சனி, 21 மார்ச், 2026

உதயமானது புதிய கூட்டணி; ராமதாஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் சசிகலா !!!

SHARE

 உதயமானது புதிய கூட்டணி; ராமதாஸ் உடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் சசிகலா !!!

ராமதாஸ் அணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தெரிவித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்படும் சசிகலாவை பொதுச் செயலாளராக கொண்டு, அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி அண்மையில் தொடங்கப்பட்டது.

கட்சி தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே, அதாவது கடந்த மார்ச் 10-ம் தேதி, திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பா.ம.க நிறுவனர ராமதாஸ் இல்லத்துக்கு சென்ற சசிகலா, அங்கு அவருடன் தமிழக அரசியல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் நிலவரங்கள் குறித்து சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தீவிர ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து ராமதாஸுடன் சசிகலா கூட்டணி சம்பந்தமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சசிகலா மீண்டும் சந்தித்து கூட்டணி சம்பந்தமாக ஆலோசனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். அத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் உடன் அமர்ந்து சசிகலா உணவு அருந்தினார். அப்போது, பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி, ராமதாஸின் மனைவி சரஸ்வதி, ராமதாஸின் மகள் ஸ்ரீ காந்திமதி ஆகியோர் உடன் இருந்தனர். இந்தக் கூட்டத்தில் சேலம் தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ அருள் கலந்து கொள்ளவில்லை.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, 

"அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம், ராமதாஸுடன் இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், 

"அனைந்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க ஒப்பந்தம் போட்டு உள்ளோம். இந்த வெற்றிக் கூட்டணி தமிழகத்தில் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. பலருக்கு இக்கூட்டணி நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இக்கூட்டணியில் இன்னும் சிலர் இணைய உள்ளனர். 234 தொகுதிகளில் போட்டியிடுவோம். சசிகலாவுடன் இணைந்து முடிவெடுப்போம். எங்களுடன் இணைய விருப்பம் உள்ளவர்கள் அதுகுறித்து தெரிவிக்கலாம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க இக்கூட்டணி அமைத்து உள்ளோம்" என்று தெரிவித்தார்.

பா.ம.கவில் ராமதாஸ் - அன்புமணி அணிகளுக்கு இடையே உட்கட்சி பூசல் நிலவி வந்த நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அன்புமணி தொடர்வதை ராமதாஸால் தடுக்க முடியவில்லை. அதேசமயம் அ.தி.மு.க வில் சசிகலாவை மீண்டும் அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து திட்டவட்டமாக தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசியலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இரு தலைவர்கள் ஒன்றாக இணைந்து புதிய கூட்டணியை அமைத்து உள்ளது தமிழக அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பார்க்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: