மனிதாபிமானத்திற்குத் தோல்வி : கோவையில் மாற்றுத்திறனாளி வேட்பாளரை மாடி ஏறச் சொன்ன தேர்தல் அதிகாரி !!!
"விதிமுறை முக்கியம்; மனிதநேயம் அல்ல" - நடக்க முடியாமல், சென்று மனுத் தாக்கல் செய்த வேட்பாளரின் கண்ணீர் கதை !!!
கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று அரங்கேறிய ஒரு நிகழ்வு பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கரராஜ் (44), சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
தேர்தல் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மாடியில் செயல்பட்டு வருகிறது. கால்கள் பாதிக்கப்பட்ட சங்கரராஜ், மாடிக்கு ஏறிச் செல்வது கடினம் என்பதால், தேர்தல் நடத்தும் அலுவலர் மாருதிப் பிரியாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார். "நான் மாற்றுத்திறனாளி என்பதால் மாடிக்கு வர சிரமமாக உள்ளது, தயவு செய்து கீழே வந்து மனுவைப் பெற்றுக்கொள்ள முடியுமா?" என உருக்கமாகக் கேட்டார்.
அதிகாரியின் கறார் பதில்:
ஆனால், மனிதாபிமானத்தை விட விதிமுறைகளே முக்கியம் என நினைத்த அதிகாரி, "தேர்தல் விதிமுறைப்படி வேட்பாளர் அறைக்கு வந்து தான் மனு கொடுக்க வேண்டும்" என கறாராகக் கூறி விட்டார். வேறு வழியின்றி, சங்கரராஜ் மிகுந்த உடல் உபாதைகளுக்கு இடையே, ஒவ்வொரு படியாக ஊர்ந்து மிகுந்த சிரமத்துடன் முதல் மாடிக்குச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கரராஜ் கூறியதாவது:
"மாற்றுத்திறனாளிகள் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரான நான், மாற்றுத்திறனாளிகளின் அரசியல் அங்கீகாரத்திற்காக தொண்டாமுத்தூர் மற்றும் தெற்கு தொகுதிகளில் போட்டியிடுகிறேன். இங்கு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்குகள் உள்ளன.
தேர்தல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சாய்வு தளம், வீல்சேர் என வசதி செய்து தரும் அரசு, வேட்புமனு தாக்கலின் போது மட்டும் ஏன் இதைக் கண்டுகொள்வதில்லை? என்னைப் போன்றவர்கள் வரும் போது அதிகாரிகள் கீழே வந்து மனுவைப் பெற வேண்டும் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் அலுவலகங்களை அமைக்க வேண்டும்" என தெரிவித்தார்.

0 கருத்துகள்: