புதுச்சேரியில் 3 தொகுதிகளில் வி.சி.க தனித்துப் போட்டி: காங்கிரஸ் மீது திருமாவளவன் கடும் குற்றச்சாட்டு !!!
புதுச்சேரியில் 3 தொகுதிகளில் வி.சி.க தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது. இதனால், அங்கு இண்டியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு, காங்கிரஸ் தான் காரணமென்று அக்கட்சியின் மீது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடுமையாகக் குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க வுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இவற்றில் உழவர்கரை தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க ஒதுக்கியது.
ஆனால், அந்தத் தொகுதியில் ஓரிரு வாரங்களுக்கு முன்பு வரை பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ வாக இருந்து விலகி இப்போது தனது கட்சியில் ஐக்கியமாகினவரை வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தி உள்ளது. வி.சி.க வுக்கு உழவர்கரை தொகுதியை ஒதுக்கியும் கூட காங்கிரஸ் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை.
இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளார். மேலும் இது குறித்து, திருமாவளவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “வி.சி.க வுக்கென உழவர்கரை ஒதுக்கப்பட்ட பிறகும் கூட, தான் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெற வைக்க புதுச்சேரி காங்கிரஸ் மறுக்கிறது. இதனால் காங்கிரஸ் கூட்டணியில் வி.சி.க வுக்கு தொகுதி உண்டா ?இல்லையா ? என்பது தெளிவாகாத நிலையே ஏற்பட்டு இருக்கிறது.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3.00 மணியோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் காங்கிரஸின் அணுகுமுறை வி.சி.க வுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே கேள்விக்கு உள்ளாக்குவதாக இருக்கிறது.
எனவே, வேறு வழியின்றி வி.சி.க வேட்புமனு தாக்கல் செய்து உள்ள 3 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.
அதன்படி, ஊசுடு தொகுதிக்கு அரியபுத்ரி என்கிற அரிமாத்தமிழன், நெட்டப்பாக்கம் தொகுதிக்கு அமுதவன், உழவர்கரை தொகுதிக்கு செல்வ புஷ்பலதா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

0 கருத்துகள்: