உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 37 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உரிய ஆவணங்களின்றி ஆம்னி பேருந்தில் எடுத்து வரப்பட்ட சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் நகைகள் கொண்டு செல்வதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதனன்று சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் சூலூர் தேர்தல் பறக்கும் படையினர் (FST-1) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தப் பேருந்தில் பயணம் செய்த கோவை சித்தி விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த அனுப் ராணா (37) என்பவரைச் சோதித்தபோது, அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 255 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்தத் தங்க நகைகளை அதிகாரிகள் முறைப்படி பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து நகைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையிலான நகைகள் சிக்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: