செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று கூறி முதியவரிடம் ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டல் - கோவை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை !!!

SHARE

 கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று கூறி முதியவரிடம் ரூபாய் 10 லட்சம் கேட்டு மிரட்டியது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் 72 வயது முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவருடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து பேசிய ஒருவர் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பலரும் சட்டவிரோதமாக பணம் அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளோம், அதற்கு அபராத தொகை செலுத்தினால், விட்டுவிடுவோம் இல்லை என்றால் கைது செய்வோம் என்றும் கூறி உள்ளார்.

அதைக் கேட்டு முதியவர் அதிர்ச்சி அடைந்து. பின்னர் சுதாரித்துக் கொண்டு தன் மீது எந்த வழக்கும் இல்லை, அதனால் நான் அபராத தொகை எதுவும் செலுத்த முடியாது. என்னிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றால் கோவையில் உள்ள போலீசார் மூலம் எனது வீட்டிற்கு வாருங்கள் நான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார்.

இருந்த போதிலும் அந்த நபர் என்.ஐ.ஏ அதிகாரிகள் உங்கள் வீட்டில் அருகே வந்து விட்டனர். உடனடியாக ரூபாய் 10 லட்சம் அபராதம் தொகை செலுத்தவில்லை என்றால், கைது செய்து விடுவார்கள் என்று கூறி மிரட்டி உள்ளார். அதற்கு அந்த முதியவர் எனது வீட்டுக்கு அதிகாரிகள் வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து வீடியோ காலில் பேசிய அந்த நபர் உங்களை டிஜிட்டல் கைது செய்து உள்ளோம், வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று கூறி உள்ளார். அதை பொருள்படுத்தாது அவர் என்னை யாரும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது, என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் கோவை போலீஸுடன் எனது வீட்டுக்கு வாருங்கள் நான் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து உள்ளார். இருந்தபோதிலும் அந்த நபர் தொடர்ந்து பேசி வங்கி கணக்கு விவரங்கள் அதில் வைக்கப்பட்டு உள்ள பணம் பற்றி கேட்டு உள்ளார். அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை, இது தொடர்பாக முதியவர் விசாரித்த போது மோசடி ஆசாமிகள் என் ஐ ஏ அதிகாரிகள் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து அந்த முதியவர் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் செய்தனர். அதன் பேரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும் போது 

டிஜிட்டல் கைது என்பது கிடையாது, மேலும் குற்ற வழக்குகளில் அபராதம் என்பதே கிடையாது. 72 வயதான முதியவரை உஷாராக இருந்ததால் அவரிடம் இருந்து பணம் பறிக்க முடியவில்லை, எனவே இந்த விஷயத்தில் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: