குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

அரசு அலுவலகங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் ; அமெரிக்காவில் பணியாற்றிய நெல்லை என்ஜினீயர் கைது!

விசாரணை முடிந்த பின் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைப்பு!

 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்குத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அமெரிக்காவில் பணியாற்றிய என்ஜினீயரைக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை முடிந்த பின்பு சிறையில் அடைப்பு

கோவை மாநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், முதன்மைத் தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்குக் கடந்த சில நாட்களாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு மற்றும் மோப்ப நாய் படை போலீசார் அங்குச் சென்று தீவிர சோதனை மேற் கொண்ட போது, அது வெறும் போலி மிரட்டல் (Hoax Threat) என்பது தெரியவந்தது. இது குறித்துக் கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதே பாணியில் தமிழகம் முழுவதும் உள்ள பல முக்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இது தொடர்பாகச் சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் தீவிர தொழில்நுட்ப விசாரணை மேற்கொண்டனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சரத் சுப்பிரமணியம் சங்கர் என்பதும், இவர் அமெரிக்காவில் மென்பொருள் என்ஜினீயராக (Software Engineer) பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

 இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து அண்மையில் சென்னை திரும்பிய சரத் சுப்பிரமணியம் சங்கரைச் சென்னை போலீசார் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாநகரில் மட்டும் இவருக்கு எதிராகத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 3 சைபர் கிரைம் வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்குச் சென்ற கோவை மாநகர சைபர் கிரைம் தனிப்படை போலீசார், சரத் சுப்பிரமணியம் சங்கரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர்.

 இச்சம்பவம் அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 9 செப்டம்பர், 2026

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

"விமான நிலையப் பின்பகுதியில் கெமிக்கல் கழிவுகள் வீச்சு" ; வழுக்கி விழுந்து படுகாயமடையும் வாகன ஓட்டிகள் -கோவையில் பரபரப்பு!

இரசாயனத்தை அப்புறப்படுத்தவும், வீசிச் சென்ற மர்ம நபர்களைக் கைது செய்யவும் பொதுமக்கள் கொந்தளிப்பு!

​கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் உள்ள மண் சாலையில் மர்ம நபர்கள் கழிவு கெமிக்கல் பாக்கெட்டுகளை வீசிச் சென்றதால், அவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினசரி பயன்படுத்தும் மண் சாலை உள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அப்பகுதியில் ஆபத்தான கெமிக்கல் பாக்கெட்டுகளைச் சாலையில் கொட்டி விட்டுத் தப்பிச் சென்று உள்ளனர்.

​அந்தப் பாக்கெட்டுகளில் இருந்து இரசாயனக் திரவம் கசிந்து சாலை முழுவதிலும் பரவியதால், மண் சாலை முற்றிலும் வழவழப்பாக மாறி உள்ளது.

இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் பலர், சாலையில் கெமிக்கல் கொட்டப்பட்டு இருப்பதை அறியாமல் சென்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வழுக்கி விழுந்தனர். இதில் பலருக்குக் கை, கால்களில் படுகாயங்கள் ஏற்பட்டு உள்ளன.

​தொடர்ந்து அடுத்தடுத்து வாகனங்கள் வழுக்கி விழுவதைக் கண்ட அப்பகுதி வாசிகள் உடனடியாக ஓடிவந்து காயம் அடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

 ஆபத்தான முறையில் கெமிக்கலைச் சாலையில் கொட்டிச் சென்ற நபரைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

​மேலும், அந்த மண் சாலையில் பரவி உள்ள இரசாயனக் கழிவுகளைத் மாநகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 நகரின் பாதுகாப்பு மண்டலமான விமான நிலையப் பகுதியிலேயே கெமிக்கல் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 "உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

"உருவக்கேலி செய்ததால் ஆத்திரம்" ; கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

ஈ-காமர்ஸ் நிறுவன ஊழியர்கள் இடையே போதையில் மோதல்: தப்பியோடிய முதன்மை குற்றவாளிக்குச் சூலூர் போலீஸ் வலை!

 கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வெற்றுச் செங்கல் கொட்டகை ஒன்றில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 விசாரணையில், இறந்து கிடந்தவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பிரபல ஈ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனத்தின் கிடங்கில் (Warehouse) பணியாற்றி வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த ராஜன் எ (எ) ராமேஸ்வர் சா என்பது தெரியவந்தது.

இக்கொலை சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடன் பணி புரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜனின் உடல் தோற்றத்தைக் குறித்து அவருடன் பணி புரியும் சக ஊழியரான ஜெகதீஷ் என்பவர் அடிக்கடி கேலி செய்து வந்ததும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததும் அம்பலமானது.

கடந்த 5-ஆம் தேதி இரவு, ராஜன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். அப்போது, அவரைத் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோ ஆகியோர் அழைத்துச் சென்று உள்ளனர்.

செங்கல் கொட்டகை அருகே சென்ற போது, உருவக்கேலி தொடர்பாக ராஜனுக்கும், ஜெகதீஷுக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ், அங்கு இருந்த செங்கல்லை எடுத்து ராஜனின் தலையில் சரமாரியாகத் தாக்கி உள்ளார். 

இதில் பலத்த காயம் அடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு மத்தயாஸ் மல்டோ முழுமையாக உடந்தையாக இருந்து உள்ளார்.

இதை அடுத்து தலைமறைவாக முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோவைச் சூலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளியான ஜெகதீஷைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

கோவையில் போதை மாத்திரைகள் & கஞ்சா பறிமுதல்" ; 2 வாலிபர்களைப் பிடித்துப் கைது செய்த போலீசார்!

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற அம்பலம் : 400 'டைடால்' மாத்திரைகள் மற்றும் மொபைல்கள் பறிமுதல்!

 கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே நரசிம்மநாயக்கன்பாளையத்தில் சட்ட விரோதமாகப் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களைப் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் கையும், களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நமச்சிவாயம் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், நரசிம்மநாயக்கன்பாளையம் பகவான் கார்டன் பகுதியில் உள்ள செல்வமாரியம்மன் கோவில் அருகே உள்ள வாட்டர் டேங்க் பகுதியில் போலீசார் தீவிரக் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று இருந்த இரு வாலிபர்கள், போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட நபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், நரசிம்மநாயக்கன்பாளையம், குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தஆனந்தகுமார் (23), புதுப்பாளையம் ரோடு, அங்காளம்மன் நகரைச் சேர்ந்த கௌசிகன் (26) எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களைச் சோதனை செய்த போது, ஆனந்தகுமாரின் பேண்ட் பாக்கெட்டில் ஜிப்லாக் கவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 400 ஆரஞ்சு நிற 'டைடால்' (Tydol) போதை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோல, கௌசிகனின் பாக்கெட்டில் 120 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுக்குத் தெரிந்த நண்பர்களுக்கும், அப்பகுதியில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் அதிக விலைக்குச் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது அம்பலமானது.

இதை அடுத்து, 400 டைடால் மாத்திரைகள், 120 கிராம் கஞ்சா மற்றும் அவர்களிடம் இருந்த Vivo Y39, Samsung ஆகிய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண்!" - ஜே.சி.பி இயந்திரம் மூலம் அதிரடி மீட்பு: கோவையில் பரபரப்பு வீடியோ!

வடவள்ளி மருதமலை சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: உயிர்த்தப்பிய அதிர்ஷ்டசாலி!

 கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள சாக்கடை பணிக்காகத் தோண்டப்பட்ட பெரிய குழிக்குள் இருசக்கர வாகனத்துடன் இளம் பெண் ஒருவர் தவறி விழுந்த நிலையில், ஜேசிபி (JCB) இயந்திர உதவியுடன் மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகப் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.

 இந்நிலையில், அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண் ஒருவர் சென்று கொண்டு இருந்தார்.

​போதுமான பாதுகாப்பு எச்சரிக்கைக் பலகைகளோ அல்லது தடுப்புகளோ முறையாக அமைக்கப்படாததால், எதிர்பாராத விதமாக அந்த இளம் பெண் தனது இருசக்கர வாகனத்துடன் சாலையில் தோண்டப்பட்டு இருந்த ஆழமான பாதாள சாக்கடை குழிக்குள் தலைகுப்புற விழுந்தார்.

 திடீரென நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழிக்குள் விழுந்த இளம் பெண் வெளியே வர முடியாமல் தவித்ததைக் கண்ட அப்பகுதி பொதுமக்களும், மீட்புப் பணியாளர்களும் உடனடியாக அங்குத் திரண்டனர்.

​தொடர்ந்து, அருகில் அந்தப் பணிக்காக நின்று இருந்த ஜேசிபி (JCB) இயந்திரத்தின் உதவியுடன் அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

 நல்வாய்ப்பாகப் பெரிய காயங்கள் ஏதுமின்றி அப்பெண் உயிர் தப்பினார்.

நகரின் முக்கியப் பகுதியான மருதமலை சாலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, ஒளிரும் பட்டைகளோ இன்றி ஆபத்தான முறையில் தோண்டப்பட்டு உள்ள குழிகளால் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.


​இரவு நேரங்களில் இதுபோன்று குழிகள் தெரிவதில்லை எனவும், மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு முக்கியக் காரணம் எனவும் கூறி அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் ஆத்திரம் வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 "ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசுப் பேருந்து" ; நெஞ்சைப் பதறவைக்கும் கேரள நபரின் வைரல் வீடியோ!

"ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி சீறிப் பாய்ந்த தமிழக அரசுப் பேருந்து" ; நெஞ்சைப் பதறவைக்கும் கேரள நபரின் வைரல் வீடியோ!

பொள்ளாச்சியில் இருந்து மன்னார்காட் செல்லும் பஸ்சுக்கு என்ன ஆச்சு? ஆபத்தான பயணத்தால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள்!

​கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து ஆனைக்கட்டி வழியாகக் கேரள மாநிலம் மன்னார்காட் செல்லும் தமிழக அரசுப் பேருந்து ஒன்று, ஒரு புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியே அதிவேகமாகச் சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து கேரளா மாநிலம் மன்னார்காட்டிற்கு ஆனைக்கட்டி வழியாகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (TNSTC) ஒன்று இயங்கி வருகிறது.

​இந்நிலையில், ஆனைக்கட்டி பாதையில் கோவை நோக்கிச் சென்று கொண்டு இருந்த இந்தப் பேருந்து, சமநிலையை இழந்து இடது அல்லது வலது புறமாக ஆபத்தான முறையில் சாய்ந்தபடியும், சாலையின் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டும் சென்று உள்ளது. பேருந்தில் பயணிகள் இருந்த நிலையிலும், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் செலுத்தி உள்ளார்.

அந்தச் சமயத்தில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இந்த ஆபத்தான பயணத் தனது செல்போனில் வீடியோவாகப் படம்பிடித்து உள்ளார்.

அவர் தனது வீடியோவில் பேசும்போது ....

 "ஆனைக்கட்டியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் தான் இந்தப் பேருந்தைப் பார்த்தேன். பேருந்து மிகவும் அதிவேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது. ஆனால், பஸ்ஸுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல, ஒரு பக்கமாக முற்றிலும் சாய்ந்து போய்க் கொண்டு இருக்கிறது. இந்த ஆபத்தான நிலையிலும் பஸ் தொடர்ந்து ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது, எங்குமே வண்டியை நிறுத்தி என்ன பிரச்சனை என்று கூடப் பார்க்கவில்லை" எனப் புலம்பியபடி பதிவிட்டு உள்ளார்.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி, பொதுமக்கள் இடையே பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது.

​பேருந்தின் 'ஏர் ஸ்ப்ரிங்'  பழுது காரணமாகவோ அல்லது 'சாஃப்ட் ஆக்சில்' முறிவு காரணமாகவோ பேருந்து இவ்வாறு சாய்ந்து இருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. பயணிகளின் உயிரோடு விளையாடும் வகையில் பழுதுடைந்த நிலையிலும் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் பராமரிப்பைப் புறக்கணித்த போக்குவரத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 "பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

"பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

உரிய சான்றிதழ் இல்லாமல் இயங்கிய டேக் அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி பள்ளி - பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு!

 கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில், பணிகள் நிறைவடையாத புதிய கட்டிடத்தில் மாணவியை அமர வைத்ததில் 'பால் சீலிங்' (False Ceiling) பெயர்ந்து தலையில் விழுந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதைக் கண்டித்து நூற்றுக் கணக்கான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியில் பிரபல ‘டேக் அக்ஷயா அகாடமி’ (TAG Akshaya Academy) சி.பி.எஸ்.சி பள்ளி இயங்கி வருகிறது. கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இயங்கி வரும் பள்ளி வளாகத்தின் அருகே சுமார் 30,000 சதுர அடியில், 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நீரோடைப் பள்ளத்தின் ஓரத்தில், சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டப்படாத இந்த புதிய கட்டிடத்தில், விஜயதசமி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கேஜி மாணவர்களை அமர வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதைக் கண்டித்துப் கடந்த வாரம் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, பழைய கட்டிடத்திற்கு மாணவர்களை மாற்றுவதாகவும் 3 நாட்களில் பணிகளை முடிப்பதாகவும் நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால், பணிகள் முடியாத நிலையிலேயே மீண்டும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களை அந்த ஆபத்தான புதிய கட்டிடத்திற்கு மாற்றி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று புதிய கட்டிடத்தில் கழிவறைக்குச் சென்ற மாணவி ஒருவரின் தலையில், மேல் இருந்த பால் சீலிங் (False Ceiling) திடீரென கழன்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அம்மாணவி காயமின்றித் தப்பினார்.

இந்தத் தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், இன்று காலை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு முதன்மை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பெற்றோர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் நிர்வாகத்தினர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

கட்டிட அனுமதி (Building Approval) மற்றும் பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) பெறாமலேயே மாணவர்களை ஆபத்தான கட்டிடத்தில் அமர வைத்து உள்ளனர்.

வகுப்பறைகளில் உடையும் நிலையில் உள்ள டைல்ஸ்கள், இயங்காத மின்விசிறிகள் மற்றும் சிமெண்ட் தூசியால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

முழு கட்டிடத்திற்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதால், நீண்ட வரிசையில் நின்று மதிய உணவைக் கூடச் சாப்பிட முடியாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

ஆய்வகம் (Lab), கணினி மையம், நூலகம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

தட்டிக் கேட்டால் 'டிசி' (TC) வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள் எனப் பள்ளி நிர்வாகம் மிரட்டுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார், பெற்றோர்களுடன் இணைந்து புதிய கட்டிட நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பள்ளி நிர்வாகத்திடம், "அனைத்துப் பணிகளையும் 10 நாட்களுக்குள் முழுமையாக முடித்து, முறையான பணி நிறைவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே புதிய கட்டிடத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அதுவரை பழைய கட்டிடத்திலேயே மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.

காவல்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

ஒரே ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு அபராதம் !

ஒரே ஸ்கூட்டரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கல்லூரி மாணவிகள் 4 பேருக்கு அபராதம் !

கோவை, அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவிகள் 4 பேர் ஒரே ஸ்கூட்டரில் சென்றனர்.

அப்பொழுது அவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை, அத்துடன் அவர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எனவே போக்குவரத்து விதிகளை மீறிய அந்த மாணவிகள் மீது காவல் துறையினர் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து பீளமேடு போக்குவரத்து போலீசார் அந்த மாணவிகள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் ஒரு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக ஒரே ஸ்கூட்டரில் நான்கு பேர் சென்றதும் தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்கள் போக்குவரத்து விதியை மீறியதால் அந்த நான்கு பேருக்கும் தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அந்த மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

"கோவையில் 11 to 11 பாரில் மதுப்பிரியர்கள் பயங்கர மோதல்" ; பீர் பாட்டில்களால் தாக்கி முரட்டு சண்டை: செல்போன் வீடியோ இணையத்தில் வைரல்!

தண்ணீர் பந்தல் சாலையில் அரங்கேறிய நடுரோட்டு அதிரடி: பொதுமக்கள் அச்சம், சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறி!

​ கோவை, பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் இயங்கி வரும் '11 to 11' பாரில் மதுப்பிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட திடீர் தகராறு, ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி கொள்ளும் வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, பீளமேடு பகுதிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலையில் பிரபல ‘11 to 11’ மதுபானக் கூடம் (Bar) செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு மது அருந்த வந்த சில நபர்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.

​மது போதை தலைக்கேறிய நிலையில், தகராறு முற்றிப் பாரின் உள்ளேயும், வெளியேயும் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

 ஆத்திரம் அடைந்த நபர்கள் அங்கு இருந்த நாற்காலிகள் மற்றும் பாட்டில்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கி உள்ளனர்.

பாரில் இருந்த மற்ற வாடிக்கையாளர்களும்,  அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த பயங்கர மோதலை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்து உள்ளார்.

​தற்போது அந்தச் செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

 அந்த வீடியோவில், மதுப்பிரியர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கும் கொடூரக் காட்சிகள் பதிவாகி உள்ளன.

​ இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மதுபானக் கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

திங்கள், 7 செப்டம்பர், 2026

 "கோவையில் ஆடிட்டர் வீட்டில் பல லட்சம் வெள்ளி, ரொக்கம் திருட்டு" ; ஒரே வாரத்தில் கொள்ளையனைக் கூண்டோடு தூக்கிய கோவை தனிப்படை போலீஸ்!

"கோவையில் ஆடிட்டர் வீட்டில் பல லட்சம் வெள்ளி, ரொக்கம் திருட்டு" ; ஒரே வாரத்தில் கொள்ளையனைக் கூண்டோடு தூக்கிய கோவை தனிப்படை போலீஸ்!

பூஜை அறை, பீரோவை உடைத்துக் கைவரிசை காட்டிய நபர்கள் கைது: ரூ.3.30 லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் மீட்பு!

​ கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரை, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒரே வாரத்தில் கோவை மாநகரக் காவல் துறையினர் கைது செய்து பொருட்களையும் மீட்டு உள்ளனர்.

கோவை மாநகரம், B2 R.S.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெங்கடாசலம் காலனி, ராபர்ட்சன் ரோட்டைச் சேர்ந்தவர் வி.ஆர்.சூரியநாராயணன் (76). ஆடிட்டராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

​கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி இரவு, இவரது மகன் வெளியூர் சென்று இருந்த நிலையில், ஆடிட்டர் சூரியநாராயணன் தனது மனைவியுடன் தரைத்தள படுக்கை அறையிலும், அவரது மருமகள் மற்றும் பேத்தி முதல் தளத்திலும் தூங்கச் சென்று உள்ளனர். வீட்டின் இருபுற கதவுகளையும் உள்புறமாகத் தாளிட்டு உறங்கச் சென்றனர்.

​மறுநாள் காலை (செப்டம்பர் 1) வழக்கம் போல் எழுந்து வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, ஹாலை ஒட்டி இருந்த பூஜை அறை மற்றும் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.

​அங்கு இருந்த வாட்ரோப்பில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளி குத்துவிளக்குகள், சிறிய வெள்ளி விளக்குகள், வெள்ளி டம்ளர்கள், கிண்ணங்கள் மற்றும் சிறிய இரும்பு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரொக்கப் பணம் ரூ.40,000/- மற்றும் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த அபூர்வ பழைய நாணயங்கள் அனைத்தும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆடிட்டர் சூரியநாராயணன் அளித்த புகாரின் பேரில், B2 R.S.புரம் புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

​சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் தெற்குப் பகுதி காவல் துணை ஆணையர் ஆகியோரின் நேரடி உத்தரவின் பேரில், குற்றவாளியைப் பிடிக்கச் சிறப்புத் தனிப்படை அமைக்கப்பட்டது.

 தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் தீவிர அறிவியல் பூர்வமான தடய சேகரிப்பு மற்றும் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

​விசாரணையின் முடிவில், இந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளி குணசீலன் (54), என்பவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

கைதான குணசீலன் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆடிட்டர் வீட்டில் திருடப்பட்ட ரூ.3,00,000/- மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.30,00,0/- ரொக்கப் பணத்தை B2 ஆர்.எஸ்.புரம் தனிப்படை போலீசார் பத்திரமாகக் கைப்பற்றினர்.

​தொடர்ந்து குற்றவாளி குணசீலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

 "பவானி ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்" ;  பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக மீட்பு: அட்டப்பாடியில் கொடூரம்!

"பவானி ஆற்றில் மிதந்த சாக்கு மூட்டைகள்" ; பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக மீட்பு: அட்டப்பாடியில் கொடூரம்!

திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா? புதூர் போலீசார் தீவிர விசாரணை - கேரளா மற்றும் தமிழகத்தில் பரவும் அதிர்ச்சி!

​ கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் துண்டு துண்டாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது.

அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரக்கடவு பகுதியில், நேற்று (செப்டம்பர் 6) பவானி ஆற்றில் சில சாக்கு மூட்டைகள் மிதப்பதை அப்பகுதி மக்கள் கவனித்து உள்ளனர். அந்தச் சாக்குகளில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, சந்தேகமடைந்த பொதுமக்கள் உடனடியாகப் புதூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

​சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதூர் போலீசார் சாக்கு மூட்டைகளைக் கைப்பற்றிச் சோதனையிட்டனர். அப்போது, அதில் மனித உடல் பாகங்கள் வெட்டப்பட்டுக் கிடந்தது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​ஒரு சாக்கு மூட்டையில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் சுமார் 5 வயது மதிக்கத்தக்கச் சிறுமியின் தலைகள் இருந்தன.

​மற்றொரு சாக்கில் அந்த 5 வயது சிறுமியின் உடற்பகுதி இருந்தது.

​சம்பவ இடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் மிதந்து வந்த வேறொரு சாக்கில் அந்தப் பெண்ணின் உடற்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.

​இருவரும் உயிரிழந்து சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நீரில் நீண்ட நாட்கள் கிடந்ததால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்படுவதால், உடனடியாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

உடல் பாகங்கள் தனித்தனியாக வெட்டப்பட்டு வெவ்வேறு சாக்கு மூட்டைகளில் அடைத்து வீசப்பட்டு உள்ளதால், இது ஏதேனும் ஒரு இடத்தில் வைத்துத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரக் கொலையாக இருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். வேறு ஏதேனும் பகுதியில் வைத்து இருவரையும் கொடூரமாகக் கொலை செய்து, உடல்களைத் துண்டு துண்டாக வெட்டிச் சாக்கில் அடைத்துப் பவானி ஆற்றில் வீசிச் சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

உயிரிழந்தவர்கள் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அல்ல என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் எதுவும் பதிவாகவில்லை.

​இதனால், பவானி ஆறு பாயும் தமிழக எல்லைப் பகுதிகளான கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட காவல் நிலையங்களில் பதிவான 'காணாமல் போனோர்' (Missing Cases) புகார்களையும், கேரளா முழுவதும் பதிவான புகார்களையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் சிசிடிவி (CCTV) காட்சிகளின் உதவியுடன் புதூர் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட உடல் பாகங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

​இச்சம்பவம் தொடர்பாகப் புதூர் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து,

 உயிரிழந்தவர்கள் யார் ? கொலையாளிகள் யார் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 "தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை" ; சூலூர் அருகே முட்காட்டில் வாலிபர் நிர்வாணச் சடலமாக மீட்பு : கோவையில் பரபரப்பு!

"தலையில் கல்லை போட்டு கொடூரக் கொலை" ; சூலூர் அருகே முட்காட்டில் வாலிபர் நிர்வாணச் சடலமாக மீட்பு : கோவையில் பரபரப்பு!

கோவை சூலூரில் துணிச்சல் சம்பவம் : கொலையாளி யார் ? சூலூர் போலீசார் தீவிர விசாரணை!

 கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில், முட்காட்டிற்குள் உள்ள தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் தலையில் கல்லை போட்டுக் கொடூரமான முறையில் நிர்வாணமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் 'நந்தினி நகர்' என்ற மனைப் பிரிவு பகுதி அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக வீட்டுமனைகளாகப் பிரிக்கப்பட்டு இருந்த இந்தப் பகுதியில் எந்தக் கட்டிடங்களும் கட்டப்படாமல், அடர்த்தியான முட்காடாக மாறி உள்ளது.

​இந்தப் பகுதியில் சிங்காநல்லூரைச் சேர்ந்த குருநாதன் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அவர் அந்த இடத்தில் புதிதாகத் தகரக் கொட்டகை அமைக்கும் பணியைத் தொடங்கி, ஆரம்பக்கட்ட வேலைகளைச் செய்து வருகிறார். 

குருநாதன் வாரம் ஒருமுறை நேரில் வந்து தனது இடத்தை நேரில் பார்வையிட்டுச் செல்வது வழக்கமாகும்.

இந்நிலையில், வழக்கம் போல இன்று (செப்டம்பர் 7) காலை குருநாதன் தனது இடத்தை ஆய்வு செய்வதற்காக வந்து உள்ளார். அப்போது, தான் புதிதாக அமைத்து வரும் தகரக் கொட்டகையின் உள்ளே வாலிபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, ஆடை ஏதும் இன்றி நிர்வாண நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார்.

​அவரது தலையில் பெரிய கல்லை தூக்கிப் போட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்துக் குருநாதன் உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுச் சம்பவ இடத்தில் தீவிரத் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

​கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எதற்காக இந்த ஆள்நடமாட்டமற்ற முட்காட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டார், தகராறு காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா ? அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா ? என பல்வேறு கோணங்களில் சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

​ஆள்நடமாட்டமில்லாத முட்காட்டில் வாலிபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோவை சூலூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

 கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

கோவை, விமான நிலையம் அருகில் அமோகமாக நடக்கும் 24 மணி நேரத் தடையற்ற மது விற்பனை" ; அரசு மூடிய டாஸ்மாக் முன்பு பெட்டிக்கடையில் ரகசிய அரங்கேற்றம் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்!

குட்கா, கூலி முதல் அனைத்து மதுபானங்களும் தாராளம்!

 கோவையின் முக்கியப் பகுதியான சித்திரா விமான நிலையம் அருகில், அவிநாசி சாலையில் அரசு முத்திரையுடன் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையின் முன்புறம் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல் 24 மணி நேரமும் அனைத்து வகையான மதுபானங்களும் சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை விமான நிலையப் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் மதுக்கடை முன்பு அரசாங்கத்தால் அதிகாரப் பூர்வமாக மூடப்பட்டது. ஆனால், பொதுமக்கள் மற்றும் காவல்துறை நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலை சித்திரா விமான நிலையம் அருகிலேயே, அந்த மூடப்பட்ட கடையின் முன்புறம் அமைந்து உள்ள ஒரு பெட்டிக்கடை சட்டவிரோத மது விற்பனையின் கூடாரமாக மாறிவிட்டது.

பகல், இரவு பாராமல் 24 மணி நேரமும் அங்கு அனைத்து விதமான வெளிமாநில மற்றும் பிராண்டட் மதுபானங்கள் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.

மதுபானங்களுடன் நின்று விடாமல், தமிழக அரசால் கடுமையான சட்டங்களின் கீழ் தடை செய்யப்பட்டு உள்ள குட்கா, ஹான்ஸ், சருதா, பான் மசாலா மற்றும் 'கூலி' போன்ற பல்வேறு ஆபத்தான போதை மற்றும் புகையிலைப் பொருட்களும் இந்தப் பெட்டிக் கடையில் தாராளமாக விற்பனை செய்யப்படும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 பள்ளி, கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் இந்தப் பகுதிக்கு வந்து எளிதில் போதைப் பொருட்களை வாங்கிச் செல்வது அப்பகுதி சமூக ஆர்வலர்களைக் கவலை அடையச் செய்து உள்ளது.

சமூக விரோதச் செயல்களுக்கு வழிவகுக்கும் இந்தச் சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருள் விற்பனை குறித்துப் பொதுமக்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.

எனவே,  காவல்துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகத் சித்திரா விமான நிலையம் அருகிலுள்ள அப்பெட்டிக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு, அங்கு நடக்கும் சட்டவிரோத விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

சனி, 5 செப்டம்பர், 2026

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் ; கூலிப்படையை ஏவி தந்தை மகனை கொல்ல முயற்சி - தப்பி ஓடிய கும்பலை பிடிக்க ஆறு தனிப்படை !

சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தில் கூலிப்படையை ஏவி தந்தை, மகனை கொல்ல முயன்றது தெரியவந்து உள்ளது. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் இருந்து 10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்தனர். அவர்கள் ஒரு சொகுசு வேனில் தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அவர்கள் ஆலப்புழா சென்று விட்டு, கோவை வழியாக அந்த வேனில் சென்னைக்கு புறப்பட்டனர்.

கோவை க.க.சாவடி அருகே டீசல் நிரப்புவதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் வேலை நிறுத்தினர். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் மற்றும் காரிலும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென வேணுக்குள் ஏறி சுற்றுலா பயணிகளை தாக்கியது. இதில் லோகநாதன், அவருடைய மகன் யுகேந்திரன் ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து புகாரின் பேரில் க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிரட்டி வழிப்பறி செய்ய முயற்சி நடந்ததாக கருதப்பட்டது. ஆனால் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் லோகநாதன் மற்றும் அவருடைய மகனை மட்டும் தாக்கியதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர்.

மேலும் தப்பி ஓடிய மர்ம கும்பலை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பெயரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும் பொழுது;

தென் மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன், மலேசியாவில் குடும்பத்துடன் தங்கி தொழில் செய்து வருகிறார். அங்கு அவருக்கு தொழில் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கூலிப்படையை ஏவி லோகநாதன், அவருடைய மகனையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்து உள்ளது.

இதில் கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்து உள்ளது. அவர்களை பிடித்தால் தான் கூலிப்படையில் மொத்தம் எத்தனை பேர் வந்தார்கள் ? எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள் ? என்ற முழு விவரம் தெரிய வரும், இது தொடர்பாக தனி படை போலீசார் மதுரை, ஆலப்புழா ஆகிய பகுதிகளில் முகாமிட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர் என்றும், காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 "பஸ்ஸை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் பாய்ந்த கார்" ; கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர் கும்பல்!

"பஸ்ஸை விட்டு இறங்கிய சில நிமிடங்களில் பாய்ந்த கார்" ; கோவையில் ரூ.1.06 கோடி வழிப்பறி: உளுந்தூர்பேட்டையில் சிக்கிய 4 பேர் கும்பல்!

லட்சுமி மில்ஸ் பகுதியில் துணிச்சல் robbery: ரேஸ்கோர்ஸ் - பந்தய சாலை போலீசாரின் மின்னல் வேக நடவடிக்கை!

 கோவை, அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் ரூ.1.06 கோடி பணப் பையைப் பறித்துக்கொண்டு காரில் தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை, காவல் துறையினர் உளுந்தூர்பேட்டையில் வைத்து மடக்கிப் பிடித்து உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது உறவினர் ஒருவர் ஆந்திராவில் நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்கள் வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை கோவைக்கு வருகை தந்து, இங்கு உள்ள தங்க நகை தயாரிப்பாளர்களிடம் ரொக்கப் பணம் கொடுத்துப் புதிய தங்க நகைகளை வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

அதே போல், நகைகள் வாங்குவதற்காக ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணத்துடன் ரங்கசாமி இன்று கோவைக்கு வந்து உள்ளார்.

பேருந்தில் வந்து இறங்கிய ரங்கசாமி, அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு, கோவையில் உள்ள நகை தயாரிப்பாளருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் வந்து விட்டத் தகவலைத் தெரிவித்து உள்ளார்.

அவர் போனில் பேசிக் கொண்டு இருந்த போதே, அங்கு சொகுசு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று, ரங்கசாமியைச் சூழ்ந்து கொண்டது. நொடிப் பொழுதில் அவர் தோளில் அணிந்து இருந்த சோல்டர் பையை பலவந்தமாகப் பிடுங்கிக் கொண்டு, காரில் அதிவேகமாக அவிநாசி சாலை வழியாகத் தப்பியோடியது. அந்தப் பையில் நகைகள் வாங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 6 லட்சம் ரொக்கப் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த அவிநாசி சாலையில் நடந்த இந்தத் துணிச்சலான வழிப்பறி குறித்து, ரங்கசாமி உடனடியாக பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், உடனடியாகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தப்பிய கார் சென்ற பாதையில் உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமராக்கள் மற்றும் டோல்கேட் கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அந்த வாகனத்தை அதிவேகமாகப் பின்தொடர்ந்தனர். திருப்பூர், ஈரோடு, சேலம் வரை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல் துறையினர், மாவட்ட எல்லைகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச்சாவடி பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கு இடமாக வந்த அந்த காரை மறித்துச் சோதனையிட்டனர். அதில் காரில் இருந்த 4 பேரையும், அவர்களிடம் இருந்த ரூ.1.06 கோடி பணத்தையும் காவல்துறையினர் பத்திரமாகக் கைப்பற்றினர்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைத் தனிப்படை போலீசார் சாதுரியமாகப் பிடித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பிடிபட்ட நால்வரிடமும் பந்தய சாலை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை !

தி.மு.க முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை !

சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் முறைகேடு புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள அடையார் மற்றும் திருவான்மியூர் பகுதிகள், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோவையில் உள்ள TVH அடுக்குமாடி குடியிருப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த TVH நிறுவனத்தை கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நடத்தி வரும் நிலையில், அங்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல, நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை விரிவுபடுத்தியுள்ளது.

காலை முதலே தொடரும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை நிறைவடையும் போது கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[9/5, 3:08 PM] ஞானம் மகன்: "கோவையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி" - திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீடுகள், டி.வி.எச் (TVH) அலுவலகத்தில் தீவிர சோதனை!

சென்னை, திருச்சி, கோவை என 19 இடங்களில் ரெய்டு: டெண்டர் முறைகேடு, சொத்துக் குவிப்பு புகார்களில் பாயும் லஞ்ச ஒழிப்புத்துறை!

 தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகக் கே.என். நேரு பொறுப்பு வகித்த காலத்தில், பல்வேறு திட்டங்களுக்கான டெண்டர் ஒதுக்கீடு, ஆள் சேர்ப்பு மற்றும் அதிகாரிகள் இடமாற்றத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி மற்றும் கமிஷன் என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெற்றதாகச் சுமத்தப்பட்ட புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை 6 மணி முதல் திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேருவின் இல்லம், சென்னை அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், ஆல்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கோவை என மொத்தம் 19-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக, கோவையில் உள்ள பிரபல டி.வி.எச் (TVH) அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த டி.வி.எச் நிறுவனத்தைக் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் நடத்தி வரும் நிலையில், இங்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவாக வந்து சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

 நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள், வங்கி நிதிப் பரிவர்த்தனைப் பதிவேடுகள் மற்றும் சொத்து ஆவணங்களைச் சரிபார்த்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல, கே.என். நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

காலை முதலே பரவலாக நடைபெற்று வரும் இந்தச் சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான கணிசமான சான்றுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 சோதனை நிறைவடையும் தருவாயில், கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் ஆவணங்கள் குறித்த முழு விவரங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரப் பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

ஒரே பதிவு என்னுடன் இரண்டு வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை !

ஒரே பதிவு என்னுடன் இரண்டு வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்த காவல்துறை !

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இது பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மகேஸ்வரன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தார். இதில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் என்பவரும், அவருடைய நண்பர் சிபி என்பவரும் பிடிபட்டனர். நண்பர் அஸ்வினின் மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டில் உள்ள பதிவை எண்களை சிபி தனது மோட்டார் சைக்கிளில் எழுதி இயக்கி வந்து உள்ளார். இதை தொடர்ந்து பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ரூபாய் 7,200 அபராதம் விதிக்கப்பட்டு, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அஸ்வின் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் இல்லாதது உள்ளிட்ட விதி மீறல்களுக்கு ரூபாய் 700 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற விதிமீறல் வாகனங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை ஆணையர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

 "சூலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி" ; சாலையில் சாகசம் செய்து பீதியை ஏற்படுத்திய 6 பேர் கைது!

"சூலூர் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி" ; சாலையில் சாகசம் செய்து பீதியை ஏற்படுத்திய 6 பேர் கைது!

இரண்டு பைக்கில் 6 பேர் பறந்து சென்று ஓட்டுநர்களை அச்சுறுத்தல்: இணையத்தில் வைரலான வீடியோவால் நடவடிக்கை!

 கோவை - திருச்சி சாலையில், காவல் நிலையம் அருகிலேயே இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வீதம் ஆபத்தான முறையில் பயணம் செய்து, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வால்த்தனமான செயல்களில் ஈடுபட்ட 6 கல்லூரி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் கண்டனங்களைப் பெற்று உள்ளது.

கோவை - திருச்சி சாலையில் உள்ள சூலூர் காவல் நிலையத்திற்கு மிக அருகில், அப்பகுதியில் வழக்கம் போல் பொதுமக்களும் வாகனங்களும் சென்று கொண்டு இருந்தன. அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வீதம் மொத்தம் 6 கல்லூரி மாணவர்கள் சாலையில் அதிவேகமாகவும், ஒன்றன் பின் ஒன்றாக ஆபத்தான முறையிலும் பைக் ரேஸ் செல்வது போல அட்ராசிட்டியில் ஈடுபட்டனர்.

​சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், விபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் இவர்கள் வண்டியை மாற்றி, மாற்றி வளைத்து இயக்கி உள்ளனர்.

மாணவர்களின் இந்த விபரீதச் செயலைக் கண்ட அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவி வைரலாகி வருகிறது.

​காவல் நிலையம் அமைந்து உள்ள முக்கியப் பகுதியிலேயே கல்லூரி மாணவர்கள் இதுபோன்று பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் விதிகளை மீறிச் செயல்பட்டு இருப்பது கோவை மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் கைதான காதலனின் கடனுக்காக கொள்ளைக்காரியாக மாறிய கல்லூரி மாணவி - வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்!

மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவத்தில் கைதான காதலனின் கடனுக்காக கொள்ளைக்காரியாக மாறிய கல்லூரி மாணவி - வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல்!

மூதாட்டியிடம் நகை பறிப்பில் கைதான கல்லூரி மாணவி காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு, வாழ்க்கை கார் வாங்கவும் கொள்ளைக்காரியாக மாறியதாக அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர், கடந்த 30ம் தேதி வீட்டின் முன் உறவினர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் மாஸ்க்குடன் சரஸ்வதி அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து அங்கு தயாராக இருந்த இளம்பெண்ணுடன் ஸ்கூட்டரில் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். அப்போது

சி.சி.டி.வி கேமராவில் சிக்கிய ஸ்கூட்டர் எண்ணை வைத்து திருப்பூரை சேர்ந்த பரணிதரன் (21) மற்றும் அவரது காதலி நெல்லையை சேர்ந்த சிந்து (21) ஆகியோர் என்பதும், இருவரும் கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு எம்.பி.ஏ ஒன்றாக படித்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலம் அளித்து உள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

பரணிதரன் ஜாலியாக சுற்ற தனது நண்பர்களிடம் கடன் வாங்கி உள்ளார். அதனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழ அசைப்பட்டு உள்ளனர். இதனால் பெண்களிடம் நகை பறிக்க திட்டமிட்டு உள்ளனர். அதற்காக சி.சி.டி.வி கேமரா இல்லாத இடங்களை இருவரும் தேடி அலைந்து உள்ளனர். பின்னர் வெள்ளலூரை கறிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டை தேர்வு செய்து சரஸ்வதியிடம் நகை பறித்து உள்ளனர். அந்த நகையை ஓரிரு நாட்கள் கழித்து விற்பனை செய்து பணமாக்கி கொள்ளலாம் என திட்டமிட்டு உள்ளனர். ஆனால் அதற்குள் இருவரும் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கவும் கல்லூரி மாணவி கொள்ளைக்காரியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 "மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துணிச்சல் கொள்ளை" ; கோவையில் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 100 கிலோ வெள்ளி கொள்ளை!

"மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் துணிச்சல் கொள்ளை" ; கோவையில் ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 100 கிலோ வெள்ளி கொள்ளை!

பெங்களூரு சென்றிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை: வெரைட்டி ஹால் போலீசார் தீவிர விசாரணை!

 கோவையின் மிக முக்கிய மற்றும் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் ஒப்பனக்கார வீதியில், ஓய்வுபெற்ற ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்துச் சுமார் 100 கிலோ எடையிலான வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஒப்பனக்கார வீதி வணிக நிறுவனங்களும், மக்கள் நடமாட்டமும் நிறைந்து 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கக் கூடிய மண்டலமாகும். இந்தப் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ஆடிட்டர் சேஷகிரி. இவர் பெங்களூரில் வசித்து வரும் தனது மகனைப் பார்ப்பதற்காகக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டைப் பூட்டி விட்டுச் சென்று உள்ளார்.

மகன் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு, மீண்டும் கோவை திரும்புவதற்காக இன்று காலை தனது வீட்டிற்கு வந்து உள்ளார்.

வீட்டின் முன் கதவை அணுகிய போது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு சேஷகிரி கடும் அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த சுமார் 100 கிலோ எடையிலான வெள்ளிப் பூஜை பொருட்கள் மற்றும் பல்வேறு விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

வீடு பூட்டப்பட்டு இருந்ததை மோப்பம் பிடித்த கொள்ளையர்கள், திட்டமிட்டு இந்தத் துணிச்சல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

இது குறித்து சேஷகிரி உடனடியாக வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுத் தடயங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், ஒப்பனக்கார வீதியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமரா காட்சிகளைக் கைப்பற்றி, கொள்ளையர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒப்பனக்கார வீதியில், 100 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளை அடித்துச் சென்ற இச்சம்பவம் கோவை மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி உள்ளது.