டிரம்ப் வரி விதிப்பு செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு...
உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.
உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தார். ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி, ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியப் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா - இந்தியா இடைக்கால வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
உலக நாடுகள் மீதான இந்தப் பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர். வணிகர்கள் உள்பட பலர் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது அமெரிக்காவில் அவசர காலங்களில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த 1977-ஆம் ஆண்டின் அமெரிக்க சட்டம் அதிபருக்கு அதிகாரம் அளித்து உள்ளதாகவும், அதில் அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை வாதிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தில் இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்று வழக்கு தொடுத்தவர்கள் வாதிட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது. அந்த அமர்வில் 6 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘ வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கி உள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’ என்று தீா்ப்பளித்தனர்.
அதேவேளையில், அமர்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அவர்களின் தீர்ப்பில், ‘தற்போதைய வரி விதிப்புகள் அறிவார்ந்த கொள்கையாக இருக்கலாம் அல்லது அறிவார்ந்த கொள்கையாக இல்லாமலும் போகலாம். ஆனால், வரலாறு மற்றும் கடந்த கால நடவடிக்கைகள், முடிவுகளைக் கருத்தில் கொள்ளும் போது, டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூர்வமானவை தான்’ என்று தெரிவித்தனர்.
இதை அடுத்து பெரும்பான்மை அடிப்படையில், டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று 6 நீதிபதிகள் அளித்த தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு தரவுகளின் படி, இறக்குமதி பொருள்கள் மீது டிரம்ப் விதித்த வரிகள் மூலம், 13,400 கோடி டாலர்களை (சுமாா் ரூ.12.17 லட்சம் கோடி) அமெரிக்க அரசு திரட்டி உள்ளது. இந்த வரிகள் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமார் 3 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.272 லட்சம் கோடி கிடைக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் மதிப்பிட்டு இருந்தது. எனினும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 13,400 கோடி டாலர் திருப்பி அளிக்கப்படுமா ? என்பது குறித்து பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் குறிப்பிடப்படவில்லை.
வரி விதிப்புகள் செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த போதிலும், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்க டிரம்ப்புக்கு வேறு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜனவரி முதல் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் உள்ள தேசிய கருத்து ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், வரி விதிப்பில் டிரம்ப் வரம்பு மீறி செயல்பட்டதாக அமெரிக்கா்களில் பலர் தெரிவித்து உள்ளனர். அந்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 58 சதவீதம், ஜனநாயக கட்சியினர் 88 சதவீதம், சுயேச்சைகள் 62 சதவீதம் பேர் இவ்வாறு கூறி உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. அதே நேரத்தில் தீர்ப்பு காரணமாக அந்நாடு மற்றும் ஐரோப்பாவின் பங்குச்சந்தைகள் எழுச்சி அடைந்தன.

0 கருத்துகள்: