வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

மழை வேண்டி அசத்தல் ஐதீகம் : மேளதாளம் முழங்க கழுதைகளுக்குப் பிரம்மாண்ட திருமணம் செய்து வைத்த கோவை கிராம மக்கள்!

மழை வேண்டி அசத்தல் ஐதீகம் : மேளதாளம் முழங்க கழுதைகளுக்குப் பிரம்மாண்ட திருமணம் செய்து வைத்த கோவை கிராம மக்கள்!

 மழை வேண்டி அசத்தல் ஐதீகம் : மேளதாளம் முழங்க கழுதைகளுக்குப் பிரம்மாண்ட திருமணம் செய்து வைத்த கோவை கிராம மக்கள்!

மாலையும் கழுத்துமாக வலம் வந்த மணமக்கள்: மொய்ப்பணம் செலுத்தி கம்பங்கூழ் பருகிய பொதுமக்கள்!

​ கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள லக்கேபாளையம் கிராமத்தில் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், மழை பெய்ய வேண்டி மனிதர்களைப் போலவே கழுதைகளுக்கு மேளதாளம் முழங்கப் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

லக்கேபாளையம் கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யாததால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், கிராம மக்கள் பழங்கால ஐதீகமான 'பஞ்ச கல்யாணி' முறையிலான கழுதைகள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வறட்சி நிலவிய போது, இதே போல் கழுதைகளுக்குத் திருமணம் நடத்தி மழை பெய்ததாகப் பெரியோர்கள் தெரிவித்தனர்.

இன்று அப்பகுதியில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் இத்திருமணம் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

 லக்கேபாளையத்தைச் சேர்ந்த பெண் கழுதைக்கு வண்ணப் புடவை கட்டி, வளையல், பாசி, உதட்டுச்சாயம் (Lipstick), நகச்சாயம் (Nail Polish) பூசி மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது.

பக்கத்து கிராமமான கோவில்பாளையத்தைச் சேர்ந்த ஆண் கழுதைக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது.

தொடர்ந்து மணமகன், மணமகள் அழைப்பு ஊர்வலமாக நடைபெற்றது. கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பின், மேளதாளங்கள் முழங்க பெண் கழுதைக்குத் தாலி கட்டப்பட்டுத் திருமணம் பாரம்பரிய முறைப்படி இனிதே நிறைவுற்றது.

​மனித திருமணங்களைப் போலவே, இத்திருமணத்திற்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் மொய்ப்பணம் வழங்கிச் சென்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சுடச்சுட கம்பங்கூழ் வழங்கப்பட்டது.

 திருமணத்தைத் தொடர்ந்து 'மறுவீடு அழைப்பு' நிகழ்வும் நடைபெற்றது. கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்து உள்ளதால், நிச்சயம் இந்த ஆண்டும் இந்த ஐதீகம் பலித்துக் காரி மழை பொழியும் என்ற நம்பிக்கையில் லக்கேபாளையம் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்துக் காத்து உள்ளனர்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் ; வனத்துறை அறிவிப்பு !!!

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் ; வனத்துறை அறிவிப்பு !!!

 வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் ; வனத்துறை அறிவிப்பு !!!

 தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 11) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.

​தென்மேற்குப் பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கேரளா மாநிலத்திலும், அதை ஒட்டி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாகக் கோவை குற்றால அருவியில் திடீரெனப் பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

​சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 29.07.2026 அன்று வனத்துறை சார்பில் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வரக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு தணிந்து, அருவியில் தண்ணீர் வரத்து படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது.

​இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த வனத்துறையினர், நாளை முதல் கோவை குற்றாலம் அருவி மீண்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகத் திறக்கப்படுகிறது எனத் தெரிவித்து உள்ளனர்.


​நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவை குற்றாலம் திறக்கப்படுவதால், சூழல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்து இயற்கையோடு பொழுதைக் கழிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை ; சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு !!!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை ; சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு !!!

 மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை ; சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு !!!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிறுவாணி அணை நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். இங்கு 44.61 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மழை போதிய அளவில் பெய்யாததால், வெயில் வாட்டி வதைத்ததாலும், சிறுவாணி அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இதனால் கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 8 அடியாக இருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வர தொடங்கியது.

இதனால் அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு மேல் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 22.76 அடியாக இருந்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவு அடைந்த 24 மணி நேரத்தில் சிறுவாணி அணை பகுதியில் மொத்தம் 13 செண்டி மீட்டர் மழையும், அடிவார பகுதியில் 4.7 செண்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

இதனால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 25.22 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து இருப்பதால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது;

தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், அணையின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. சிறுவாணி அணையில் கோவை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக 101 எம்.எல்.டி (ஒரு எம் எல் டி என்பது 10 லட்சம் லிட்டர்)

தண்ணீர் எடுக்கப்படும் தற்போது 70.40 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற நாட்களில் அணையின் நீர்மட்டம் பொருத்து தண்ணீர் எடுப்பது அதிகரிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

 நடப்பாண்டில் முதன் முறையாக நிரம்பிய பில்லூர் அணை - பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை !!!

கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலங்களில் பில்லூர் அணை நான்கு முறை நிரம்பியது.ஆனால்,இந்த ஆண்டில் முதன்முறையாக பில்லூர் அணை தனது முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடியை இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அடைந்தது. 

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரின் அளவான 8 ஆயிரம் கன அடி நீர் அப்படியே நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 2060 கன அடி நீர் மற்றும் மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி நீர் என மொத்தமாக 8060 கன அடி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் தேக்கம்பட்டி,நெல்லித்துறை, ஓடந்துறை,பாலப்பட்டி, ஊம்ப்பாளையம்,வச்சினம்பாளையம்,சிறுமுகை,லிங்காபுரம் உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

வயநாடு போல விபத்தா ? கல் குவாரி வெடியா ?” கோவையில் மலையில் இருந்து உருண்ட ராட்சதப் பாறை : அச்சத்தில் அப்பகுதி கிராம மக்கள் !!!

வயநாடு போல விபத்தா ? கல் குவாரி வெடியா ?” கோவையில் மலையில் இருந்து உருண்ட ராட்சதப் பாறை : அச்சத்தில் அப்பகுதி கிராம மக்கள் !!!

 வயநாடு போல விபத்தா ? கல் குவாரி வெடியா ?” கோவையில் மலையில் இருந்து உருண்ட ராட்சதப் பாறை : அச்சத்தில் அப்பகுதி கிராம மக்கள் !!!


 கேரளாவின் வயநாடு நிலச்சரிவு போல ஏதேனும் இயற்கை பேரிடரா ? அல்லது கல் குவாரிகளுக்காக வைக்கப்பட்ட வெடியால் நேர்ந்த விபத்தா ? எனத் தெரியாமல், கோவை எட்டிமடை அருகே மலையில் இருந்து ராட்சதப் பாறை ஒன்று திடீரெனக் கீழே உருண்டு விழுந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மதுக்கரை அடுத்த எட்டிமடை பகுதி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஏராளமான கிராமங்களும், விவசாய நிலங்களும் அமைந்து உள்ளன. 

இந்நிலையில்,  மலையின் மேல் பகுதியில் இருந்து ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டது போலப் பயங்கரமான சத்தம் கேட்டு உள்ளது.

​சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து வெளியே பார்த்த மக்கள் மலையில் இருந்து பிரம்மாண்டமான ராட்சதப் பாறை ஒன்று அசுர வேகத்தில் உருண்டு கீழே விழுந்ததைக் கண்டு உறைந்து போயினர்.

 நல்லவேளையாகப் பாறை உருண்டு வந்த பாதையில் வீடுகள் ஏதும் இல்லாததால், பெரும் உயிர்ச் சேதம் தப்பியது.

​அண்டை மாநிலமான கேரளாவின் வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் மலைகள் சரிந்த கொடூர விபத்தின் வடுக்கள் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை.

 கோவையிலும் கடந்த சில நாட்களாகத் தென்மேற்கு பருவமழை பரவலாகப் பெய்து வருவதால், தொடர் மழையின் காரணமாகப் பாறை சரிந்து விழுந்ததா ? அல்லது நிலச்சரிவு போன்ற இயற்கை விபத்தா ? என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

​மறுபுறம், எட்டிமடை மற்றும் அதன் சுற்று வட்டார மலைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாகவும், கல் குவாரிகளில் அளவுக்கு அதிகமான வீரியம் கொண்ட வெடி மருந்துகளைப் பயன்படுத்திப் பாறைகளைத் தகர்ப்பதே இதற்குக் காரணம் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​“இந்தப் பகுதியில் தொடர்ந்து கனிம வளங்களைத் தோண்டுவதாலும், பாறைகளை வெடி வைத்துத் தகர்ப்பதாலும் மலையின் அடிவாரம் மற்றும் நிலத்தடிப் பகுதிகள் அடியோடு பலவீனமடைந்து வருகின்றன. அதன் விளைவாகவே, தற்போது இந்த ராட்சதப் பாறை அவிழ்ந்து கீழே உருண்டு வந்து உள்ளது. இது ஆரம்பக் கட்ட எச்சரிக்கை தான். அதிகாரிகள் இப்பொழுதே நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராமங்களுக்கு உள்ளேயே பாறைகள் புகுந்து பெரும் ஆபத்து ஏற்படும்” என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய், 7 ஜூலை, 2026

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழப்பு ; 7 பேரை காணவில்லை என கேரளம் முதல்வர் தகவல் !!!

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழப்பு ; 7 பேரை காணவில்லை என கேரளம் முதல்வர் தகவல் !!!

 வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழப்பு ; 7 பேரை காணவில்லை என கேரளம் முதல்வர் தகவல் !!!

மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு அமைச்சர்கள், நிலச்சரிவு ஏற்பட்டு உள்ள இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் சதீஷன் தெரிவித்து உள்ளார்.

வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 5 பேர் உயிரிழந்து இருப்பதை அம்மாநில அரசு உறுதிச் செய்து உள்ளது. பலர் காயம் அடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், வயநாட்டில் சுரங்கப்பாதைப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் கன மழையால் இன்று (ஜூலை 07) காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்டு உள்ள பேரழிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், நிலச்சரிவு ஏற்பட்டு மழை வெள்ளம் வேகமாக வர, மக்கள் பதறியடித்தபடி ஓடிச் செல்கின்றனர்.

நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்ததாக கேரள மாநில அரசு உறுதிச் செய்து உள்ளது. பலத்த காயம் அடைந்த பலர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்ட நிர்வாகத்தினர், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் என அனைத்துத்துறை சார்ந்தவர்களும் வயநாட்டிற்கு விரைந்து உள்ளனர்.

கூடம்மாள் (தமிழ்நாடு), குஞ்சு (கேரளம்), சூரஜ் யாதவ் (பீகார்), சஞ்சய் தாக்கூர், ரஞ்னீஷ், திலீப், ஹிரா குமார், தன்மய் கோஷ் ஆகியோர் வயநாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் ஒருவரின் நிலைமைக் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் பெயர் விவரங்களை அரசு தரப்பு வெளியிடவில்லை.

 நிலச்சரிவு குறித்து அமைச்சர் சித்திக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வயநாட்டில் சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிக்காக மண் குவித்து வைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம். மழை குறைவாக பெய்த போதே விபத்து ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது; எனினும் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு விசாரணை நடத்தும். குவித்து வைக்கப்பட்டு உள்ள மண்ணை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆறு தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். வயநாடு மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த 'LDRF' குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளன. கண்ணூர் 'LDRF' குழுவினரையும் விபத்து பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

நிலச்சரிவு குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

 "சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிகளை கொங்கன் நிறுவனம் (Konkan Company) மேற்கொண்டு வருகிறது. குவித்து வைக்கப்பட்ட மண் சரிந்து விழவில்லை. மாறாக, கட்டுமான பகுதியில் இருந்த ஒரு பகுதி சரிந்து விழுந்து உள்ளது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

மீட்புக் குழுக்களும், ஆம்புலன்ஸுகளும் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாகச் செல்வதை உறுதிச் செய்யும் வகையில் கோழிக்கோடு-கல்பெட்டா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தாமரச்சேரி கணவாய் (Thamarassery Pass) பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மெப்பாடி (Meppadi) பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 24 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கேரளம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலகத்திற்கு விரைந்து சென்ற முதலமைச்சர் சதீஷன், வயநாடு நிலச்சரிவு, மாநிலத்தில் பெய்து வரும் மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

கேரளம் மாநில முதலமைச்சர் சதீஷன் செய்தியாளர்களுக்கு அளித்து உள்ள பேட்டியில்,

 "முதற்கட்ட தகவலின்படி ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஏழு பேரை காணவில்லை. காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. சுரங்கப்பாதை கட்டுமான பணியிடத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்த மண்ணை அகற்றுமாறு மாநில பேரிடர் ஆணையமும், மாவட்ட ஆட்சியரும் கடந்த ஜூன் 20- ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தனர்.

எனினும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை சுரங்க கட்டுமான ஒப்பந்ததாரர் பின்பற்றவில்லை. மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு அமைச்சர்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து உள்ளோம். முதலமைச்சரின் அலுவலகம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றது" என்றார்.

காற்றின் கோரத்தாண்டவம்: கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன் வேரோடு சாய்ந்த மரம் ; கார் நொறுங்கி பரபரப்பு !!!

காற்றின் கோரத்தாண்டவம்: கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன் வேரோடு சாய்ந்த மரம் ; கார் நொறுங்கி பரபரப்பு !!!

காற்றின் கோரத்தாண்டவம்: கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன் வேரோடு சாய்ந்த மரம் ; கார் நொறுங்கி பரபரப்பு !!!

தென்மேற்கு பருவமழையின் ஆக்ரோஷத்தால் விபரீதம்; அதிரடியாகக் களமிறங்கி மரத்தை அப்புறப்படுத்திய ‘காக்கிகள்’!

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் மற்றும் டி.எஸ்.பி அலுவலகம் ஒரே வளாகத்தில் உள்ளது.இதனிடையே நேற்று மாலை தென்மேற்கு பருவமழை காரணமாக காற்றின் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் காவல் நிலையம் முன்பு இருந்த ராட்சத மே ப்ளவர் மரம் ஒன்று காற்றின் வேகம் காரணமாக வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது, அச்சாலையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்து காரின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது.

நல்வாய்ப்பாக காரில் இருந்த நபர்கள் மற்றும் சாலையில் சென்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசார் விரைந்து செயல்பட்டு சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாசு இல்லாத எதிர்காலத்திற்கு ‘புதிய கண்டுபிடிப்புகள்’ அவசியம்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிரடி முழக்கம் !!!

மாசு இல்லாத எதிர்காலத்திற்கு ‘புதிய கண்டுபிடிப்புகள்’ அவசியம்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிரடி முழக்கம் !!!

 மாசு இல்லாத எதிர்காலத்திற்கு ‘புதிய கண்டுபிடிப்புகள்’ அவசியம்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அதிரடி முழக்கம் !!!

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 'தூய்மைப் பருவம்' விழா; 1000 மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு!

தற்போதைய உலகளாவிய சூழலில் பல்வேறு மாசுகளின் காரணமாக அதிகளவில் கார்பன் வாயு வெளியேற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மிக வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத புதிய கண்டுபிடிப்புகள் தற்போதைய சூழலில் மிகவும் அவசியத் தேவையாக உருவெடுத்துள்ளது என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், கோவை நவஇந்தியா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில் 'தூய்மைப் பருவம்' (Swachhata Pakhwada) விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சரும் பிரபல நடிகருமான சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, மத்திய இணை அமைச்சர் முன்னிலையில் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தூய்மை பாரத உறுதிமொழியினை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் 'தாயின் பெயரில் ஒரு மரம்' (Ek Ped Maa Ke Naam) இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்லூரி மைதானத்தில் அமைச்சர் சுரேஷ் கோபி தனது தாயின் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். மேலும், கல்லூரிப் பணியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு இலவச மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார்.

விழாவில் அமைச்சர் மேலும் பேசுகையில், "இந்த தூய்மை விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நம்முடைய வருங்கால தலைமுறையினரின் நலனுக்காக மேற்கொள்ளப்படுபவை ஆகும். மாணவர்கள் தூய்மைப் பணிகளையும் விழிப்புணர்வையும் இன்றைய ஒரு நாளுடன் மட்டும் சுருக்கிக் கொள்ளக் கூடாது. இதனை ஒரு கடமையாகக் கொண்டு, ஆண்டு முழுவதும் தங்களது அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

சனி, 6 ஜூன், 2026

மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல் - வனத்துறை அறிவிப்பு !!!

மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல் - வனத்துறை அறிவிப்பு !!!

 மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை : கோவை குற்றாலம் அருவி இன்று முதல் மூடல் - வனத்துறை அறிவிப்பு !!!

​பாதுகாப்பு கருதி போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் உத்தரவு... அருவியில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம் !!!

 கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான "கோவை குற்றாலம்" (Kovai Kutralam) அருவி, வெள்ளப்பெருக்கு காரணமாக இன்று (06/06/2026) முதல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடப்படுவதாகப் போளுவாம்பட்டி வனத்துறை சார்பில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

​கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் (Western Ghats) கடந்த சில தினங்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து, கடுமையான கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

 மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் தொடர் மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து உள்ளது. 

​இன்று காலை நிலவரப்படி, அருவியில் வெள்ள நீர் ஆபத்தான அளவைத் தாண்டி, காட்டாற்று வெள்ளமாகக் கரைபுரண்டோடி வருகிறது. பாறைகள் மற்றும் தரைப்பகுதிகள் தெரியாத அளவிற்குத் தண்ணீர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வருவதால், அங்குச் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதோ அல்லது அருவியின் அருகே செல்வதோ அவர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

​இதனைக் கருத்தில் கொண்டு, போளுவாம்பட்டி வனச்சரகம் சார்பில் அவசர அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியிடப்பட்டு உள்ளது.

​"மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழையால் கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று 06/06/2026-ம் தேதி தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என்றும் மேலும் ​மழை நின்று அருவியில் வெள்ளத்தின் வேகம் தணிந்து, நிலைமை முற்றிலும் சீரடையும் வரை கோவை குற்றாலத்திற்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 சனிக்கிழமையான இன்று வார இறுதி விடுமுறையைக் கொண்டாடக் கோவை குற்றாலத்திற்குச் செல்லத் திட்டமிட்டு இருந்த உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகள், வனத்துறையின் இந்த அதிரடி அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

​இருப்பினும், ஆபத்தான இந்த வெள்ளக் காலத்தில் வனத்துறையினரின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிப் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் போளுவாம்பட்டி வன அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சனி, 30 மே, 2026

கோவை மாநகருக்கு குடிநீர் வழக்கும் ; சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக சரிந்தது !!!

கோவை மாநகருக்கு குடிநீர் வழக்கும் ; சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக சரிந்தது !!!

 கோவை மாநகருக்கு குடிநீர் வழக்கும் ; சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக சரிந்தது !!!

கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக சரிந்தது.

கோவை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் 3 கூட்டு குடிநீர் திட்டங்கள், ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறுவாணி அணை நீர் மாநகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் தமிழக எல்லைக்குள் இருந்தாலும், அணையானது கேரளா வனப்பகுதியில் உள்ளது. இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. ஆனால் இந்த அணையில் 44 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அரசு அனுமதிக்கிறது. கோவை மாவட்டத்தில் கடந்து ஜனவரி மாதம் முதல் வெயில் சுட்டு எரித்தது. இதன் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த மாதம் இறுதியில் அணை நீர்மட்டம் 13.5 அடியாக நிலவியது. இருப்பினும் மே மாதம் இறுதியில் பருவமழை பெய்ய தொடங்கும் என்பதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை இன்னும் பெரிய தொடங்கவில்லை இதனால் சிறுபான்மையான நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதை அடுத்து அணையில் இருந்து குடிநீர் எடுப்பது 40 எம்.எல்.டி யாக நான்கு கோடி லிட்டர் குறைக்கப்பட்டு உள்ளது. அணை நீர்மட்டம் மேலும் சரிந்தால், இதனை 36 எம்.எல்.டி ஆக குறைக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக சரிந்து உள்ளது. தற்பொழுது உள்ள தண்ணீரைக் கொண்டு ஆகஸ்ட் மாதம் வரை மாநகராட்சி பகுதிகளுக்குள் விநியோகம் செய்ய முடியும், எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை, தென்மேற்கு பருவமழை விரைவில் பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் கோவைக்கு குடிநீர் வழங்கும் மற்றொரு பிரதான அணையான பில்லூர் அணை நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. கடந்த மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 77 அடி என்ற அளவில் இருந்தது. தற்போது அணை நீர்மட்டம் 85.2 அடியாக உள்ளது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் கூறினார்.

வெள்ளி, 15 மே, 2026

கோவையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - அப்பநாயக்கன்பாளையத்தில் 200 வருட பழமையான மரம் விழுந்து கார், வீடு தரைமட்டம்!

கோவையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை - அப்பநாயக்கன்பாளையத்தில் 200 வருட பழமையான மரம் விழுந்து கார், வீடு தரைமட்டம்!

 கோவையில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கன மழை - 200 வருட பழமையான மரம் விழுந்து கார், வீடு தரைமட்டம் !!!

​ ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பெருக்கெடுத்த வெள்ளம்; மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிப்பு !!!

​கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் பெய்த கன மழையால், அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பிரம்மாண்ட வேப்பமரம் வேரோடு முறிந்து விழுந்தது. இதில் கார், வீடு மற்றும் மின்கம்பங்கள் பலத்த சேதமடைந்து, 

​தமிழகத்தில் கத்திரி வெயில் (அக்னி நட்சத்திரம்) தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும், மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், இன்று மாலை சுமார் 4 மணி அளவில் கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னீர்மடை, தடாகம் மற்றும் இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ‘மெகா’ சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.

​சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கு தடையின்றிக் கொட்டித் தீர்த்த மழையினால், முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

200 வருட மரம் விழுந்து விபத்து:

மழையின் போது வீசிய பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்த சுமார் 200 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய வேப்பமரம் ஒன்று திடீரென அடியோடு முறிந்து அருகில் இருந்த வீட்டின் மீதும், நிறுத்தப்பட்டு இருந்த கார் மீதும் ‘மளமளவென’ சரிந்தது. இந்த விபத்தில் காரும், வீட்டின் ஒரு பகுதியும் நசுங்கிச் சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால், அப்பநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளது.

​தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியிலும், மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியிலும்  ஈடுபட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திர வெயிலுக்கு மத்தியில் கோவையில் பெய்த இந்த திடீர் கனமழை வெப்பத்தைத் தணித்தாலும், பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திங்கள், 27 ஏப்ரல், 2026

கோடை விடுமுறை எதிரொலியாக ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் !!!

கோடை விடுமுறை எதிரொலியாக ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் !!!

 கோடை விடுமுறை எதிரொலியாக ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் !!!

கோடை விடுமுறை எதிரொலியாக ஒகேனக்கலில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் இன்று குவிந்தனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகதரத்தை அடுத்து ஒகேனக்கல் அமைந்துள்ளது. இது தமிழகத்தின் முக்கிய சுற்றிலா தலமாக உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர், தமிழ்நாட்டிற்கு வரும் முதல் பகுதியாக இந்த பிலிகுன்டுலு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது.

இங்கு குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குளிபதற்கு குவிந்து வருகின்றனர். மேலும், அங்கு சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்தும், மீன் உணவை சுவைத்தும், பரிசல் பயணம் மேற்கொண்டு சுற்றுலாவை இனிமையாக கொண்டாடி வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வியாழன், 19 மார்ச், 2026

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு - குடிநீர் எடுக்கும் அளவு குறைப்பு !!!

சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு - குடிநீர் எடுக்கும் அளவு குறைப்பு !!!

 சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு - குடிநீர் எடுக்கும் அளவு குறைப்பு !!!

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணையில் எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1,2 மற்றும் 3 உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறுவாணி அணை நீரானது மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி காணப்பட்டன. கோவை சிறுவாணி அணையும் தண்ணீர் நிரம்பியது. இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் பாதுகாப்புக் கருதி இந்த அணையில் 44 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்தால், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி தற்போது ஒரு நாளைக்கு 5 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் துறை அலுவலர்கள் கூறும் போது 

சிறுவாணி அணையானது கேரளா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த அணையில் இருந்து நாள்தோறும் 10 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்க முடியும், தற்பொழுது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக சரிந்ததால் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவை 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் மே இறுதி அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் பருவமழை பெய்யும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.

செவ்வாய், 17 மார்ச், 2026

கோவையில் கொட்டியது 'ஆலங்கட்டி' மழை : கோடை வெப்பத்தைத் தணித்த ஆலங்கட்டி மழையால் விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம் !!!

கோவையில் கொட்டியது 'ஆலங்கட்டி' மழை : கோடை வெப்பத்தைத் தணித்த ஆலங்கட்டி மழையால் விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம் !!!

 கோவையில் கொட்டியது 'ஆலங்கட்டி' மழை : கோடை வெப்பத்தைத் தணித்த ஆலங்கட்டி மழையால் விவசாயிகள், பொதுமக்கள் உற்சாகம் !!!

கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று மதியம் முதல் புறநகர்ப் பகுதிகளில் பரவலாகப் பெய்த ஆலங்கட்டி மழை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த கோவை மக்களுக்கு, இந்தத் திடீர் மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது.

கோவை புறநகர்ப் பகுதிகளான தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, விராலியூர், தீத்திபாளையம், ஒத்தக்கால் மண்டபம், மதுக்கரை, மலுமிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரெனக் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

 மழையின் போது சிறிய அளவிலான ஆலங்கட்டிகள் (Hailstones) விழுந்ததைக் கண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். சாலைகளில் சிதறிக் கிடந்த ஆலங்கட்டிகளைக் கைகளில் ஏந்தி பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

கடந்த சில நாட்களாக 35 டிகிரி செல்சியஸிற்கு மேல் பதிவாகி வந்த வெயிலால் பயிர்கள் வாடும் நிலையில் இருந்தன. இந்தத் திடீர் மழையினால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயரும் என்றும், தென்னை மற்றும் காய்கறிப் பயிர்களுக்கு இது மிகுந்த நன்மையைத் தரும் என்றும் விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.

கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்டு குழந்தைகள் பாதிப்பு – கோவை லுலு மால் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர் புகார்...

கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்டு குழந்தைகள் பாதிப்பு – கோவை லுலு மால் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர் புகார்...

 கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்டு குழந்தைகள் பாதிப்பு – கோவை லுலு மால் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர் புகார்...

கோவை மதுக்கரையை சேர்ந்த சசிகுமார் என்பவர், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் கோவை புளியகுளம் சாலையில் உள்ள லுலு மாலுக்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் லாலிபாப் பார்சல் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து உள்ளார். குழந்தைகள் அந்த சிக்கனை சாப்பிட்ட சில நேரங்களிலேயே கடுமையான வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த சசிகுமார், மீதமிருந்த சிக்கனை பரிசோதித்த போது அதில் துர்நாற்றம் வீசி உள்ளது.

இதை அடுத்து உடனடியாக அந்த உணவகம் தொடர்பான பணியாளர்களிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் அலட்சியமாக பதில் அளித்து, உரிய விளக்கம் தராமல் தவிர்த்து உள்ளனர்.

இதனால் மேலும் அதிருப்தி அடைந்த அவர், சம்பவத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து தனது குடும்பத்துடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு சென்று, கெட்டுப்போனதாக கூறப்படும் சிக்கன் உணவுப் பொருளுடன் நேரடியாக மனு அளித்தார். 

அப்போது பேசிய அவர், இந்த சிக்கனை சாப்பிட்டதால் என் இரண்டு குழந்தைகளும் நானும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். இதுபோன்ற சம்பவங்கள் மற்றவர்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் ஏற்படாமல் இருக்க உரிய விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட லுலு மால் மற்றும் உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு நடத்தி உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சேமிப்பு முறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், நகரில் உள்ள பெரிய வணிக வளாகங்களில் உணவு பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

ஞாயிறு, 1 மார்ச், 2026

மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 87.61 அடியில் இருந்து 87.41 அடியாக குறைந்தது !!!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 87.61 அடியில் இருந்து 87.41 அடியாக குறைந்தது !!!

 மேட்டூர் அணையின் நீர்மட்டம் : 87.61 அடியில் இருந்து 87.41 அடியாக குறைந்தது !!!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 235 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(மார்ச் 1) காலை 87.61 அடியிலிருந்து 87.41 அடியாக குறைந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 2,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 373 கன அடியிலிருந்து விநாடிக்கு 235 கன அடியாக சற்று குறைந்துள்ளது. நீர்மட்டம் 87.41 அடியாக குறைந்து உள்ளது. நீர் இருப்பு 49.74 டிஎம்சியாக உள்ளது.

கோடைக் காலம் தொடங்கியது : வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு !!!

கோடைக் காலம் தொடங்கியது : வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு !!!

 கோடைக் காலம் தொடங்கியது : வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு !!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் எனவும் மலையேற்றத்திற்கு தமிழக வனத்துறை தடை செய்ய வேண்டும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நிகழாண்டு கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும். பரவலாக வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மலைப் பகுதிகளில் மலையேற்றத்திற்கு தமிழக அரசு மற்றும் வனத்துறை தடை விதிக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழகத்தில் மார்ச் 1 முதல் மே 31 வரையிலான கால கட்டமே கோடைக் காலமாகும். இந்நிலையில் நிகழாண்டு கோடைக் காலம் இன்று முதல் தொடங்குகிறது. நிகழாண்டு வெப்பநிலையை பொறுத்த வரை கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

மேலும் கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மார்ச் மாதத்தில் இயல்பான அளவிலேயே வெப்பநிலை பதிவாகும். குறிப்பாக உதகை, கொடைக்கானலுக்கு அடுத்தப்படியாக தென் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாகவே பதிவாகும்.

கிழக்குக் கடல் காற்று தமிழகப் பகுதிக்குள் நுழைவதால் கோடியக்கரை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், உவரி ஆகிய கடலோரப் பகுதிகளில் மிதமான வெப்பமே காணப்படும்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகம் முழுவதுமே இயல்பைவிட மிக அதிகமாக வெப்பநிலை அதிகரிக்கும். கோடைக் காலம் மே மாதத்துடன் நிறைவு அடைந்தாலும் ஆகஸ்ட் மாதம் வரை வெய்யில் தாக்கம் அதிகமாக இருக்கும்.

நிகழாண்டு வெய்யில் சுட்டெரிக்கும் என்பதால் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பு உள்ளது. கோடைக் காலங்களில் ஏற்படும் வறட்சி மற்றும் காட்டுத் தீ போன்ற சவால்களை எதிர்கொள்ள தமிழக வனத்துறை பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் நல்லது.

மேலும் தீ தடுப்புக் கோடுகள் உருவாக்குதல், வனப்பணியாளர்கள் அடங்கிய குழுக்களை உருவாக்குதல், வனத்தை ஒட்டி உள்ள கிராம மக்களிடம் காட்டுத் தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றத்திற்கு (Trekking) தடை செய்ய வேண்டும். கோடைக் காலங்களில் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்காமல் இருப்பது நல்லது.

 கோடைக் காலத்தில் தமிழகம் சராசரியாக 125 மி.மீ. மழையை பெறும். அதிலும் குறிப்பாக தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தான் கோடைக் காலத்தில் அதிக மழையை பெறும் மாவட்டங்களாக உள்ளன.

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்தாலும் இரவு நேரங்களில் கோடைமழையும் குறிப்பிடத்தக்க அளவு பதிவாக வாய்ப்பு உள்ளது. நிகழாண்டு கோடை மழையை பொருத்த வரை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி, திண்டுக்கல், கோயம்பத்தூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மே மாதங்களில் தமிழக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும். கோடைமழை என்பதால் தரைக் காற்று பலமாக வீசும். மாலை, இரவு நேரங்களில் இடி மின்னலுடன் வலுவான மழை பெய்யும்.

இந்தாண்டு கோடை காலத்தில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மானாவாரி பயிர் செய்யும் பகுதிகளிலும் நல்ல மழை பெய்யும்.

தமிழகத்தில் கோடைக் காலங்களில் மாநிலத்திலேயே கன்னியாகுமரி மாவட்டம் அதிகமான மழையை பெறுகிறது. கோடைக் காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சராசரியாக 272 மி.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் சராசரியாக 213 மி.மீ. மழையும், தென்காசி மாவட்டம் சராசரியாக 180 மி.மீ. மழையும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் சராசரியாக 171 மி.மீ. மழையும், தருமபுரி மாவட்டம் 170 மி.மீ. மழையும் பெறுகின்றன.

சனி, 28 பிப்ரவரி, 2026

அடுத்த 4 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும் !!!

அடுத்த 4 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும் !!!

 அடுத்த 4 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும் !!!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதேசமயம் அடுத்து நான்கு நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

பிப்ரவரி 28 ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 

 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 01, 02 ல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.

 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 03 முதல் 06 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 01 ல் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பிப்ரவரி 28 முதல் மார்ச் 01 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக் கூடும்.

மார்ச் 02 முதல் 04 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.