வனவிலங்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வனவிலங்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 செப்டம்பர், 2026

 "விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ;  அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

"விவசாய நிலத்தில் 12 அடி நீள ராஜநாகம்" ; அலறி ஓடிய தொழிலாளர்கள் - அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்த மேட்டுப்பாளையம் வனத்துறை!

தேக்கம்பட்டியில் சுற்றிய கொடிய விஷப்பாம்பு: காரமடை அருகே பரபரப்பு!


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள காரமடை தேக்கம்பட்டி பகுதியில் விவசாய நிலத்தில் பதுங்கி இருந்த சுமார் 12 அடி நீளமுள்ள கொடிய விஷமுடைய ராஜநாகம்  உயிருடன் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதி பவானி ஆற்றின் கரையோரத்திலும் வனப்பகுதியை ஒட்டியும் அமைந்து உள்ளதால், காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இங்கு அதிகமாகக் காணப்படும். தென்னை, வாழை, பாக்கு மற்றும் காய்கறி விவசாயம் இங்குப் பிரதானமாக நடைபெற்று வருகிறது.

​இந்நிலையில், தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜசேகரன் (55) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்த புதர் பகுதிக்குள் பிரம்மாண்டமான நாகப்பாம்பு ஒன்று சீறிக்கொண்டு இருப்பதைக் கண்ட பணியாளர்கள், அதிர்ச்சியிலும், அச்சத்திலும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

உடனடியாக இது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

​புதருக்குள் பதுங்கி இருந்த அந்தப் பாம்பைப் பரிசோதித்த போது, அது மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்ட சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் என்பது தெரியவந்தது.

 வனத்துறையினர் சாதுரியமாகச் செயல்பட்டு, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் அந்த ராஜநாகத்தைப் பாதுகாப்பான முறையில் உயிருடன் பிடித்தனர்.

பிடிபட்ட 12 அடி ராஜநாகத்தைப் பிளாஸ்டிக் பேரலில் பாதுகாப்பாக அடைத்த வனத்துறையினர், அதைத் தேக்கம்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர்.

​விவசாய நிலத்திற்குள் கொடிய விஷமுடைய 12 அடி ராஜநாகம் புகுந்து பிடிபட்ட சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


புதன், 9 செப்டம்பர், 2026

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

"நள்ளிரவில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கிய தகரக் கொட்டகையை நொறுக்கிய ஒற்றை யானை" ; அலறி அடித்து ஓடி உயிர் தப்பிய தொழிலாளர்கள் - கோவையில் பரபரப்பு!

2 மணி நேரம் போராடி வனத்துறையினர் விரட்டினர்: தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அச்சம்!

 கோவை, துடியலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை உடைத்துச் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வனக்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.

​கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் லட்சுமி நகர் (பேஸ் 3) ஆகிய பகுதிகளில் சுற்றித் திரிந்த அந்த யானை, அங்கு இருந்த ஒரு விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பசுந்தீவனங்களைச் சாப்பிட்டதுடன், அங்கே குரைத்த நாய்களையும் ஆக்ரோஷமாகத் துரத்தியது.

இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் அருகில் உள்ள கட்டிடக் கட்டுமானப் பணிக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை நோக்கி அந்த ஒற்றை யானை நகர்ந்தது. கொட்டகையின் தகரங்களை உடைத்து நொறுக்கிய யானை, உள்ளே வைக்கப்பட்டு இருந்த அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தியது.

​யானை கொட்டகையைத் தாக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்த வடமாநிலத் தொழிலாளர்கள், உயிருக்குப் பயந்து அலறி அடித்தபடி ஓடிச் சென்று அருகில் இருந்த மற்றொரு கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்து உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாகப் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், குடியிருப்புப் பகுதியில் நின்று இருந்த ஒற்றை யானையைக் பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அதிகாலை வேளையில் யானை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய இடங்களில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

​அதேவேளையில், இரவில் இப்பகுதிகளில் அடிக்கடி அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு ஏற்படுவதால், இருளில் யானை வருகையைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த பீதியில் உறைந்து உள்ளனர். எனவே, மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிய வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

 "பாரதியார் பல்கலைக் கழகத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் காட்டுப் பன்றிகள்" ; பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ!

"பாரதியார் பல்கலைக் கழகத்தில் சர்வ சாதாரணமாக உலா வரும் காட்டுப் பன்றிகள்" ; பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அதிர்ச்சி வீடியோ!

தண்ணீர், உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள்: மாணவர்களுக்கு வனத்துறை தீவிர எச்சரிக்கை!

​ கோவை, பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் காட்டுப் பன்றி ஒன்று சர்வ சாதாரணமாக உலா வந்து, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழங்களை உண்ணும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, மருதமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள அமைதியான சூழலில் பாரதியார் பல்கலைக் கழகம் அமைந்து உள்ளது. அடர்ந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருப்பதால், பல்கலைக் கழக வளாகத்திற்குள் சர்வ சாதாரணமாக மான், முயல், காட்டுப்பன்றி, யானைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது நுழைவது வழக்கமாகும்.

​தற்போது கோடை மழை போதிய அளவு பெய்யாததால், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால், உணவையும் தண்ணீரையும் தேடி வனவிலங்குகள் இரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் குறைந்த நேரங்களிலும் வன எல்லையை விட்டு வெளியேறி பல்கலைக் கழக வளாகத்திற்குள் படையெடுத்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் பாரதியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டுப்பன்றி ஒன்று, அங்கு கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும், அழுகிய பழங்களையும் சர்வ சாதாரணமாகத் தேடி உண்ணும் காட்சிகள் பதிவாகி உள்ளன. வனவிலங்குகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது அவற்றின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதால், இது இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வளாகத்திற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் மற்றும் பல்கலைக் கழக நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

​பல்கலைக் கழக விடுதிகளில் தங்கி உள்ள மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் தேவையற்ற முறையில் வெளியே சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

​இரவு நேரக் காவல் பணியில் ஈடுபடும் பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

​வளாகத்திற்குள் வனவிலங்குகளைக் கண்டால் அருகில் செல்லவோ, அவற்றுக்கு உணவு வழங்கவோ கூடாது.

​மேலும், பல்கலைக் கழக வளாகத்தில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதைத் தடுத்து, வனவிலங்குகள் உள்ளே நுழைவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேராசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திங்கள், 7 செப்டம்பர், 2026

 "காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

"காலில் இரும்புக் கம்பியுடன் தவித்த பெண் யானை" - ட்ரோன் மூலம் கண்காணித்து வனத்துறை அதிரடி சிகிச்சை!

சிறுமுகை காப்பக்காடு பகுதியில் கும்கிகள், 5 மருத்துவர்கள் உதவியுடன் மீட்பு : மயக்க ஊசி செலுத்திப் புதுவாழ்வு!

கோவை மாவட்டம், சிறுமுகை வனப்பகுதியில் காலில் ஆழமாக இரும்புக் கம்பி சிக்கி வலியால் தவித்துக் கொண்டு இருந்த பெண் யானையை, வனத்துறையினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வெற்றிகரமாக மயக்க ஊசி செலுத்திச் சிகிச்சை அளித்துக் காப்பாற்றி உள்ளனர். 

கோவை, வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிறுமுகை வனச்சரகத்தைச் சேர்ந்த பெத்திக்குட்டை, உளியூர் காப்பக்காடு பகுதியில் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி வனப் பணியாளர்கள் வழக்கம் போல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு சுற்றித் திரிந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று நடப்பதற்குச் சிரமப்பட்டு மெதுவாக நடந்து செல்வதைக் கவனித்தனர். உன்னிப்பாகப் பார்த்த போது, அந்த யானையின் இடது முன்னங்காலில் தடிமனான இரும்புக் கம்பி ஒன்று ஆழமாகச் சிக்கி, அது காயத்தை ஏற்படுத்தி இருப்பது தெரியவந்தது. இது குறித்து வனப்பணியாளர்கள் உடனடியாகக் கோவை மாவட்ட வன அலுவலருக்கு (DFO) விரிவான தகவல் அளித்தனர்.

காயம் அடைந்த யானைக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வனத்துறை உயர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெறப்பட்டது. கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், சிறுமுகை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர்கள், 60-க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கொண்ட சிறப்பு மீட்புக் குழு அமைக்கப்பட்டது.

யானைக்குப் பாதுகாப்பாகச் சிகிச்சை அளிப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகங்களைச் சேர்ந்த 5 கால்நடை மருத்துவக் குழுவினரும், யானைப் பாகன்களும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள் காயம் அடைந்த யானை எங்குச் செல்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய நவீன ட்ரோன் (Drone) கேமராக்கள் வான்வழியாகப் பயன்படுத்தப்பட்டன. யானையின் நடமாட்டத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த குழுவினர், அதற்குச் சிகிச்சை அளிக்கச் சரியான வாய்ப்புக்காகக் காத்து இருந்தனர்.

சரியான சூழல் அமைந்ததும், நேற்று அடர்ந்த வனப்பகுதிக்கு உள்ளேயே வைத்து அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர்கள் லாவகமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை நிலைகுலைந்து சாய்ந்ததும், சுற்றிலும் பாதுகாப்பை ஏற்படுத்திய மருத்துவக் குழுவினர், யானையின் இடது முன்னங்காலில் ஆழமாகப் பதிந்து இருந்த இரும்புக் கம்பியைச் கவனமாக வெளியே எடுத்தனர். பின்னர் காயம் அடைந்த பகுதிக்குக் கிருமிநாசினி மற்றும் தீவிர நிவாரண மருந்துகளை அளித்துச் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகு, யானைக்கு மயக்கம் தெளிவிப்பதற்கான மாற்று மருந்து செலுத்தப்பட்டது. சில நிமிடங்களிலேயே மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய அந்தப் பெண் யானை, ஆரோக்கியத்துடன் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.

 வனத்துறையினரின் இந்தச் சமயோசிதமான மற்றும் துரிதமான மீட்பு நடவடிக்கை வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்று உள்ளது.

சனி, 5 செப்டம்பர், 2026

 "கோவையில் இருந்து கூடலூர் சென்ற சுற்றுலா பயணிகள் திக் திக்" ; ஜீப்பை ஆக்ரோஷமாகத் துரத்திய ஒற்றைக் காட்டு யானை - பரபரப்பு வீடியோ!

"கோவையில் இருந்து கூடலூர் சென்ற சுற்றுலா பயணிகள் திக் திக்" ; ஜீப்பை ஆக்ரோஷமாகத் துரத்திய ஒற்றைக் காட்டு யானை - பரபரப்பு வீடியோ!

கூடலூர் வனப்பகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி: சாதுரியமாகச் செயல்பட்டுத் தப்பிய ஓட்டுநர்!

 கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்குச் சுற்றுலா சென்ற பயணிகளின் ஜீப் வாகனத்தை ஒற்றைக் காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்திய அதிர்ச்சி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வார விடுமுறையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக இன்று காலை திறந்தவெளி ஜீப் வாகனத்தில் சென்று உள்ளனர்.

​கூடலூரை அடுத்த அடர்ந்த வனப்பகுதிச் சாலையில் வாகனம் சென்று கொண்டு இருந்த போது, வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று, சுற்றுலா பயணிகள் பயணித்த ஜீப் வாகனத்தைக் கண்டு கடும் ஆத்திரம் அடைந்தது. பிளிறியபடி அந்த வாகனத்தை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து துரத்தத் தொடங்கியது.

யானை மிக அருகில் ஆக்ரோஷமாகத் துரத்தி வந்ததைக் கண்டு ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கூச்சலிட்டனர். இருப்பினும், ஜீப்பை இயக்கிய ஓட்டுநர் பதற்றம் அடையாமல் சாதுரியமாக வாகனத்தை வேகப் படுத்திப் முன்னோக்கியும் நகர்த்தி யானையிடம் இருந்து பாதுகாப்பாகத் தப்ப வைத்தார்.

​யானை ஜீப்பை நீண்ட தூரம் ஆக்ரோஷமாகத் துரத்தி வரும் இந்தக் காட்சியை வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். 

இந்தத் திக் திக் நிமிடங்கள் அடங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

 "வெயிலின் கொடுமையால் குட்டையில் இறங்கிய யானைகள்" ; நீராடி மகிழ்ந்த காட்டு யானைகள் - வீடியோ வைரல்!

"வெயிலின் கொடுமையால் குட்டையில் இறங்கிய யானைகள்" ; நீராடி மகிழ்ந்த காட்டு யானைகள் - வீடியோ வைரல்!

பயிர்களைச் சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவலை: வனப்பகுதிக்குள் விரட்டப் பொதுமக்கள் கோரிக்கை!

 கோவை மாவட்டம், காரமடை அருகே நிலவும் கடும் வறட்சி மற்றும் வெயிலின் தாக்கத்தைத் தணிப்பதற்காக, இரு காட்டு யானைகள் குட்டையில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவை மாவட்டம், காரமடையை அடுத்து உள்ள வெள்ளியங்காடு பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

நடப்பு தென்மேற்குப் பருவமழை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொய்த்துப் போனதால், வனப்பகுதிக்குள் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் வனவிலங்குகள் அடிக்கடி அருகில் உள்ள கிராமப்புறங்களுக்குள் ஊடுருவி வருகின்றன.

இந்நிலையில், நேற்று காரமடை வனச்சரகப் பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள குட்டைக்கு வந்து உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், அந்த யானைகள் குட்டை நீருக்குள் இறங்கி நீண்ட நேரமாகக் குளித்து மகிழ்ந்து உள்ளன.

இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், யானைகளை அங்கு இருந்து விரட்டுவதற்காகச் சப்தமிட்டனர். சப்தம் கேட்டு மெதுவாகக் குட்டையிலிருந்து வெளியேறிய இரு யானைகளும், அருகில் இருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்திய பின்னரே மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றன.

காட்டு யானைகள் குட்டையில் இறங்கி நீராடிய இந்த அரிதான காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இருப்பினும், கிராமப் பகுதிகளுக்கு மிக அருகிலேயே உள்ள குட்டையில் யானைகள் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்ததால் வெள்ளியங்காடு பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். எனவே, வனவிலங்குகள் வன எல்லையைத் தாண்டி ஊருக்குள் வராதவாறு வனத்துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வியாழன், 3 செப்டம்பர், 2026

 "வாகன ஓட்டிகளின் நெகிழ்ச்சி செயல்" - குட்டிகளுடன் சாலையைக் கடக்கப் பொறுமையாகக் காத்து இருந்த யானைக் கூட்டம்!

"வாகன ஓட்டிகளின் நெகிழ்ச்சி செயல்" - குட்டிகளுடன் சாலையைக் கடக்கப் பொறுமையாகக் காத்து இருந்த யானைக் கூட்டம்!

ஆனைக்கட்டி சாலையில் நெகிழ்வூட்டும் காட்சி: கவனத்துடன் செயல்பட்ட வாகன ஓட்டிகளுக்குப் பாராட்டுகள்!

 கோவை அருகே ஆனைக்கட்டி மலைப்பாதையில் குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடக்கும் வரை, வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி அமைதியாகக் காத்து இருந்து வழிவிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ள ஆனைக்கட்டி வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

​துடியலூர் - ஆனைக்கட்டி சாலை அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி வனவிலங்குகள் அடிக்கடி சாலையைக் கடப்பது வழக்கம். இதன் காரணமாக, இந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் எப்போதும் மிதமான வேகத்திலும் மிகுந்த கவனத்துடனும் செல்ல வேண்டும் என வனத்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு, ஆனைக்கட்டி சாலையில் குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட யானைகள் அடங்கிய கூட்டம் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்து உள்ளது. அப்போது சாலையில் வாகனங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்ததால், யானைக் கூட்டம் ஆபத்தை உணர்ந்து சாலையோரத்திலேயே அமைதியாகக் காத்து இருந்து உள்ளது.

யானைகள் குட்டிகளுடன் சாலையைக் கடக்கத் தயங்கி நிற்பதைக் கண்ட வாகன ஓட்டிகள், உடனடியாகத் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளைக் குறைத்தும், வாகனங்களைச் சிறிது தூரத்திலேயே நிறுத்தியும் பொறுமை காத்தனர்.

​வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நின்றதை உறுதி செய்த பிறகே, தாய் யானைகள் தங்களது குட்டிகளை நடுவே பாதுகாப்பு அரணாக அழைத்துக் கொண்டு சாலையை நிதானமாகக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. யானைக் கூட்டம் முழுமையாக வனப்பகுதிக்குள் செல்லும் வரை வாகன ஓட்டிகள் சலசலப்பின்றி அமைதியாகக் காத்து இருந்தனர்.

​மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான இந்த இணக்கமான சூழலையும், வாகன ஓட்டிகளின் பொறுப்பான செயலையும் அங்கு இருந்த சிலர் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், வனவிலங்குகளுக்கு மதிப்பளித்த வாகன ஓட்டிகளுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

 "பூட்டிய உணவக சமையலறைக்குள் அரிய பாம்பு" ; பத்திரமாக மீட்ட கோவையில் வன உயிரின ஆர்வலர்கள் அமைப்பினர்!

"பூட்டிய உணவக சமையலறைக்குள் அரிய பாம்பு" ; பத்திரமாக மீட்ட கோவையில் வன உயிரின ஆர்வலர்கள் அமைப்பினர்!

வெள்ளிக்கோள்வரையன் என அடையாளம் காணப்பட்ட நஞ்சற்ற பாம்பு:  கவனம் தேவை என அறிவுறுத்தல்!

​ கோவை, நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்த உணவகத்தைத் திறந்த போது, சமையலறைக்குள் மறைந்து இருந்த ‘வெள்ளிக்கோள்வரையன்’ பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் சாலை - நேதாஜி நகர் பகுதியில் உணவகம் ஒன்று நீண்ட நாட்களாகப் பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 30 அன்று அந்த உணவகத்தை மீண்டும் திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்து தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

​அப்போது, போதிய வெளிச்சமின்றி இருந்த சமையலறைக்குள் வழிதவறி வந்த அரிய வகை பாம்பு ஒன்று தஞ்சம் புகுந்து மறைந்து இருப்பதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உடனடியாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு (Wildlife & Nature Conservation Trust - WNCT) தகவல் தெரிவிக்கப்பட்டது.

​தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த WNCT மீட்புக் குழுவினர் மோகன் மற்றும் மோனா ஆகியோர், ஊழியர்களுக்கு எவ்வித அச்சமும் ஏற்படாத வகையில், சமையல் அறைக்குள் மறைந்து இருந்த அந்தப் பாம்பைச் சாதுரியமாகப் பாதுகாப்பாக மீட்டனர்.

மீட்கப்பட்ட பாம்பு குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவிக்கையில், "இது 'வெள்ளிக்கோள்வரையன்' (Common Wolf Snake) வகை பாம்பாகும். இவ்வகை பாம்புகள் உடலமைப்பில் ஆபத்தான 'கட்டுவிரியன்' பாம்பு போன்று வெள்ளை நிறக் கோடுகளுடன் காட்சி அளித்தாலும், இவை மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் விளைவிக்காத முற்றிலும் நஞ்சற்ற (Non-Venomous) சாதுவான பாம்புகளாகும். வீடுகளில் உள்ள பூச்சிகள் மற்றும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் இயல்புடையவை" எனத் தெரிவித்தனர்.

​நீண்ட நாட்களாகப் பூட்டி இருக்கும் கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்கும் போது, போதிய வெளிச்சத்துடன் கவனமாகச் சென்று சுத்தம் செய்வதே பாதுகாப்பானது என்றும், பாம்புகள் தென்பட்டால் அடித்துக் கொல்லாமல் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் WNCT அமைப்பினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

 "குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை" : கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு சுடலை காளியம்மன் கோவில் அருகே பொது மக்களும், பக்தர்களுக்கு எச்சரிக்கை!

"குட்டியுடன் முகாமிட்ட காட்டு யானை" : கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு சுடலை காளியம்மன் கோவில் அருகே பொது மக்களும், பக்தர்களுக்கு எச்சரிக்கை!

காப்பித் தோட்டத்தில் தஞ்சம் புகுந்த தாய்-குட்டி யானைகள்: வனத்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்க விவசாயிகள் அறிவுரை!

 மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு, பாமரபாறைப் பகுதியில் குட்டியுடன் ஒற்றைக் காட்டு யானை காப்பித் தோட்டத்தில் முகாமிட்டு உள்ளதால், அப்பகுதிப் பொதுமக்கள் மற்றும் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் காப்பி, ஆரஞ்சு, சௌசௌ மற்றும் பீன்ஸ் போன்ற பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.

 பாறைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த காலங்களில் யானைகளின் நடமாட்டம் அரிதாகவே இருந்தது.

ஆனால், சமீபகாலமாக வனப் பகுதியில் இருந்து உணவையும், தண்ணீரையும் தேடி யானைகள் பண்ணைக்காடு மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் ஊடுருவுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று பண்ணைக்காடு அருகே உள்ள 'பாமரபாறை' பகுதியில் உள்ள விவசாயக் காடுகளுக்குள் குட்டியுடன் ஒற்றைக் காட்டு யானை சுற்றித் திரிவதைப் பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த யானை குட்டியுடன் சிறிது தூரம் மட்டுமே நகர்ந்து, அப்பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுடலை காளியம்மன் கோவில் அருகே அமைந்து இருக்கும் காப்பித் தோட்டத்திற்குள் சென்று தஞ்சம் அடைந்தது.

யானை குட்டியுடன் காப்பித் தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதை அங்கு இருந்த சில இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு, "சுடலை காளியம்மன் கோவில் பகுதிக்கு யாரும் தனியாகச் செல்ல வேண்டாம்" என ஊர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாலை நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியைத் தற்காலிகமாகக் கைவிட்டு அங்கு இருந்து சென்று விட்டனர். இதன் காரணமாக, அப்பகுதி வழியாகச் செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுடலை காளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

 "போ சாமி தெக்கல!" - அனுபவி முருகன் கோயில் படியில் நின்ற யானையிடம் கெஞ்சிய பக்தர்!

"போ சாமி தெக்கல!" - அனுபவி முருகன் கோயில் படியில் நின்ற யானையிடம் கெஞ்சிய பக்தர்!

அரிசி, சிலிண்டருடன் சென்ற பக்தர்களைக் கண்டு ஆக்ரோஷம்: கோவையில் அசாத்திய காட்சிகள் வைரல்!

 கோவை அருகே அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் படிக்கட்டில் உணவுப் பொருட்களுடன் சென்ற பக்தர்களைத் தாக்க முயன்ற ஒற்றைக் காட்டு யானையிடம், "போ சாமி தெக்கல!" எனப் பக்தர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து வழி கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, மாவட்டம் சின்ன தடாகம் அருகே புகழ்பெற்ற அனுபவி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்து உள்ளது. மலை மீது அமைந்து உள்ள இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், சுவாமிக்கு அன்னதானம் மற்றும் உணவு சமைப்பதற்காகச் சிலர் அரிசி, பருப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களைச் சுமந்தபடி படிக்கட்டுகளில் ஏறிச் சென்று கொண்டு இருந்தனர்.

​அப்போது, அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரெனப் படிக்கட்டின் குறுக்கே வந்து நின்று கொண்டது.

சுமைகளுடன் வந்த பக்தர்களைக் கண்ட அந்த ஒற்றை யானை, ஆக்ரோஷமான தோரணையில் அவர்களை நோக்கி நகர முயற்சித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் படிக்கட்டுகளிலேயே அஞ்சியபடி உறைந்து நின்றனர்.

​நீண்ட நேரமாக அந்த யானை படிக்கட்டை விட்டு நகர மறுத்ததால், மேலே கோயிலுக்குச் செல்ல வழியின்றி பக்தர்கள் கடும் தவிப்பிற்கு உள்ளாகினர்.

அப்போது கூட்டத்தில் இருந்த பக்தர் ஒருவர் சற்றும் தைரியத்தைக் கைவிடாமல், யானையைப் பார்த்து, "போ சாமி தெக்கல (தெற்கு திசையை நோக்கி)... எங்களுக்கு வழி விடு சாமி!" என மிகவும் மரியாதையுடனும் உருக்கமாகவும் வேண்டுகோள் விடுத்தார்.

​பக்தரின் அந்த வேண்டுகோளைக் கேட்டது போல, அந்த யானையும் மெதுவாகப் படிக்கட்டுகளை விட்டு விலகித் தெற்குப் பக்க வனப்பகுதியை நோக்கி நடந்து சென்றது. 

​இந்த அசாத்தியமான மற்றும் நெகிழ்ச்சிகரமான காட்சியை அங்கு இருந்த மற்றொரு பக்தர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வைரலாகி வருகிறது.

அனுபவி சுப்பிரமணியசுவாமி கோயில் வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளதால், மாலை மற்றும் அதிகாலை வேளைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் மலையேற வேண்டும் என வனத்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2026

"ஹாயாக படுத்து ரெஸ்ட் எடுத்த கொம்பன்" ; வால்பாறையில் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்திய யானை!

"ஹாயாக படுத்து ரெஸ்ட் எடுத்த கொம்பன்" ; வால்பாறையில் சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்திய யானை!

முடீஸ் துண்டுச் சோலையில் நிம்மதியாக ஓய்வெடுத்த யானை: சமூக வலைதளங்களில் வைரலாகும் அழகிய காட்சி!

 கோவை மாவட்டம், வால்பாறையில் காட்டு யானை ஒன்று எவ்வித அச்சமுமின்றி ஹாயாகத் தரையில் படுத்து ஓய்வெடுத்து விட்டு, பின்னர் நிம்மதியாக எழுந்து சென்ற அழகிய காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து உள்ளதுடன் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், வால்பாறை மற்றும் அதனைச் சுற்றி உள்ள தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

​இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள முடீஸ் பகுதிக்கு உட்பட்ட துண்டுச் சோலை வனப்பகுதியில் ஒற்றைக் கொம்பன் யானை ஒன்று உலா வந்து உள்ளது.

அப்போது அப்பகுதிக்கு வந்த அந்த யானை, திடீரெனப் புல்வெளியில் எவ்விதப் பதற்றமுமின்றி ஹாயாகச் சாய்ந்து படுத்து சிறிது நேரம் நிம்மதியாக ஓய்வெடுத்து உள்ளது. வழக்கமாகக் காட்டு யானைகள் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டால் ஆத்திரம் அடைவதோ அல்லது வேகமாக நகர்ந்து செல்வதோ வழக்கமாக இருக்கும்.

​ஆனால், இந்தச் கொம்பன் யானை, "நான் தனியா இருந்தாலும் ஹாயாக ரெஸ்ட் எடுத்துட்டுத் தான் போவேன்" என்ற பாணியில், நிம்மதியாக உறங்கி ஓய்வெடுத்து விட்டுப் பின்னர் மெதுவாக எழுந்து அங்கு இருந்து காட்டுக்குள் சென்று உள்ளது.

யானை ஒன்று இவ்வளவு அமைதியாகத் தரையில் படுத்து ஓய்வெடுக்கும் இந்தக் அரிய காட்சியை அப்பகுதிக்கு வந்து இருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவிட்டு வியப்புடன் ரசித்தனர்.

​தற்போது இந்த வனவிலங்கு ஓய்வெடுக்கும் அழகிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பயனாளர்களின் லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

 "பூனை, கோழிகளைக் கடித்துக் கொல்லும் மர்ம விலங்கு" ; கோவை அருகே மக்கள் பீதி - காட்டுநாய் என வனத்துறை விளக்கம்!

"பூனை, கோழிகளைக் கடித்துக் கொல்லும் மர்ம விலங்கு" ; கோவை அருகே மக்கள் பீதி - காட்டுநாய் என வனத்துறை விளக்கம்!

 "பூனை, கோழிகளைக் கடித்துக் கொல்லும் மர்ம விலங்கு" ; கோவை அருகே மக்கள் பீதி - காட்டுநாய் என வனத்துறை விளக்கம்!

கடந்த ஒரு வாரமாகத் தொடரும் அச்சுறுத்தல்: கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் அவசரக் கோரிக்கை!

​கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவில் உலா வரும் மர்ம விலங்கு ஒன்று பூனைகள் மற்றும் கோழிகளைக் கடித்துக் கொன்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த தாசனூர் பெருமாள் கோவில் வீதியின் பின்புறம் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளை, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று கடித்துக் கொன்றது.

​இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு தாசனூர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே உலா வந்து 4 பூனைகளையும் அதே மர்ம விலங்கு கொடூரமாகக் கடித்துக் கொன்று போட்டு உள்ளது.

அடுத்தடுத்து வளர்ப்புப் பிராணிகள் மற்றும் கோழிகள் பலியாவதாலும், அந்த விலங்கு எதுவென்றே அடையாளம் தெரியாததாலும் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது,

 "ஊருக்குள் உலா வந்து கோழி மற்றும் பூனைகளைக் வேட்டையாடுவது 'காட்டுநாய்' (Wild Dog / Dhole) ஆக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அதனைப் பாதுகாப்பாகப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்து உள்ளனர்.

​இருப்பினும், சிறு குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தாசனூர் பகுதியில் உடனடியாக வனத் துறையினர் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி, கூண்டு வைத்து அந்த விலங்கைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

"ஊருக்குள் வழிதவறி வந்த எறும்புத் திண்ணி" ; கோவையில் பத்திரமாக மீட்டு வனக்காவலரிடம் ஒப்படைப்பு - வனப்பகுதிக்குள் மீண்டும் விட வனத்துறை நடவடிக்கை!

"ஊருக்குள் வழிதவறி வந்த எறும்புத் திண்ணி" ; கோவையில் பத்திரமாக மீட்டு வனக்காவலரிடம் ஒப்படைப்பு - வனப்பகுதிக்குள் மீண்டும் விட வனத்துறை நடவடிக்கை!

 "ஊருக்குள் வழிதவறி வந்த எறும்புத் திண்ணி" ; கோவையில் பத்திரமாக மீட்டு வனக்காவலரிடம் ஒப்படைப்பு - வனப்பகுதிக்குள் மீண்டும் விட வனத்துறை நடவடிக்கை!

கோவை, மருதமலை வனப்பகுதியை அடுத்து உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் கிராமத்திற்குள் வழி தவறி வந்த எறும்புத் திண்ணியை எந்தவொரு காயமுமின்றி உயிருடன் மீட்டனர்.

கோவை, மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து எறும்புத்திண்ணி ஒன்று உணவைத் தேடி வழிதவறி வந்து உள்ளது.

​அரிதான இந்த உயிரினம் குடியிருப்புப் பாதையில் உலா வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து வன உயிரினப் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், அந்த எறும்புத்திண்ணிக்கு எவ்வித பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் மீட்டனர்.

​மீட்கப்பட்ட எறும்புத்திண்ணி உடனடியாக மருதமலை பகுதி வனக்காவலர் சரவணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 எறும்புத் திண்ணியின் உடல்நிலையைப் பரிசோதித்த வனத்துறை அதிகாரிகள், அதனை மருதமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக கொண்டு சென்று விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 "நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

"நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

 "நாய்கள் குரைத்த சத்தம்" - துடியலூர் அருகே நள்ளிரவில் உலா வந்த ஒற்றை யானை!

உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தல்!

 கோவை, துடியலூர் அருகே உள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, வனச்சரகத்திற்கு உட்பட்ட துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

​இந்நிலையில், நேற்று அதிகாலை வேளையில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் மெதுவாக நுழைந்தது.

யானை தெருவுக்குள் வருவதைக் கண்ட அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து பலத்த சத்தத்துடன் குரைக்கத் தொடங்கின. 

இதனை அடுத்து ஒற்றை யானை ​சிறிது நேரம் அங்கு இருந்த மரங்கள் மற்றும் வீடுகளின் அருகே உணவைத் தேடி நின்று கொண்டு இருந்த அந்த யானை, பின்னர் மெதுவாக அங்கு இருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கிச் சென்றது.

கதிர் நாயக்கன்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து காணப்படுவதால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வனத்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரித்து வருகின்றனர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

 "காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை"; நள்ளிரவில் வாழைச் செடியை பிடுங்கி சென்று அட்ராசிட்டி:வைரலாகும் சி.சி.டி.வி!

"காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை"; நள்ளிரவில் வாழைச் செடியை பிடுங்கி சென்று அட்ராசிட்டி:வைரலாகும் சி.சி.டி.வி!

 "காம்பவுண்ட் கதவை உடைத்த ஒற்றை யானை"; நள்ளிரவில் வாழைச் செடியை பிடுங்கி சென்று அட்ராசிட்டி:வைரலாகும் சி.சி.டி.வி!

வாழை மரத்தைச் சேதப்படுத்தி விட்டுத் தப்பியோட்டம்: அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்!

 கோவை, துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கதவை உடைத்து வீட்டின்ள் நுழைய முயற்சி:


கோவை, துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. அங்கு இருந்த வீடொன்றின் காம்பவுண்ட் சுவரின் இரும்பு கதவை தனது பலத்தால் உடைத்து, வீட்டு வளாகத்திற்குள் நுழைய முயன்று உள்ளது.

கதவை உடைத்த பிறகு உள்ளே நுழைய முயன்றது. வீட்டின் அருகே நின்று இருந்த வாழை மரத்தைப் பிடுங்கிச் சேதப்படுத்தியதுடன், அதன் இலைகளைத் தின்று பசியாறியது.

 பின்னர் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக் கொண்டதை உணர்ந்த யானை, மெதுவாக அங்கு இருந்து நகர்ந்து சென்றது.

யானை காம்பவுண்ட் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

யானை நடந்து செல்லும் காட்சி அங்குப் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள அப்பகுதி பொதுமக்கள், இரவில் வீட்டை விட்டு வெளியே வரும் போது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் வனத் துறையினரின் இந்த காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்கும் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் புலி நடமாட்டம் ; லாரி விரட்டிச் சென்று ஒலி எழுப்பும் வீடியோ  இணையத்தில் வைரல் - வனத்துறை விசாரணை!

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் புலி நடமாட்டம் ; லாரி விரட்டிச் சென்று ஒலி எழுப்பும் வீடியோ இணையத்தில் வைரல் - வனத்துறை விசாரணை!

 கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் புலி நடமாட்டம் ; லாரி விரட்டிச் சென்று ஒலி எழுப்பும் வீடியோ  இணையத்தில் வைரல் - வனத்துறை விசாரணை!

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் புலிகள் நடமாடியதைப் பாா்த்த வாகன ஓட்டுநா்கள் அதைப் படம் பிடித்து வலைதளங்களில் பகிா்ந்தனா். இதுகுறித்து ஓட்டுநா்களிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் செவ்வாய்க்கிழமை புலிகள் நடமாடியதைப் பாா்த்த வாகன ஓட்டுநா்கள் அதைப் படம் பிடித்து வலைதளங்களில் பகிா்ந்தனா். இதுகுறித்து ஓட்டுநா்களிடம் வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளது பேரிஜம் பகுதி. இந்தப் பகுதியில் நன்னீா் ஏரி, மதிகெட்டான் சோலை, தொப்புத்தூக்கும் பாறை, அமைதிப் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும், பல்வேறு வகையான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் உள்ளன.

இதைத் தவிா்த்து, பேரிஜம் வனப் பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு, முள்ளம் பன்றி, அரிய வகை விலங்குகள், பறவைகள் உள்ளன.

இதனால், இந்தப் பகுதியைப் பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் வனத் துறையினரிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே இந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

பேரிஜம் பகுதியில் இரு குட்டிகளுடன் புலி நடமாட்டம் இருந்ததை அந்தப் பகுதியில் சென்ற சுற்றுலாப் பயணிகள் விடியோ எடுத்து முகநூல் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களில் வெளியிட்டனா். இதைத் தொடா்ந்து, வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு நடத்தி, பேரிஜம் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லையென அறிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பேரிஜம் பகுதிக்கு செல்ல வனத் துறையினா் அனுமதி வழங்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

இந்த நிலையில், பேரிஜம் பகுதியில் உள்ள மரங்களை டெண்டா் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு சென்ற 2 லாரி ஓட்டுநா்கள் புலி நடமாடியதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனா்.

இந்தத் தகவல் வனத் துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே புலிகள் நடமாட்டத்தால் பேரிஜம் பகுதிக்கு இரு மாதங்களுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை இருந்து வரும் நிலையில், மீண்டும் பேரிஜம் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதை வெளியிட்டதால் யாரும் பேரிஜம் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து பேரிஜம் வன ரேஞ்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் டென்டா் முறையில் மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மரங்களை எடுப்பதற்காக லாரியில் சென்ற இரண்டு ஓட்டுநா்கள் புலி நடமாட்டத்தை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனா். இதுகுறித்து லாரி ஓட்டுநா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

 "குட்டிகள் கடக்க வழிமறித்த தாய் யானை" ; கோவையில் சாலையில் தாய் பாசத்தை உணர்த்திய நெகிழ்ச்சி சம்பவம்!

"குட்டிகள் கடக்க வழிமறித்த தாய் யானை" ; கோவையில் சாலையில் தாய் பாசத்தை உணர்த்திய நெகிழ்ச்சி சம்பவம்!

 "குட்டிகள் கடக்க வழிமறித்த தாய் யானை" ; கோவையில் சாலையில் தாய் பாசத்தை உணர்த்திய நெகிழ்ச்சி சம்பவம்!

வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு அரணான காட்டு யானை: வீடியோ வைரல் - வனத்துறை எச்சரிக்கை!

கோவை, காரமடை அருகே வெள்ளியங்காடு - முள்ளி சாலையில் தனது குட்டி யானைகள் பாதுகாப்பாகச் சாலையைக் கடந்து செல்ல வாகனங்களை வழிமறித்து அரணாக நின்ற ஒற்றைக் காட்டு யானையின் தாய் பாசத்தை உணர்த்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் இருந்து காரமடை வழியாக நீலகிரி மாவட்டத்திற்குச் செல்லும் வெள்ளியங்காடு - முள்ளி சாலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்து உள்ளது. தற்போது எல் நினோ தாக்கத்தால் காரமடை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி இச்சாலையைக் கடப்பது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் குடும்பத்துடன் காரில் சென்ற நபர் ஒருவர் பில்லூர் அணை அருகே சென்ற போது, திடீரென ஒற்றைக் காட்டு யானை ஒன்று வீதியை மறித்து நின்றதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

 வாகனத்தை மீண்டும் இயக்க முயன்ற போது, அந்த யானை முன்னோக்கி வந்து வாகனத்தை எச்சரிப்பது போல் மிரட்டி உள்ளது.

அதே வேளையில், வனப்பகுதியில் இருந்து 4 குட்டி யானைகள் சாலையை கடந்து உள்ளன. குட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாகச் சாலையைக் கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குச் செல்லும் வரை, அந்த ஒற்றை யானை காரை முன்னோக்கிச் செல்ல விடாமல் வழிமறித்து அரணாக நின்று உள்ளது.

குட்டிகள் அனைத்தும் பத்திரமாகச் சென்றதை உறுதி செய்த பிறகு, லேசாக இலை தழைகளை உட்கொண்ட அந்த யானை, காரில் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல் தனது துதிக்கையை உயர்த்திக் காட்டி விட்டு மெதுவாகக் குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை காரில் இருந்த பயணித்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு வெளியிட, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில்:

"வெள்ளியங்காடு - முள்ளி சாலையில் மாலை 6 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. வறட்சி காரணமாக வனவிலங்குகள் சாலையைக் கடப்பதால், மலைப்பாதையில் செல்வோர் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும்.

வனவிலங்குகளைக் கண்டால் துன்புறுத்தவோ, செல்ஃபி எடுக்கவோ, விரட்டவோ கூடாது. மீறினால் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்து உள்ளார்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

"மலையில் இருந்து நழுவினால் மரணம்!" ; கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள் - அச்சுறுத்தலில் மனித உயிரும் வனவிலங்குகளும்!

"மலையில் இருந்து நழுவினால் மரணம்!" ; கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள் - அச்சுறுத்தலில் மனித உயிரும் வனவிலங்குகளும்!

 "மலையில் இருந்து நழுவினால் மரணம்!" ; கட்டாஞ்சி மலைப் பாதையில் அத்துமீறும் இளைஞர்கள் - அச்சுறுத்தலில் மனித உயிரும் வனவிலங்குகளும்!

பெரியநாயக்கன்பாளையம் - காரமடை எல்லைகளில் திறந்தவெளி மதுக்கூடம்: ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தப் பொதுமக்கள் கோரிக்கை! 

​கோவை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல் எல்லைகளுக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலைப் பாதையில், இளைஞர்கள் சிலர் பொறுப்பின்றி அத்துமீறி ஏறி மது அருந்துவதும், பிளாஸ்டிக் கழிவுகளை வீசிச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

சுற்றுலா என்ற பெயரில் இந்த மலைப் பாதைக்கு வரும் இளைஞர்கள் சிலர், வனப்பகுதியின் ஆபத்தை உணராமல் மலை மீது ஏறி மது அருந்துகின்றனர்.

​மேலும், தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொட்டலங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுகளை அங்கேயே வீசிச் சென்று சுற்றப்புறத்தைச் சீரழித்து வருகின்றனர்.

​சமீபத்தில், மது அருந்திய இளைஞர் ஒருவர் மலைப்பாதையின் மிகக் செங்குத்தான, ஆபத்தான விளிம்பில் நினைவிழந்த நிலையில் படுத்துக் கிடக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. 

சற்று நிலைதடுமாறி உருண்டாலும் பல நூறு அடிகள் பள்ளத்தில் விழுந்து உயிர் பிரியும் பேராபத்து அதில் நிலவுகிறது.

 போதையில் பாதை அறியாமல் மலை விளிம்பில் கிடப்பது எந்த நேரத்திலும் பெரும் அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கும்.

 இளைஞர்கள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில்கள் வனவிலங்குகளின் வாழ்விடத்தைப் பாதிப்பதோடு, அவற்றின் உயிருக்கும் ஆபத்தாக முடிகிறது.

இதுபோன்ற சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயல்கள் அசம்பாவிதத்தில் முடிவதற்குள், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை காவல்துறையினரும் வனத்துறையினரும் இணைந்து கட்டாஞ்சி மலைப்பாதையில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

​அதே நேரத்தில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இயற்கை வளங்களையும் தங்கள் சொந்த உயிரையும் கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

புதன், 19 ஆகஸ்ட், 2026

 "நிறுத்தப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ்" ; அசாமில் தண்டவாளத்தைக் கடந்த யானைக் கூட்டம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகுவின் நெகிழ்ச்சியான வீடியோ வைரல்!

"நிறுத்தப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ்" ; அசாமில் தண்டவாளத்தைக் கடந்த யானைக் கூட்டம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகுவின் நெகிழ்ச்சியான வீடியோ வைரல்!

 "நிறுத்தப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ்" ; அசாமில் தண்டவாளத்தைக் கடந்த யானைக் கூட்டம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி சுப்ரியா சாகுவின் நெகிழ்ச்சியான வீடியோ வைரல்!

வனத்துறை & ரயில்வேயின் சாதுரியமான செயல்பாடு: மிகப்பெரிய ரயில் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட காட்டு யானைகள்!

​ அசாம் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானைகளின் கூட்டத்தை, அசாம் வனத்துறை மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் மின்னல் வேக நடவடிக்கையால் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திப் பாதுகாத்த நெகிழ்ச்சியான வீடியோ காட்சி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.

அசாம் மாநிலம், நாகோன் (Nagaon) பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியைக் கடப்பதற்காகக் காட்டு யானைகள் கூட்டம் ஒன்று நள்ளிரவில் திரண்டு வந்தது. அதே நேரத்தில், அந்தத் தண்டவாளத்தில் அதிவேகத்தில் 'ராஜ்தானி எக்ஸ்பிரஸ்' ரயில் வந்து கொண்டு இருந்தது.

​யானைகள் தண்டவாளத்திற்கு அருகே வருவதை முன்கூட்டியே கவனித்த அசாம் வனத்துறை ஊழியர்கள், தாமதிக்காமல் உடனடியாக அருகில் இருந்த ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினரின் அவசரத் தகவலைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டுச் சம்பந்தப்பட்ட ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ-பைலட்டை தொடர்பு கொண்டு எச்சரித்தனர்.

​சமயயோசிதமாகச் செயல்பட்ட லோகோ-பைலட், உடனடியாக ரயிலின் வேகத்தைக் குறைத்து ரயிலை நிறுத்தினார்.

 இதனால் யானைக் கூட்டம் எவ்வித பாதிப்பும் இன்றி அமைதியாகத் தண்டவாளத்தைக் கடந்து வனப்பகுதிக்குள் பாதுகாப்பாகச் சென்றது.

அசாம் வனத்துறை மற்றும் இந்திய ரயில்வேயின் இந்தச் சிறப்பான ஒருங்கிணைப்பைப் பாராட்டி, சென்னைத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII) ஆணையரும், முன்னாள் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாகு (IAS) தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டு உள்ளார்.

​அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

​"பிரமாதம்! இன்று நாகோனில் ரயில் தண்டவாளத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதவிருந்த விலைமதிப்பற்ற யானைகளின் உயிர்களை, அசாம் வனத்துறை மற்றும் ரயில்வேயின் விரைவான நடவடிக்கையும் ஒருங்கிணைப்பும் காப்பாற்றியது. வனத்துறை ஊழியர்கள் ரயில்வேக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, ரயில்வே கட்டுப்பாட்டு அறையுடன் இணைந்து செயல்பட்ட லோகோ-பைலட், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினார். இதனால், அந்தப் பெரிய யானைக் கூட்டம் பாதுகாப்பாகக் கடந்து சென்றது!"

​ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), IUCN இந்தியா, WWF-இந்தியா மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) உள்ளிட்ட அமைப்புகளைக் குறிப்பிட்டு அவர் பகிர்ந்த இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வனத்துறை மற்றும் லோகோ பைலட்டின் விரைவான செயல்பாட்டிற்குப் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

 "பசுமாட்டைக் கோபத்தோடு பாய்ந்து தாக்கப் பார்த்த காட்டு யானை" - கோவையில் நடுங்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்!

"பசுமாட்டைக் கோபத்தோடு பாய்ந்து தாக்கப் பார்த்த காட்டு யானை" - கோவையில் நடுங்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்!

 "பசுமாட்டைக் கோபத்தோடு பாய்ந்து தாக்கப் பார்த்த காட்டு யானை" - கோவையில் நடுங்க வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்!

 கோவை, தடாகம் பகுதியில் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை ஒன்று, அங்கு நின்று இருந்த பசுமாட்டைக் கொடூரமாகத் தாக்க முயன்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தி உள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் மற்றும் சோமயனூர் ஆகிய கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

​கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, தடாகம் பகுதியில் இருந்த ஒரு தனியார் ஹோட்டல் கடையின் சட்டரைத் தட்டிச் சேதப்படுத்திய சி.சி.டி.வி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், அதே ஒற்றை யானை நேற்று இரவும் திருவள்ளுவர் நகர் மற்றும் குன்று பெருமாள் கோவில் ஆகிய குடியிருப்புப் பகுதிகளுக்குள் ஊடுருவி உள்ளது.

​அப்போது, தெருவில் நின்று கொண்டு இருந்த பசுமாடு ஒன்றை நோக்கி அந்த யானை கோபத்துடன் பாய்ந்து ஆக்ரோஷமாகத் தாக்க முயன்றது.

 நல்வாய்ப்பாக, ஆபத்தை உணர்ந்த பசுமாடு நொடிப் பொழுதில் விலகிச் சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உயிர் தப்பியது.

அதன் பின்னர், திருவள்ளுவர் நகரில் உள்ள பெட்ரோல் பங்க் பகுதிக்கு வந்து நின்ற யானையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்களும், ரோந்தில் ஈடுபட்ட வனத்துறையினரும் இணைந்து சத்தம் எழுப்பியும் மேளங்கள் கொட்டியும் யானையை வனப்பகுதியை நோக்கி விரட்டி அடித்தனர்.

கடந்த சில நாட்களாகவே குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து ஹோட்டல்களைச் சேதப்படுத்துவது, கால்நடைகளைத் தாக்க முயல்வது எனத் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் இந்த ஒற்றைக் காட்டு யானையைத் கும்கி யானைகளின் உதவியோடு அடர்வனப் பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வேண்டும் என்றும், மீண்டும் அது கிராமங்களுக்குள் வராதவாறு வனத்துறை தீவிர ரோந்துப் பணிகளைச் மேற்கொள்ள வேண்டும் என்றும் தடாகம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.