நானே ஷாக் ஆயிட்டேன் - சாதிப்பெயர் சர்ச்சைக்கு சிங்காநல்லூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விளக்கம் !!!
தனது பெயருக்கு பின்னால் நாயுடு என்ற சாதிய அடைமொழி இணைக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் அது தட்டச்சு பிழையால் ஏற்பட்டது எனவும் சிங்காநல்லூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீநிதி தன் சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
https://x.com/i/status/2040402772210950166
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த ஸ்ரீநிதி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இவரது பெயருக்கு பின்னால் நாயுடு என்ற அவரது சாதிப்பெயர் இடம் பெற்றிருந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் ஸ்ரீநிதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார்.
அவரது சமூக வலைதளப்பதிவில், நான் ஸ்ரீநிதி வெங்கடேசன் மோகன். தமிழ்நாடு பிறந்து வளர்ந்து மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள். தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதி அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்து எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சுப் பிழையால் ஏற்பட்டுவிட்டது. என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும் எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியை மட்டுமே அடையாளமாக கொண்டவள் நான். சாதி மத பேதம் அற்ற சமத்துவமே என் கொள்கை என குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கட்சிகளில் இருந்து மாறி அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஸ்ரீநிதி சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேட்பாளரை மாற்ற கோரியும் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்: