பா.ஜ.க வுக்கு ஊட்டி தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - அ.தி.மு.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் !!!
என்.டி.ஏ கூட்டணியில் ஊட்டி சட்டப் பேரவைத் தொகுதி பா.ஜ.க விற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் உள்ள அ.தி.மு.க அலுவலகம் முன்பு தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஊட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க போட்டியிட்டது. குன்னூர் மற்றும் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க போட்டியிட்டது.
தேர்தல் முடிவுகளில், கூடலூரில் மட்டும் அ.தி.மு.க வேட்பாளர் பொன். ஜெயசீலன் வெற்றி பெற்றார். ஊட்டியில் பா.ஜ.க வேட்பாளரும், குன்னூரில் அ.தி.மு.க வேட்பாளரும் தோல்வி அடைந்தனர்.
இந்நிலையில், இம்முறை ஊட்டி சட்டப் பேரவைத் தொகுதி அ.தி.மு.க விற்கு ஒதுக்கப்படுமென தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்புடன் காத்து இருந்தனர். ஊட்டி தொகுதி அ.தி.மு.க விற்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் போட்டியிடுவார் என்ற நம்பிக்கையோடு தேர்தல் பணிகளையும் அ.தி.மு.க வினர் தொடங்கினர்.
இந்நிலையில், ஊட்டி தொகுதி பா.ஜ.க விற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியானதால், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதன் இடையே ஊட்டி தொகுதி பா.ஜ.க வுக்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இதில் ஜெ பேரவை தலைவர் கெரடா ராஜூ, கடநாடு குமார், பெள்ளி, தாம்பட்டி சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊட்டி தொகுதியை அ.தி.மு.க வுக்கு ஒதுக்க வேண்டும் என கோஷங் கள் எழுப்பப்பட்டன. அதே நேரத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மற்ற 2 தொகுதிகளான, குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிட உள்ளது.
இதில், கூடலூர் தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ.,வாக உள்ள பொன்.ஜெயசீலனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம். குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட கட்சியின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என அ.தி.மு.க வினர் தெரிவித்தனர்.
அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று உள்ள த.மா.கா தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்ற ஜி.கே.வாசனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் அரசு கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கே.எம்.ராஜு முன்னிலையில் தி.மு.க வில் நேற்று இணைந்தனர்.

0 கருத்துகள்: