வியாழன், 19 பிப்ரவரி, 2026

22 தமிழக மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை

SHARE

தமிழக மீனவர்களின் 4 விசைப் படகுகளை தனித் தனியாக சிறைப் பிடித்து ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை படையினர் சிறைப் பிடித்தனர்.

ராமேசுவரம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர். இதில் அலேக்ஸ்டேனியல், அந்தோணி கிருமிராஜ் ஆகியோரின் 2 விசைப் படகுகள் நெடுந்தீவு அருகே புதன்கிழமை இரவு இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர்.

இரண்டு படகுகளில் இருந்த விமல்ராஜ், தபோன் ராஜா, பாக்கியராஜ், தீபக், ஆரோக்கிய பிரச்சிஸ், இம்மானுவேல், சந்தியா ஸ்டூவர்ட், பாக்லின், அந்தோணி குணால், காளிதாஸ், சந்தியா ஆல்டன், வின்சர் ஆகிய 12 மீனவர்ளை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.

இந்த 12 மீனவர்கள் மீதும், எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊர் காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் மார்ச் 4 வரையிலும் யாழ்ப் பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், ராமேசுவரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற வெங்கடேசன் என்பவர் விசைப்படகில் இருந்து புவனேஷ் நம்பு, முருகராஜ், ஜூட் , ராமக்கிருஷ்ணன், அருள்தாஸ், பழனிச்சாமி ஆகிய 6 மீனவர்களும், மண்டபம் மீன் பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற மலைராஜன் என்பவரது விசைப்படகை கைப்பற்றி, படகில் இருந்த ராமசாமி, நாகூர் கண்ணன், பாலசுப்பிரமணியன், ராஜமணி ஆகிய 4 மீனவர்கள் என 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பகுதியில் சிறைப் பிடித்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். இந்த 10 மீனவர்களும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: