குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா, 

”இதில் பங்கேற்ற தொழில்துறையினர் அடிப்படை வசதிகள் வேண்டுமென்று கேட்டுக் கொண்டு உள்ளனர். எடுத்துக் காட்டாக சிப்காட் தொழிற்சாலை அமைக்கும் பட்சத்தில் அதற்கான சாலை வசதிகள், மின்சார வசதிகள், தண்ணீர் வசதிகள் ஆகியவை வேண்டும். அந்த வகையில் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் அரசாகவும், வெளிப்படையான அரசாகவும் த.வெ.க விளங்கும் என்று உறுதி அளித்து உள்ளோம்," என்றார்.

மேலும் பேசிய அவர், "கோயம்புத்தூரை பொறுத்தவரை விமான நிலையம் விரிவாக்கம் என்பது தொழில் துறையினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டு உள்ளது, இம்முறை கண்டிப்பாக கோயம்புத்தூர் விமான நிலையம் விரிவாக்கம் நடைபெறும்” என்றார்.

சோலார் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, ”கருவேலமரங்கள் உள்ள இடங்களில் சோலார் அமைத்தால் பயன் உள்ளதாக இருக்கும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

தமிழ்நாட்டில் மட்டும் சோலாருக்கு 1% கட்டணம் வாங்கப்படுவது குறித்த கேள்விக்கு, ”அந்த துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பதிலளித்தார்.

சிறு, குறு, தொழில் மேம்பாடு குறித்த கேள்விக்கு, “சிறு, குறு தொழில் மேம்பாட்டிற்கு தனி கமிட்டி அமைக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில்,

 "கடந்த காலங்களை போல் அல்லாமல், 100% புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் செயல்படுத்த வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம். புரிந்துணர்வு கையெழுத்தை வெறும் பேப்பரில் போட்டு விட்டு வந்து விடக் கூடாது. இங்கு உள்ள இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லாமல் தமிழ்நாட்டில் தொழில் செய்ய வேண்டும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

கோயம்புத்தூரில் வர வேண்டிய செமி கண்டெக்டர் பூங்கா குஜராத்திற்கு சென்றுவிட்டதா? மத்திய அரசுடன் இணைந்து எவ்வாறு அதனை கொண்டு வரப் போகிறீர்கள்? என்ற கேள்விக்கு, ”மத்திய அரசு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறோம். கண்டிப்பாக கோயம்புத்தூருக்கு செமி கண்டெக்டர் பூங்கா கொண்டு வரப்படும்” என்று அமைச்சர் பதில் அளித்தார்.