கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

 "பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

"பள்ளி கட்டிடம் முடிகிறதுக்கு முன்னாடியே வகுப்புகளா ?" - மாணவி தலையில் விழுந்த 'பால் சீலிங்': பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தால் கோவையில் பரபரப்பு!

உரிய சான்றிதழ் இல்லாமல் இயங்கிய டேக் அக்ஷயா அகாடமி சி.பி.எஸ்.சி பள்ளி - பெற்றோர் முற்றுகையால் பரபரப்பு!

 கோவை, துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில், பணிகள் நிறைவடையாத புதிய கட்டிடத்தில் மாணவியை அமர வைத்ததில் 'பால் சீலிங்' (False Ceiling) பெயர்ந்து தலையில் விழுந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 இதைக் கண்டித்து நூற்றுக் கணக்கான பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, துடியலூர் அடுத்த பன்னீர்மடை பகுதியில் பிரபல ‘டேக் அக்ஷயா அகாடமி’ (TAG Akshaya Academy) சி.பி.எஸ்.சி பள்ளி இயங்கி வருகிறது. கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்குப் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இயங்கி வரும் பள்ளி வளாகத்தின் அருகே சுமார் 30,000 சதுர அடியில், 3 தளங்களுடன் கூடிய புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நீரோடைப் பள்ளத்தின் ஓரத்தில், சுற்றுச்சுவர் கூட முழுமையாகக் கட்டப்படாத இந்த புதிய கட்டிடத்தில், விஜயதசமி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கேஜி மாணவர்களை அமர வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.

இதைக் கண்டித்துப் கடந்த வாரம் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, பழைய கட்டிடத்திற்கு மாணவர்களை மாற்றுவதாகவும் 3 நாட்களில் பணிகளை முடிப்பதாகவும் நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால், பணிகள் முடியாத நிலையிலேயே மீண்டும் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களை அந்த ஆபத்தான புதிய கட்டிடத்திற்கு மாற்றி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று புதிய கட்டிடத்தில் கழிவறைக்குச் சென்ற மாணவி ஒருவரின் தலையில், மேல் இருந்த பால் சீலிங் (False Ceiling) திடீரென கழன்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அம்மாணவி காயமின்றித் தப்பினார்.

இந்தத் தகவல் பரவியதும் ஆத்திரம் அடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், இன்று காலை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு முதன்மை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பெற்றோர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியதால் நிர்வாகத்தினர் பதிலளிக்க முடியாமல் திணறினர்.

கட்டிட அனுமதி (Building Approval) மற்றும் பணி நிறைவு சான்றிதழ் (Completion Certificate) பெறாமலேயே மாணவர்களை ஆபத்தான கட்டிடத்தில் அமர வைத்து உள்ளனர்.

வகுப்பறைகளில் உடையும் நிலையில் உள்ள டைல்ஸ்கள், இயங்காத மின்விசிறிகள் மற்றும் சிமெண்ட் தூசியால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

முழு கட்டிடத்திற்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதால், நீண்ட வரிசையில் நின்று மதிய உணவைக் கூடச் சாப்பிட முடியாமல் குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

ஆய்வகம் (Lab), கணினி மையம், நூலகம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கின்றனர்.

தட்டிக் கேட்டால் 'டிசி' (TC) வாங்கிக் கொண்டு வெளியேறுங்கள் எனப் பள்ளி நிர்வாகம் மிரட்டுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார், பெற்றோர்களுடன் இணைந்து புதிய கட்டிட நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் பள்ளி நிர்வாகத்திடம், "அனைத்துப் பணிகளையும் 10 நாட்களுக்குள் முழுமையாக முடித்து, முறையான பணி நிறைவுச் சான்றிதழ் பெற்ற பின்னரே புதிய கட்டிடத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். அதுவரை பழைய கட்டிடத்திலேயே மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.

காவல்துறையின் இந்த உறுதியான நடவடிக்கையைத் தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

 இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் பரபரப்பு நிலவியது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" ; தடையோட்டப் பயிற்சியுடன் கோவையில் கோலாகலமாகத் தொடங்கியது SSVM 5-வது ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா மாநாடு!

விண்வெளி வீரர் பிரசாந்த் நாயர், அபினவ் பிந்த்ரா பங்கேற்பு: மாணவர்களுடன் சவால்களை எதிர்கொள்ளும் அனுபவப் பயணம்!

 எதிர்காலத்தின் சவால்களை மாணவர்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ளும் வகையில், கோவை SSVM கல்வி நிறுவனங்கள் நடத்தும் 3 நாள் 'ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா' (Transforming India) 5-வது மாநாடு மாணவர்களுக்கான 'தடை ஓட்டப் பயிற்சியுடன்' (Obstacle Course) இன்று உற்சாகமாகத் தொடங்கியது.

உற்சாகமான தடையோட்டப் பயிற்சி:

"எதிர்காலத்திற்கு ஏற்ப மாறுங்கள்" (Adapt to the Future) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்டு உள்ள இம்மாநாட்டின் முதல் நாளில், SSVM வேர்ல்ட் ஸ்கூல் மாணவர்கள் பங்கேற்ற 'ஸ்டூடண்ட் பர்ஸ்ட் ஆப்ஸ்டக்கிள் கோர்ஸ்' எனப்படும் சவாலான தடையோட்டப் பயிற்சி நடத்தப்பட்டது.

வெறும் சொற்பொழிவுகளுடன் தொடங்காமல், மாணவர்கள் தங்களது உடல் மற்றும் மன வலிமையைச் சோதிக்கும் வகையில் வளைந்து கொடுத்தும், கம்பிகளைப் பிடித்துத் தொங்கியும் (Monkey bar), தடைகளைத் தாண்டித் தங்களைச் சமன் செய்தும் இந்தப் பயிற்சியில் அசத்தினர்.

 ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக் கொண்டு மாணவர்கள் முன்னேறிய இந்த நிகழ்வு, தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் நேரடிப் பாடமாக அமைந்தது.

நிர்வாகக் குழுவினரும் பங்கேற்பு:

SSVM கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர். மணிமேகலை மோகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்த இந்த நிகழ்வில், அறங்காவலர் எஸ். மோகன்தாஸ், இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ், இயக்குனர் நிதின் ஜெய் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து தடையோட்டச் சவால்களில் பங்கேற்று ஊக்கமளித்தனர்.

இது குறித்து டாக்டர். மணிமேகலை மோகன் பேசுகையில் :-

 "குழந்தைகள் தங்களின் எல்லைகளைத் தாண்டிச் செயல்படுவதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என்பதே இதன் நோக்கம். இன்று சவால்களை எப்படித் தாண்டுவது என்று குழந்தைகள் கற்றுக்கொண்டால், நாளை வாழ்க்கை தரும் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

கல்வி இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் கூறுகையில் :-

"இது வெறும் தலைப்பு அல்ல; கடினமான சூழ்நிலைகளில் மன உறுதியோடு தொடர்ந்து முன்னேறும் தைரியத்தைக் கண்டறியும் வாய்ப்பு" என்றார்.

சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு:

செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ககன்யான் விண்வெளி வீரர் மற்றும் இந்தியப் படைப்பிரிவு அதிகாரி ஏர் கமாண்டோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா

இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்

பிரபல பரதநாட்டியக் கலைஞர் மற்றும் நடன இயக்குநர் ருக்மணி விஜயகுமார்

ஆகிய சாதனையாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். விளையாட்டு, உடல் அசைவுகள், ஒழுக்கம் மற்றும் மன உறுதி ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக அனுபவபூர்வமாக உணரும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

 "சீறிப் பாய்ந்த மாணவர்கள்... ஜத்தன் ஹவுஸ் சாம்பியன்" ; கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026'!

"சீறிப் பாய்ந்த மாணவர்கள்... ஜத்தன் ஹவுஸ் சாம்பியன்" ; கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026'!

 "சீறிப் பாய்ந்த மாணவர்கள்... ஜத்தன் ஹவுஸ் சாம்பியன்" ; கோவை ரத்தினம் பப்ளிக் பள்ளியில் 'ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026'!

ஏரோபிக்ஸ், சிலம்பம், டேக்வாண்டோ என மாஸ் காட்டிய மாணவர்கள்: 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

​ கோவை, ரத்தினம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் (RIPS) ‘ஸ்போர்ட்ஸ் வகான்சா 2026’ (Sports Vaganza 2026) என்ற மாபெரும் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் ரத்தினம் என்.சி.சி. மைதானத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு 'ஹோஷ் அஜைல்' (Hosh Agile) மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்ட்டின் தேவபிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

​நிகழ்ச்சியில் ரத்தினம் குழுமத்தின் இயக்குநர் ஷிமா செந்தில், பள்ளி முதல்வர் ஆஷ்மி, தலைமை செயல்பாட்டு அலுவலர் அபிநயா சங்கரி மற்றும் வணிக வளர்ச்சி மேலாளர் கார்த்தி பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி வாழ்த்தினர்.

காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்ற விளையாட்டு விழாவில், நர்சரி வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

​மாணவர்கள் சிலம்பம், டேக்வாண்டோ, ஏரோபிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூம்பா நடனம் உள்ளிட்ட பல்வேறு உடற்பயிற்சி சார்ந்த சாகச நிகழ்சிகளையும், பல்வேறு பிரிவுத் தடகளப் போட்டிகளையும் திறம்பட நிகழ்த்திக் காட்டிப் பார்வையாளர்களின் பலத்த கரவொலியைப் பெற்றனர்.

போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவியருக்குத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

​பள்ளியின் இல்லங்களுக்கு (House System) இடையே நடைபெற்ற கடும் போட்டிகளின் முடிவில், 'ஜத்தன் ஹவுஸ்' (Jathan House) அதிக புள்ளிகளைக் குவித்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையைக் தட்டிச் சென்றது.

​இவ்விளையாட்டு விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு போட்டிகளைக் கண்டு ரசித்து மாணவர்களைக் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன் 'பகீர்' கொண்டாட்டம்!

 கோவையில் ஓணம் வைப்... ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செண்டை மேளத்துடன்  கொண்டாட்டம்!

நவஇந்தியாவில் அத்தப்பூக்கோலமிட்டு மாஸ் காட்டிய மாணவ-மாணவிகள்: டிஜே இசையில் கலகலத்த வளாகம்!

மலையாள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் மிகக் கோலாகலமாகவும் உற்சாகத்துடனும் நடைபெற்றது. 

பாரம்பரிய ஆடையில் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலம்:

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகை நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடையான முண்டு, செட் புடவைகளை அணிந்து வந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். கல்லூரி முகப்பில் அழகிய வண்ண மலர்களால் பிரம்மாண்ட அத்தப்பூக்கோலமிட்டு மகாபலி சக்கரவர்த்தியைத் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

செண்டை மேளத்துடன் மகாபலி வருகை – கேரள நடனங்கள்:

தொடர்ந்து, செண்டை மேளம் அதிரடியாக முழங்க, மகாபலி மன்னன் வேடமணிந்த நபருடன் இணைந்து மாணவ-மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர். அத்துடன் கேரளாவின் பாரம்பரிய நடனங்களை ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டிஜே இசையில் Full Vibe கொண்டாட்டம்:

இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சிறப்பு நடன நிகழ்ச்சிகளும், பிரம்மாண்ட டிஜே (DJ) இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. டிஜே இசையின் அதிரடி பீட்ஸிற்கு ஏற்ப அனைத்து மாணவ-மாணவிகளும் ஒன்று கூடி 'Full Vibe'-இல் உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கல்லூரி வளாகம் முழுவதுமே திருவிழாக் கோலம் பூண்டு, மாணவர்களின் ஆரவாரத்தில் கலகலத்துப் போனது.

 "காரில் இருந்து பறந்த தீப்பொறி... கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!" - கோவை CMS கல்லூரியில் ஓணம் கொண்டாட்ட அட்ராசிட்டி: வீடியோ வைரல்!

"காரில் இருந்து பறந்த தீப்பொறி... கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!" - கோவை CMS கல்லூரியில் ஓணம் கொண்டாட்ட அட்ராசிட்டி: வீடியோ வைரல்!

 "காரில் இருந்து பறந்த தீப்பொறி... கதவில் அமர்ந்து மாணவிகள் ஆட்டம்!" - கோவை CMS கல்லூரியில் ஓணம் கொண்டாட்ட அட்ராசிட்டி: வீடியோ வைரல்!

ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் பொதுமக்கள் கோரிக்கை!

 கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள CMS கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மாணவர்கள் சிலர் கார்களை ஆபத்தான முறையில் ஆல்ட்ரேஷன் செய்து சாகசங்களில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.

ஓணம் கொண்டாட்டத்தையொட்டி கல்லூரி வளாகத்திற்குள் கார்களைக் கொண்டு வந்த மாணவர்கள், அவற்றின் சைலன்ஸர்களை (Exhaust) மாற்றி அமைத்து (Alteration), அதில் இருந்து பயங்கர சத்தத்துடன் தீப் பிழம்புகள் வெளியேறுவது போன்று சாகசமாக ஓட்டிச் சென்று உள்ளனர்.

​அதே நேரத்தில், கார்களின் கதவுகளின் மீது மாணவிகள் ஆபத்தான முறையில் அமர்ந்து கொண்டு, அதிக ஒலியுடன் ஒலித்த பாடல்களுக்கு ஆட்டம் ஆடியபடி அட்ராசிட்டியில் ஈடுபட்டு உள்ளனர்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே பிறருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இந்த சாகசங்களில் ஈடுபட்டதை அங்கு இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரின் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

​திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் மாணவர்கள் இதுபோன்ற ஆபத்துக்களை உணராமல் சாகசங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.

​எனவே, பிற மாணவர்களின் பாதுகாப்பையும் வருங்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும், மோட்டார் வாகன விதிகளை மீறி கார்களை மாற்றி அமைத்தவர்கள் மீதும் காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

வியாழன், 20 ஆகஸ்ட், 2026

கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

 கூகுள் AI உலக அளவிலான ஆராய்ச்சி போட்டியில் ரூ.24 லட்சம் வென்று சாதித்த மாணவர்கள் ; நேரில் அழைத்து வாழ்த்திய அண்ணாமலை !!!

அமெரிக்காவில் உள்ள கூகுள் டீப்மைண்ட் – கேகிள் உலகளாவிய போட்டியில் முதலிடம் பெற்று 24 லட்சம் பரிசு வென்ற கோவையைச் சேர்ந்த ஏ ஐ ஆராய்ச்சியாளர் சென்னை ஐ ஐ டி மாணவர் அர்ஜுன் திலக் மற்றும் இணை ஆசிரியர் ராம்குமார் ஆகியோரை வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   

லண்டனை தலைமையிடமாகக் கொண்ட, சென்னையில் இயங்கி வரும் ஈராஸ் இன்னோவேஷன் நிறுவனத்தின் ஏஐ ஆராய்ச்சியாளரும், ஐஐடி சென்னை மாணவருமான அர்ஜுன் திலக் மற்றும் ஈராஸ் இன்னோவேஷன் ஏஐ ஆராய்ச்சியாளர் ராம்குமார் ஆகியோர் உருவாக்கிய கேஜ் என்ற செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மதிப்பீட்டு கருவி, கூகுள் டீப் மைண்ட் ஏஐ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காகுள் இணைந்து நடத்திய உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி ஹேக்கத்தானில், உலகம் முழுவதும் வழங்கப்பட்ட நான்கு கிராண்ட் பிரைஸ் விருதுகளில் ஒன்றைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்காக அவர்களுக்கு அமெரிக்க டாலர் 25,000 (சுமார் ரூ.24 லட்சம்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஏஜிஐ-ஐ நோக்கிய முன்னேற்றத்தை அளவிடுதல் : அறிவாற்றல் திறன்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஹேக்கத்தானை உலகின் மிகப்பெரிய ஏஐ ஆராய்ச்சி நிறுவனமான கூகுல் டீப் மைண்ட், மற்றும் போட்டித் தளமான காகிள் மூலம் நடத்தியது. இதில் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகளைச் சேர்ந்த 7,654 போட்டியாளர்கள் மற்றும் 1,063 அணிகளும் பங்கேற்றன. மொத்தம் 2 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1.9 கோடி) பரிசுத் தொகைக்காக போட்டியிட்டனர். இதனை 20 நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

மாணவர் அர்ஜின் திலக்கின் கண்டுபிடிப்பான கேஜ் என்ற இந்த மதிப்பீட்டு முறை, ஒரு ஏஐ மாடலுக்கு "தனக்குத் தெரியாததைத் தெரிந்துகொள்ளும் திறன் உள்ளதா? அதற்கேற்ப மனித உதவியை நாடுகிறதா?" என்பதை சோதிக்கிறது.

இந்த நிலையில் மாணவரின் சாதனைகளைக் கேள்விப்பட்டு வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனரும் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரியுமான அண்ணாமலை தனது இல்லத்தில் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம், அவர்கள் உருவாக்கிய ஏஐ பென்ச்மார்க் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்து, மடிக்கணினியில் அதன் தொழில்நுட்ப செயல்முறைகளையும் பொறுமையாகக் கேட்டு புரிந்துகொண்டார். இளைஞர்களின் சாதனையை மனதாரப் பாராட்டிய அண்ணாமலை, இந்தியாவிற்கு ஏஐ துறையில் மேலும் பல உலகத் தரமான பெருமைகளை கொண்டு வர வேண்டும் என்று ஊக்கமளித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளையும் வழங்கினார்.   


இந்த ஆராய்ச்சி ஐஐடி பாட்னாவில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாட்டிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 19 ஆகஸ்ட், 2026

 "அவன் யாரென்றே தெரியாது" ; கோவையில் 4-ம் ஆண்டு கல்லூரி மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர் - போலீஸ் விசாரணை !!!

"அவன் யாரென்றே தெரியாது" ; கோவையில் 4-ம் ஆண்டு கல்லூரி மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர் - போலீஸ் விசாரணை !!!

 "அவன் யாரென்றே தெரியாது" ; கோவையில் 4-ம் ஆண்டு கல்லூரி மாணவரைத் தாக்கிய ஜூனியர் மாணவர் - போலீஸ் விசாரணை !!!

வழி மறித்து ஆபாசமாகப் பேசித் தாக்குதல்: கல்லூரி மாணவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு !

​ கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், செட்டிபாளையம் அருகே 4-ம் ஆண்டு பயிலும் பார்மசி கல்லூரி மாணவரை, ஜூனியர் மாணவர் ஒருவர் வழிமறித்துத் தாக்கிய சம்பவம் மீண்டும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் உதயராஜ் (22). இவர் கோவை செட்டிபாளையம் அருகே மயிலேறிபாளையத்தில் உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் B.Pharm 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக ஒத்தக்கால்மண்டபம் அருகே வேலாந்தாவளம் சாலையில் சக மாணவர்களுடன் அறை எடுத்துத் தங்கிப் படித்து வருகிறார்.

​சம்பவத்தன்று, உதயராஜ் ஒத்தக்கால்மண்டபம் சூப்பர் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் உதயராஜை அருகில் வருமாறு அழைத்து உள்ளார். ஆனால், அந்த வாலிபர் யார் ? என்று தெரியாததால் உதயராஜ் அருகே செல்லாமல் தொடர்ந்து நடந்து சென்று உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், உடனடியாகத் தனது மோட்டார் சைக்கிளை உதயராஜின் குறுக்கே நிறுத்தி, அவரை ஆபாச வார்த்தைகளால் அவதூறாகப் பேசி திடீரெனத் தாக்கி உள்ளார். இதில் உதயராஜின் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

இச்சம்பவம் குறித்து உதயராஜ் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்.

​விசாரணையில், உதயராஜைத் தாக்கியவர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிவர்மன் (18) என்பது தெரியவந்தது. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் B.Sc IT 2-ம் ஆண்டு (ஜூனியர்) படித்து வருகிறார்.

​முன் பின் அறியாத சீனியர் மாணவரை வழிமறித்துத் தாக்கிய ஜூனியர் மாணவர் கவிவர்மன் மீது செட்டிபாளையம் போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

அமுதன் கொலை வழக்கு பின்னணி : கோவையில் 128 கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டம் !!!

அமுதன் கொலை வழக்கு பின்னணி : கோவையில் 128 கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டம் !!!

 அமுதன் கொலை வழக்கு பின்னணி : கோவையில் 128 கல்லூரி நிர்வாகிகளுடன் காவல் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டம் !!!

போதைப் பொருள் தடுப்பு, சைபர் பிரிவு, சி.சி.டி.வி கண்காணிப்பு: மாணவர் பாதுகாப்பிற்குப் போலீஸார் வழங்கிய கெடுபிடி அறிவுறுத்தல்கள் !!!

 கோவை, இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவன் அமுதன் சக மாணவர்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவையில் உள்ள 128 கல்லூரிகளின் நிர்வாகிகளுடன் காவல் துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உள்ளனர்.

கோவை, பொள்ளாச்சி சாலையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த அமுதன் என்ற மாணவன், தனது நண்பருடன் சென்று கொண்டு இருந்த போது சில மாணவர்களால் வழிமறித்துத் தாக்கப்பட்டு உயிரிழந்தான்.

 இச்சம்பவம் குறித்துச் செட்டிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கல்லூரி மாணவர்களும் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

 கல்லூரியில் போதைப் பொருள் புழக்கம் குறித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்ததால் தான் தனது மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக அமுதனின் பெற்றோர் குற்றம் சாட்டினர். (இதை கல்லூரி நிர்வாகம் மறுத்து உள்ளது).

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சீனியர் மாணவர்களைத் தாக்கிச் செல்போன் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்விரோதமே இந்த மோதலுக்கும், தாக்குதலுக்கும் காரணமாக இருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

மாணவர் அமுதனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் கல்லூரி வளாகங்களில் குற்றங்களைத் தடுக்கக் கோவை கொடிசியா வளாகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகரக் காவல் ஆணையர் கண்ணன், மேற்கு மண்டலக் காவல் துறை தலைவர் (IG) ரம்யா பாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், கோவையைச் சேர்ந்த 128 கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 இதில் அனைத்துக் கல்லூரிகளிலும் தனியாகச் சைபர் பிரிவு தொடங்கப்பட வேண்டும். சமூக வலைதளங்களில் மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல்கள், சைபர் குற்றங்கள் கல்லூரி வளாகத்திற்குள் வன்முறையாக மாறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாதாந்திர ஆய்வுக் கூட்டம், கல்லூரிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் மற்றும் மாணவர்களின் நடவடிக்கைகள் தொடர்பாகக் கல்லூரி நிர்வாகங்கள் தரும் தகவல்களின் அடிப்படையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அல்லது காவல் ஆணையர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

 கல்லூரி மற்றும் விடுதி வளாகங்கள், நுழைவாயில்களில் போதிய CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுச் சீராக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். கல்லூரி நிர்வாகம் சார்பில் 'பறக்கும் படைகள்' (Flying Squads) அமைத்து, மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.

 ஒவ்வொரு கல்லூரியிலும் தனியாக ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தேவையான நேரங்களில் மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனைகள் வழங்க வேண்டும். சிறிய குழுக்களாக மாணவர்களைப் பிரித்துத் தனி வழிகாட்டிகளை நியமிக்க வேண்டும்.

 மாணவர்கள் ஆன்லைன் சூதாட்டம், போதைப் பொருள் பயன்பாடு அல்லது சைபர் குற்றங்களில் ஈடுபடுவது தெரியவந்தாலோ, அவர்களின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாகப் பெற்றோருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாணவன் அமுதன் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல் துறை வழங்கி உள்ள இந்த அதிரடி அறிவுறுத்தல்கள் வெறும் காகித அளவிலேயே நிற்காமல் கல்லூரிகளில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா ? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கோவையில் தனியார் கல்லூரியின் விடுதி சமையலறை பூட்டி சீல் ; 12 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை !!!

கோவையில் தனியார் கல்லூரியின் விடுதி சமையலறை பூட்டி சீல் ; 12 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை !!!

 கோவையில் தனியார் கல்லூரியின் விடுதி சமையலறை பூட்டி சீல் ; 12 கல்லூரிகளுக்கு நோட்டீஸ் - உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை !!!

​கோவை, மாவட்டத்தில் உள்ள கல்லூரி விடுதிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விடுதி சமையலறை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. மேலும், 12 தனியார் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கல்லூரி விடுதிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையேற்று, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி அனுராதா தலைமையிலான குழுவினர் ஆகஸ்ட் 10 முதல் 3 நாட்களுக்கு மாவட்டம் முழுவதும் உள்ள 13 தனியார் கல்லூரிகளின் விடுதிகள் மற்றும் உணவகங்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு செய்யப்பட்ட 13 கல்லூரிகளிலுமே பல்வேறு விதி மீறல்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சமையலறைகள் முறையான பராமரிப்புப் பதிவேடுகள் இன்றி இயங்கி வந்தன. உணவைச் சமைப்பவர்கள் மற்றும் பரிமாறுபவர்களிடம் மருத்துவ உடற்தகுதிச் சான்றிதழ்கள் இல்லை. உணவு கையாளுபவர்கள் உணவுப் பாதுகாப்புப் பயிற்சி மற்றும் சான்றிதழ் பெறவில்லை.

 பூச்சிக்கட்டுப்பாடு நடவடிக்கைகள், சரியான உணவு சேமிப்பு முறைகள் மற்றும் கழிவு அகற்றுதல் ஆகியவற்றில் கடுமையான குறைபாடுகள் இருந்தது அம்பலமானது.

ஆய்வின் போது, ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விடுதி சமையலறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதை அடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006, பிரிவு 32-இன் கீழ் அந்த விடுதி சமையலறையின் செயல்பாடுகளை 14 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

 சமையலறை மூடப்பட்டதை அடுத்து, அந்தக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உள்ளது. ​மேலும், ஆய்வு செய்யப்பட்ட அனைத்து 13 கல்லூரிகளுக்கும் மேம்பாட்டு அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது. கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சரிசெய்ய 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. 

மாவட்டம் முழுவதிலும் உள்ள பிற கல்லூரிகளிலும் இந்த அதிரடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

 அரசுப் பள்ளியில் அதிர்ச்சி : வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரல் - தலைமை ஆசிரியர் அதிரடி இடமாற்றம் !!!

போதை சாக்லேட் விநியோகிக்கப்படுவதாகவும் புகார்: பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி !!!

​ கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள அரசுப் பள்ளியில், சீருடையில் இருந்த மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

தக்கலை அரசுப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் இரு மாணவிகள் வகுப்பறையில் வைத்து மது அருந்தியதாகப் புகார் எழுந்தது. ஆனால், அப்போது பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் அளித்த அந்த மாணவிகள், "இந்தச் சம்பவம் பள்ளியில் நடக்கவில்லை, வீட்டில் தான் நடந்தது" என்று கடிதம் எழுதிக் கொடுத்து உள்ளனர். அதனை நம்பி பள்ளி நிர்வாகமும் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் வழக்கை முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த மாணவிகள் பள்ளிச் சீருடையுடன் வகுப்பறையிலேயே மது அருந்தும் வீடியோ காட்சிகள் நேற்று இரவு சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவியது. இதன் மூலம் இந்தச் சம்பவம் பள்ளி வளாகத்திற்குள் தான் நடைபெற்றது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டது.

​பள்ளி வளாகத்திற்குள் நடந்த இந்தச் சம்பவத்தை முறையாக விசாரிக்காமல் மறைக்க முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் உடனடி நடவடிக்கை எடுத்து உள்ளார். 

அதன்படி, சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதுமட்டுமின்றி, அதே பள்ளியில் பயிலும் மாணவன் ஒருவன் சக மாணவர்களுக்குப் 'போதை சாக்லேட்' விநியோகம் செய்து வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

​பள்ளிப் பருவத்திலேயே மாணவ, மாணவிகள் இதுபோன்று போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதும், வகுப்பறையிலேயே மது அருந்தும் கலாச்சாரம் ஊடுருவி இருப்பதும் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.


 போதைப் பொருட்களைப் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

உணவில் புழு இருந்ததாக புகார் – கோவை இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !!!

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவர்கள் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரி விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் புழு இருந்ததாக சில மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள், உணவின் தரம் மற்றும் விடுதி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி, இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து, மாணவர்களின் புகாரைத் தொடர்ந்து உணவின் தரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கல்லூரிக்கு வந்து விடுதி மற்றும் உணவு தயாரிக்கப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு தயாரிக்கும் முறை, சுகாதார நிலை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, கல்லூரிக்கு நாளை மதியம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதன், 12 ஆகஸ்ட், 2026

ஒயிட் ரைஸ்ல புழு இருக்காதே", அவரைக்காய்ல தான் இருக்கும்" என நக்கலடித்த இந்துஸ்தான் கல்லூரி விடுதி ஊழியர் - அலட்சியப் பதிலால் மாணவர்கள் கொந்தளிப்பு !!!

ஒயிட் ரைஸ்ல புழு இருக்காதே", அவரைக்காய்ல தான் இருக்கும்" என நக்கலடித்த இந்துஸ்தான் கல்லூரி விடுதி ஊழியர் - அலட்சியப் பதிலால் மாணவர்கள் கொந்தளிப்பு !!!

 ஒயிட் ரைஸ்ல புழு இருக்காதே", அவரைக்காய்ல தான் இருக்கும்" என நக்கலடித்த இந்துஸ்தான் கல்லூரி விடுதி ஊழியர் - அலட்சியப் பதிலால் மாணவர்கள் கொந்தளிப்பு !!!

​கோவை, இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் பரிமாறப்படும் உணவில் புழுக்கள் மிதப்பதாக மாணவர்கள் எழுப்பிய தகுந்த புகாருக்கு, "மேடம் ஒயிட் ரைஸ்ல தான் புழு இருக்காதே, அது அவரைக்காய்லதான் இருக்கும்" என விடுதி நிர்வாக ஊழியர் மிக அலட்சியமாகவும் நக்கலாகவும் பதிலளித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் உடல்நலத்தோடு நேரடியாக விளையாடும் வகையில் அமைந்த இந்த வீடியோ, கல்லூரி வளாகத்திற்குள்ளும் சோஷியல் மீடியாவிலும் காட்டுத்தீ போலப் பரவி மாணவர்களைப் போர்க்கொடி தூக்க வைத்து உள்ளது.

​விடுதி மற்றும் கல்லூரி உணவகங்களில் தொடர்ந்து தரம் குறைந்த மற்றும் சுகாதாரமற்ற உணவே வழங்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டும் மாணவர்கள், இதுகுறித்து ஏற்கனவே உணவு மேலாண்மைத் துறை (Food Management) மற்றும் உணவு பாதுகாப்புத் துறை (Food Safety) அதிகாரிகளிடம் பலமுறை புகார்களைத் தட்டியும் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை எனத் தோலுரித்துக் காட்டுகின்றனர். புகார்களைக் கண்டும் காணாமல் இருக்கும் அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கும், மாணவர்களின் நியாயமான கேள்விகளுக்குப் பொறுப்பற்ற பதில்களை அள்ளி வீசும் விடுதி நிர்வாக ஊழியர்களின் திமிரான அணுகுமுறையும் மாணவர் சமூகத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனியும் காலத்தைக் கடத்தாமல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக விடுதி உணவகத்தில் சோதனையிட்டு, சுகாதாரமற்ற உணவை வழங்கும் கல்லூரி நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வ அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் ஆவேசத்துடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

கோவையில் கல்லூரி விடுதியில் இருந்து நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து செல்லும் மாணவர்கள் ; வீடியோ வைரலால் பெற்றோர்கள் அதிர்ச்சி !!!

கோவையில் கல்லூரி விடுதியில் இருந்து நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து செல்லும் மாணவர்கள் ; வீடியோ வைரலால் பெற்றோர்கள் அதிர்ச்சி !!!

 கோவையில் கல்லூரி விடுதியில் இருந்து நள்ளிரவில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து செல்லும் மாணவர்கள் ; வீடியோ வைரலால் பெற்றோர்கள் அதிர்ச்சி !!!

விபரீதம் நேர்ந்தால் யார் பொறுப்பு? கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை !!!

 கோவை மாவட்டம், சூலூரில் இயங்கி வரும் பிரபல ஆர்.வி.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (RVS College of Arts and Science) விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள், நள்ளிரவு நேரத்தில் விடுதி காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து வெளியே செல்லும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இந்த விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

 இந்நிலையில், நள்ளிரவில் விடுதிக் காம்பவுண்ட் சுவரில் ஏறி ஆபத்தான முறையில் வெளியே செல்லும் காட்சிகளைச் அப்பகுதியில் சுற்றி உள்ள குடியிருப்பில் ஒருவர் செல்போனில் பதிவு செய்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

 நள்ளிரவில் சுவரேறி குதித்துச் செல்லும் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் அல்லது விபரீதம் நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது ? விடுதியை விட்டு வெளியேறும் மாணவர்கள் இரவு நேரங்களில் ஏதேனும் சட்டவிரோத அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அதற்கான பழியும் கல்லூரிக்கும் மற்ற மாணவர்களுக்கும் அல்லவா சேரும் ? பெற்றோர் நம்பிக்கையுடன் தங்களது பிள்ளைகளைக் கல்லூரியில் சேர்த்து விடுதிப் பாதுகாப்பில் ஒப்படைத்து உள்ள நிலையில், சில மாணவர்களின் இதுபோன்ற ஒழுங்கீனச் செயல்கள் பிற மாணவர்களுக்கும் கெட்ட பெயரை உருவாக்குகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் மற்றும் விடுதிக் காப்பாளர் உடனடியாக தலையிட்டு, சுவரேறி குதித்துத் தப்பும் மாணவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விடுதிப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

சுதந்திர தினக் கொண்டாட்டம் : குழந்தைகளைக் கவர சோட்டா பீம் கார்ட்டூன் மூவர்ணப் பொருட்கள் - ஆர்வம் காட்டும் மாணவர்கள் & ஆசிரியர்கள் !!!

சுதந்திர தினக் கொண்டாட்டம் : குழந்தைகளைக் கவர சோட்டா பீம் கார்ட்டூன் மூவர்ணப் பொருட்கள் - ஆர்வம் காட்டும் மாணவர்கள் & ஆசிரியர்கள் !!!

 சுதந்திர தினக் கொண்டாட்டம் : குழந்தைகளைக் கவர சோட்டா பீம் கார்ட்டூன் மூவர்ணப் பொருட்கள் - ஆர்வம் காட்டும் மாணவர்கள் & ஆசிரியர்கள் !!!

கோவை, டவுன்ஹால் கடைகளில் குவியும் சுதந்திர தின அலங்காரப் பொருட்கள் : தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து ஆசிரியர்கள் பெருமிதம் !!!

 நாட்டின் 80-வது சுதந்திர தின விழா விரைவில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் குழந்தைகளைக் கவரும் வகையில் 'சோட்டா பீம்' போன்ற பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பொறிக்கப்பட்ட மூவர்ணக் கொடி அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. இவற்றை ஆசிரியர்களும், குழந்தைகளும் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகரின் முதன்மை வர்த்தகப் பகுதியான டவுன்ஹால் கடைகளில், தேசியக் கொடியின் மூவர்ணத்தில் வண்ணமயமான தோரணங்கள், பேட்ஜ்கள், குடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனைக்காகப் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக, இந்த ஆண்டு புதுமையாகக் குழந்தைகள் அதிகம் விரும்பும் 'சோட்டா பீம்' போன்ற முன்னணி கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தேசியக் கொடியை ஏந்தி நிற்பது போன்ற படங்களும், தோரணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இது குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது. 

"எங்கள் பள்ளியில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவை மிகக் கோலாகலமாகக் கொண்டாடுவோம். அதற்காகப் பொருட்கள் வாங்க கோவை டவுன்ஹால் பகுதிக்கு வந்தோம். இந்த ஆண்டு தோரணங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் மிகவும் புதுமையாகவும், நவீனமாகவும் வந்து உள்ளன.

சிறார்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கும் போது, குழந்தைகள் மிக எளிதாகத் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தையும், அதன் பெருமையையும் புரிந்து கொள்வார்கள். கடைகள் முழுவதும் மூவர்ணத்தில் காட்சி அளிப்பது காண்போரைக் பரவசப்படுத்துகிறது.

 பள்ளிகளிலும் மூவர்ணக் கொடியின் வண்ணங்களுக்கான அர்த்தங்களை மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறோம்.

 தற்போதைய தலைமுறைச் சிறுவர்கள் தேசப்பற்றையும், கொடியின் பெருமையையும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர்" எனக் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களை அலங்கரிக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் டவுன்ஹால் பகுதியில் திரண்டு வந்து பொருட்களை உற்சாகமாக வாங்கிச் செல்வதால் வியாபாரம் சுடர்பிடித்து உள்ளது.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

 இரவு உணவில் புழு கிடந்ததாகக் குற்றச்சாட்டு ; கற்பகம் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் - பரபரப்பு !!!

உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: நள்ளிரவில் திரண்ட மாணவர்களால் பதற்றம் !!!

 கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழக விடுதி உணவகத்தில் வழங்கப்பட்ட இரவு உணவில் புழுக்கள் கிடந்ததாகக் கூறி, மாணவர்கள் நள்ளிரவில் திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை - பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி பகுதியில் இயங்கி வரும் கற்பகம் கல்லூரியில் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கிப் பயின்று வருகின்றனர்.

 இந்நிலையில், நேற்று இரவு விடுதி உணவகத்தில் மாணவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டு உள்ளது. அப்போது, வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், இதுகுறித்து விடுதி காப்பாளர் மற்றும் உணவகப் பொறுப்பாளர்களிடம் உடனடியாகப் புகார் தெரிவித்து உள்ளனர்.

 ஆனால், நிர்வாகத் தரப்பில் உரியப் பதிலோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த நூற்றுக் கணக்கான மாணவர்கள் விடுதி வளாகத்திற்குள் ஒன்று திரண்டு திடீர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 "தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவை வழங்கி மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம்" என முழக்கங்களை எழுப்பியதால் நள்ளிரவில் அங்குப் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

சம்பவ இடத்திற்கு வந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "உணவின் தரத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

 இருப்பினும், மாணவர்களின் நலன் கருதி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வியாழன், 30 ஜூலை, 2026

 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் புத்தகம்: தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு - முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்து விளக்கம் அமைச்சர் ராஜ்மோகன் !!!

6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் புத்தகம்: தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு - முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்து விளக்கம் அமைச்சர் ராஜ்மோகன் !!!

 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் புத்தகம்: தனியார் பள்ளிகள் கட்டணத்தைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்புக் குழு - முதலமைச்சர் விஜய்யின் கர்நாடகப் பயணம் குறித்து விளக்கம் அமைச்சர் ராஜ்மோகன் !!!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்திருப்பதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

"அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்த கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதால்தான் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது," என்று அமைச்சர் தெரிவித்தார்.

கணினி அறிவியல் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், ஆறாம் வகுப்பு முதலே கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கணினி அறிவியல் பயிற்றுநர்கள் தொடர்பான முன்னெடுப்புகளும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை வெளிப்படையாகக் கண்காணிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். அந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும் என்றார்.

மேலும், பள்ளிகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், மாணவர்கள் கற்றலுக்கு ஏற்ற சூழலாகவும் பராமரிப்பதற்காக பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க, முதலமைச்சர் விஜய் அவர்களிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் கர்நாடகா பயணம் மேற்கொள்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "முதலமைச்சரின் பயணத் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் குறித்து அவரது அலுவலகமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இது இரு மாநிலங்கள் தொடர்புடைய முக்கியமான மற்றும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதால் உடனடியாக கருத்து தெரிவிக்க முடியாது," என்றார்.

'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "அந்தத் திரைப்படம் குறித்து அதனுடன் தொடர்புடையவர்களே கருத்து தெரிவிக்க வேண்டும். அதற்கு அமைச்சர் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை," என்று கூறினார்.

ஞாயிறு, 26 ஜூலை, 2026

9 வயதில் உலகை வியக்க வைத்த கோவை சிறுவன்... 'ரியோ மியா' சிறார் நாவல் எழுதி அசத்தல் : 320 திருக்குறள் மனப்பாடம், புத்தக வாசிப்பால் சாதித்த கவின் சொற்கோ !!!

9 வயதில் உலகை வியக்க வைத்த கோவை சிறுவன்... 'ரியோ மியா' சிறார் நாவல் எழுதி அசத்தல் : 320 திருக்குறள் மனப்பாடம், புத்தக வாசிப்பால் சாதித்த கவின் சொற்கோ !!!

9 வயதில் உலகை வியக்க வைத்த கோவை சிறுவன்... 'ரியோ மியா' சிறார் நாவல் எழுதி அசத்தல் : 320 திருக்குறள் மனப்பாடம், புத்தக வாசிப்பால் சாதித்த கவின் சொற்கோ !!!

கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகி மெகா வரவேற்பைப் பெற்ற நாவல்; வீட்டில் வளர்த்த பூனை, நாயைக் கதாபாத்திரமாக்கி பிரம்மாண்ட படைப்பு!

கோவை, வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், ஜீவிதா தம்பதியின் 9 வயது மகன் கவின் சொற்கோ. பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறான். கவின் சொற்கோவிற்கு திருக்குறள் மற்றும் கதை புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தற்போது 320 திருக்குறள்களை அகர வரிசைப்படியும், அதிகாரம் அல்லது வரிசை எண் கூறினாலும் பிழையில்லாமல் ஒப்புவித்து அசத்தி வருகிறான்.

இதேபோல கதை மற்றும் பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் வாசிப்பதிலும் இருந்த ஆர்வம், அவனை ஒன்பது வயதிலேயே எழுத்தாளராக மாற்றியுள்ளது. கவின் சொற்கோ எழுதிய 'ரியோ மியா' என்ற சிறார் நாவல் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. தனது வீட்டில் வளர்ப்பு பிராணிகளாக உள்ள நாய் மற்றும் பூனையை வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக கூறும் கவின் சொற்கோ, அறிவை வளர்க்க புத்தக வாசிப்பு அவசியம் தேவை என வலியுறுத்துகிறான்.

சனி, 25 ஜூலை, 2026

ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

 ஒன்றரை கோடி செலவாகும்னு பயந்தோம்... இப்போ டாக்டர் கனவு நனவாகிடுச்சு!’ - கோவை மாணவி காவியஶ்ரீக்கு வானதி சீனிவாசன் நேரில் வாழ்த்து !!!

 எளிமையான தொழிலாளி மகள் நீட் தேர்வில் வெற்றி: தையல் கடைக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பா.ஜ.க மகளிர் அணித் தலைவி வானதி !!!

 கோவையில் கடந்து நீட் (NEET) தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ள எளிமையான குடும்பத்து மாணவி காவியஶ்ரீயை பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து ஆரத்தழுவி வாழ்த்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

கோவை, கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி, பேரூர் காளம்பாளையத்தில் ஒரு சிறிய தையல் கடை நடத்தி குடும்பத்தை நடத்தி வருகிறார்.

 இத்தகைய எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த இவர்களது மகள் காவியஶ்ரீ, சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்குத் தகுதி அடைந்து உள்ளார்.

இச்செய்தி அறிந்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், காளம்பாளையத்தில் உள்ள உமா மகேஸ்வரியின் தையல் கடைக்கே நேரில் சென்று, மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன்.

நீட் தேர்வின் பயன்கள் மற்றும் எதிர்கால மருத்துவக் கல்வி வாய்ப்புகள் குறித்துப் பெற்றோரைக் கேட்டறிந்தார்.

அப்போது வானதி சீனிவாசனிடம் நெகிழ்ச்சியுடன் பேசிய மாணவியின் தாய் உமா மகேஸ்வரி, "எங்க உறவுக்காரப் பெண் ஒருவர் முன்பு டாக்டர் படிக்க ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல செலவு செஞ்சாங்க. ஆனா, இன்னைக்கு நீட் தேர்வு வந்ததால எங்களைப் போன்ற எளிமையான கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகளும் பெரிய தொகை செலவில்லாமல், மதிப்பெண் திறமையின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது" எனக் கூறினார். மேலும், தான் நடத்தும் தையல் கடையைப் பிரதமரின் ‘முத்ரா கடன் திட்டம்’ மூலமே தொடங்கியதாகக் குறிப்பிட்டு, பெண்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் திட்டங்கள் பெரும் உறுதுணையாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

புதன், 22 ஜூலை, 2026

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI போராட்டம் : ஜல்லிக்கட்டு பாணி போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த மாணவர்கள் - தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்!!!

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI போராட்டம் : ஜல்லிக்கட்டு பாணி போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த மாணவர்கள் - தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்!!!

 டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்... ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI போராட்டம் : ஜல்லிக்கட்டு பாணி போராட்டம் வெடிக்கும் என எச்சரித்த மாணவர்கள் - தூக்கிச் சென்று கைது செய்த போலீஸ்!!!

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல்: ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கோவையில் DYFI, SFI அமைப்பினர் தீவிர போராட்டம்! போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் கைது செய்தனர்.

இந்திய நாட்டின் கல்வியைப் பாதுகாக்கவும், மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும்" என எச்சரிக்கை.

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லில் மாணவர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து DYFI திடீர் ஊர்வலம்.

திடீர் கண்டன ஊர்வலத்தால் கோவைமாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள BSNL அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்ததனர் அப்போது பேசிய அவர்கள்.

கடந்த ஜூன் 20 முதல் ஒன்றிய கல்வி அமைச்சரின் வீட்டின் முன் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சோனம் வாசிங்க் உள்ளிட்ட மாணவர்களை டெல்லி காவல்துறை கொடூரமான முறையில் தாக்கி கைது செய்துள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, கோவையில் DYFI மற்றும் SFI அமைப்புகள் சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் போராட்டத்திற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

பாராளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் போராடச் சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மருத்துவக் காவலில் வைக்கப்பட்டுள்ள சோனம் வாசிங்க் உள்ளிட்ட மாணவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மத்திய அரசின் கல்விக் கொள்கையைக் கண்டித்தும், நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்திய நாட்டின் கல்வியைப் பாதுகாக்கவும், மாணவர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் கோவையில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்படும்" எனப் போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலிசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

புதன், 15 ஜூலை, 2026

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி - அரசகுமாருக்கு எதிராக குவியும் புகார்கள் !!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி - அரசகுமாருக்கு எதிராக குவியும் புகார்கள் !!!

 தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி - அரசகுமாருக்கு எதிராக குவியும் புகார்கள் !!!

தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைதான அரசகுமாருக்கு எதிராக, இதுவரை 59 பள்ளிகளின் சார்பில் புகாரளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சாலி கிராமத்தில் 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்' என்ற பெயரில் பதிவு செய்யப்படாத அமைப்பை நடத்தி வந்த அரசகுமார், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித்தரம் உயர்வு, டDTCP மற்றும் CMDA திட்ட அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை எளிதாக பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், உறுதி அளித்தபடி எந்த அனுமதியையும் பெற்றுத் தராததுடன், வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அரசகுமார் ஏமாற்றி வந்து உள்ளார்.

இந்நிலையில், அவர் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசகுமாரை ஜூன் மாத இறுதியில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த மோசடி தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 59 தனியார் பள்ளிகளிடம் இருந்து மத்திய குற்றப் பிரிவுக்கு புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். 59 பள்ளிகள் அளித்து உள்ள புகார்களில் மட்டும் 7 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

போலீசாரின் விசாரணையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலமாக பல கோடி ரூபாயை அரசகுமார் பெற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதை அடுத்து, கைது செய்யப்பட்ட அரசகுமாரின் 24 வங்கி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் எங்கெங்கு சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் முத்துக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் அரசகுமாரிடம் பணம் கொடுத்து ஏமாந்து, புகார் அளிக்காத பள்ளி நிர்வாகிகளின் விவரங்களையும் திரட்டும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.