கோவை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வந்த கர்ப்பிணிகள் தரையில் அமரும் அவலம் : செல்போன் வீடியோ வைரல் !!!
அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளிய மக்களுக்கான மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், மறுபுறம் அடிப்படை வசதிகள் கூட இன்றி நோயாளிகள் தவிக்கும் எதார்த்தமான காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகின்றன.
கோவை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் (Scan) எடுப்பதற்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள், அமர இருக்கை வசதி கூட இல்லாமல் வெறும் தரையில் அமர்ந்து இருக்கும் காட்சிகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான மாதாந்திர பரிசோதனை மற்றும் ஸ்கேனிங் பிரிவுகளில் இன்று காலை முதல் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. நீண்ட நேரம் வரிசையில் காத்து இருக்க வேண்டிய சூழலில், அவர்களுக்குத் தேவையான இருக்கைகள் (Benches) அங்கு போதுமானதாக இல்லை. கால் வீக்கம், இடுப்பு வலி எனப் பல உடல் உபாதைகளுடன் வரும் கர்ப்பிணிகள், நிற்க முடியாமல் வேறு வழியின்றி சிமெண்ட் தரையிலேயே அமர்ந்து காத்து இருந்தனர்.
"கருவில் குழந்தையைச் சுமந்து கொண்டு, தரையில் அமர்வது எவ்வளவு வேதனையானது ?" என அங்கு வந்து இருந்த உறவினர்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அங்கு வந்து இருந்த நபர் ஒருவர் இந்த வேதனையான காட்சியைத் தனது செல்போனில் படம் பிடித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.
"அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழைப் பெண்களுக்குத் தரமான சிகிச்சை மட்டுமின்றி, கனிவான கவனிப்பும், அடிப்படை இருக்கை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். கர்ப்பிணிகளை இப்படித் தரையில் அமர வைப்பது மனித நேயமற்ற செயல்" எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகம் இந்தத் தவறை உணர்ந்து, உடனடியாகக் கூடுதல் இருக்கைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

0 கருத்துகள்: