மோடியை ஆதரித்து பிரச்சாரம் செய்த விஜயகாந்த் ; பிரேமலதா எடுத்த முடிவு வருத்தம் அளிக்கிறது - வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கருத்து
டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் செய்யும் செயல் இந்தியாவின் மரியாதையை கெடுக்கும் விதமாக உள்ளது - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆவேசம்
கோவை டாடாபாத் பகுதியில் பா.ஜ.க இளைஞரணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தி.மு.க அரசில் போதைப்பழக்கம் அதிகமாகி விட்டதாகவும் அதனை கண்டிக்கும் விதமாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர் :-
ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டு இருக்கிறார்கள் எனவும் வசதி படைத்த இளைஞர்கள் உலகம் முழுவதும் அவர்களுக்கு திறமைகளை நிரூபித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி உள்ளது தமிழ்நாடு தான் என்றும் தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை அனுமதிக்க வைத்து இருப்பதும் தி.மு.க அரசு தான் என தெரிவித்தார். தி.மு.க அரசின் தோல்வியின் காரணமாகவும், நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவும் காவல்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கினாலும், பல்வேறு போதை பொருட்கள் கைக்கு எட்டும் தூரத்தில் கிடைப்பதாகவும் விமர்சித்தார்.
தி.மு.க அரசு ஐந்து வருடம் நிறைவு செய்து உள்ளதில் கஞ்சா வழக்குகள் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு தெருவிலும் புதிய, புதிய பெயரில் மதுபான கடைகளை திறக்கப்படுவதாக தெரிவித்தார். சினிமாவில் இருந்து பலரும் வருகிறார்கள். பல்வேறு தலைவர்களும் இருக்கிறார்கள் சினிமாவில் கதாநாயகனை ரசிப்பது வேறு, அதேசமயம் உங்களது வருங்காலத்திற்காக யார் ? முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற தெளிவு இருக்க வேண்டும் என தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது மகனை முதல்வராக்குவதற்கு தான் எண்ணிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன் :-
ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களிலும் பா.ஜ.க இளைஞரணி சார்பிலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் போதை புழக்கத்திற்கு எதிராகவும், அதனை தடுக்க தவறிய தி.மு.க அரசுக்கு எதிராகவும், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் தொழில் நுட்பத்தை உலக அரங்கில் நிலை நிறுத்திக் கொண்டு இருக்க கூடிய டெல்லியில் நடைபெறும் AI Summit ல் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொண்டதையும் அவர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.
கடந்த ஐந்து வருடங்களாக தமிழகத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது என்றும், ஒரு புறம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வேறு, வேறு பெயர்களில் திறந்து வைப்பது சாதாரணமாகி விட்டது என குறிப்பிட்ட அவர், அதனால் நடுத்தர வயதில் இருக்கக் கூடியவர்கள் அனைவரும் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். தற்பொழுது பள்ளி செல்லக் கூடிய குழந்தைகளும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடிய மோசமான கால கட்டத்தை தமிழ்நாடு சந்தித்துக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். சிறு வயது பெண்கள் குழந்தைகள் எல்லாம் போதைப் பழக்கத்தின் ஆதிகத்திற்கு ஆட்பட்டு குற்றச் செயல்களை செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
தி.மு.க அரசு இளைய சமுதாயத்தை சீரழிக்க கூடிய அரசாக மாறி இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். ஒரு புறம் டெல்லியில் பிரதமர் மோடி இளைஞர்களின் Innovation - யை பாருங்கள், புதிய கண்டுபிடிப்புகள் அறிவியல் மேம்பாடு ஆகியவற்றை பாருங்கள் என்று உலகத்தில் இருக்கக் கூடிய தலைவர்களுக்கு எல்லாம் காட்டிக் கொண்டு இருக்கும் பொழுது தமிழகத்தில் தி.மு.க அரசியல் இளைஞர்களும், சிறுவர்களும், பெண்களும் போதைக்கு ஆளாகி கொண்டு இருக்க கூடிய சூழல் இருப்பதாக தெரிவித்தார். இந்த அரசாங்கம் எப்படி இருந்தாலும் வீட்டிற்கு செல்லக் கூடிய அரசாங்கம் . ஆனால் அது ஏற்படுத்தி இருக்கக் கூடிய பாதிப்பு என்பது இந்த ஐந்து வருடத்திற்கு மட்டுமல்ல வருங்கால தலைமுறைக்கும் ஏற்படுத்தி இருக்கக் கூடிய பாதிப்பு என தெரிவித்தார். இளைஞர்கள் இவை அனைத்தையும் சிந்தித்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தே.மு.தி.க., தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது தொடர்பான கேள்விக்கு,
இந்த தகவல் வந்தவுடன் பா.ஜ.க தலைவர்கள் அவர்களது கருத்துக்களை தெரிவித்து விட்டார்கள் என்றும், விஜயகாந்த் 2014 ஆம் ஆண்டு நாங்கள் தமிழகத்தில் கூட்டணி அமைத்த பொழுது எவ்வாறு உதவியாக இருந்தார் என்று தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். அவருடைய நோக்கம் தமிழகத்தின் வளர்ச்சியாக இருந்தது மோடிக்கு ஆதரவாக விஜயகாந்த் எந்த அளவிற்கு பிரச்சாரம் செய்தார் என்பதும் தெரியும், அவருடைய சிந்தனை எல்லாம் நாட்டின் வளர்ச்சியை நோக்கி இருந்தது என தெரிவித்தவர், ஆனால் பிரேமலதா விஜயகாந்த் நேற்று எடுத்த முடிவு என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக பார்ப்பதாகவும் தமிழகத்தின் நலன் கடந்த ஐந்தாண்டுகளாக எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதை புரிந்த பிறகும் கூட பல்வேறு கூட்டங்களில் அதைப் பற்றி பேசி இருந்தாலும், கூட தி.மு.க கூட்டணியில் அவர் இணைந்து இருக்கிறார் என்பது தமிழகத்தின் நலனை பிரேமலதா விஜயகாந்த் சிந்திக்கவில்லையோ ? என்ற சந்தேகம் இருப்பதாகவும், அதனால் தி.மு.க கூட்டணி என்பது மக்களை போதைக்கு இழுத்து செல்லக் கூடிய கூட்டணியாக உள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கூட்டணியாக இருக்கும் நிலையில் எதற்காக அவர் அதில் இணைந்தார் என்பது விளங்கவில்லை தேர்தலில் வெல்ல முடியாத ஒரு கூட்டணிக்கு எதற்காக அவர் சென்றாரோ ? அது அவருக்கு பலன் அளிக்காது என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தாய்மொழி தின வாழ்த்து காவி நிற உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை பயன்படுத்தியது. பின்னர் அதனை நீக்கியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
பா.ஜ.க வந்த பிறகு தான் திருவள்ளுவர் காவியுடைய அணிவது, திருநீறு பூசுவது, ருத்ராட்சம் மாலை அணிவது போன்று கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் ஒன்றும் கிடையாது. நம்முடைய ஆதீனங்கள் சைவ மதங்களில் எல்லாம் பார்த்தோமேயானால் திருவள்ளுவரின் புகைப்படங்கள் மத அடையாளங்களோடு இருப்பார். மத அடையாளங்களோடு இருப்பவர் தான் திருவள்ளுவர். இந்து மதத்தைப் பற்றி இந்து கடவுள்களைப் பற்றி திருக்குறளில் பேசி இருக்கக் கூடிய திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்தால் என்ன ? தவறு திருநீறு பூசினால் என்ன தவறு ? திருநீறு பூசுவதும், காவி உடை அணிவதும் தேச விரோதமா ? என கேள்வி எழுப்பினார். தேச விரோத சக்திகளுடன் எல்லாம் அவர்கள் கூட்டணி வைத்து உள்ளார்கள். குண்டு வைப்பவர்களுடனெல்லாம் கூட்டணி வைத்து உள்ளார்கள். அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள் என்று கூறியவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து திருநீரு பூசினால் என்ன ? ஆகிவிடப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழரின் அடையாளம் விபூதி, நம்முடைய நாட்டின் நிறம் காவி தான் என்று தெரிவித்தவர், அன்றெல்லாம் ஒவ்வொரு கோவில்களிலும் காவி நிறம் தான் இருக்கும். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அந்த பதிவை நீக்கியது பற்றி தெரியாது என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியாக உள்ளார்களா ? என்பது பற்றி அவர்களிடம் நான் கேட்க வேண்டும் என்றும், தேர்தல் நோட்டிபிகேஷன் வருவதற்கு முன்னால் எத்தனை கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேரப் போகிறார்கள் என்று பொறுத்து இருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.
திருப்பூரில் வங்காளதேச இளைஞர்களை கைது செய்தது தொடர்பான கேள்விக்கு
திருப்பூரில் மட்டுமல்ல சட்ட விரோதமாக தங்கி இருக்கக் கூடிய நபர்களுடைய எல்லாமே கண்காணிப்பும், அவர்கள் மீதான நடவடிக்கை என்பதும் மெத்தனமாக உள்ளது என தெரிவித்தார்.
மதம் என்பது வேறு, வேற்று நாட்டவர்கள் நம்முடைய நாட்டிற்குள் நுழைவது என்பது வேறு. அந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று கூறுவது தவறு என்றும், நாட்டிற்கு எதிராக வேறு நாட்டவர்கள் யாராக ? இருந்தாலும் கண்காணித்த நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என தெரிவித்தார்.
மேடையில் தலைவர்களை ஏற்றுவது மூலமாக ஒரு கூட்டணி பலம் ஆகாது. அவர்களுக்கு எதிராக இருக்கக் கூடிய மக்கள் அனைவரும் கோபத்துடனும் வெறுப்புடனும் இருக்கிறார்கள். மக்களின் கோபம் அவர்களின் ஏமாற்றம் என்பது தான் இந்த தேர்தலில் பிரதிபலிக்க போகிறது என தெரிவித்தார்.
தமிழக முழுவதும் விசில் சத்தம் அதிகமாக கேட்கப்படுகிறது என்று பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு
எங்கள் வீட்டிலும் பால் குக்கர், அடித்துக் கொண்டு தான் இருக்கிறது என பதில் அளித்தார்.
அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர் தனபால் அவரது மகன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்தான கேள்விக்கு,
ஒரு புதிய கட்சி வருகின்ற பொழுது, ஏற்கனவே இருக்கின்ற கட்சியில் வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறார்களோ ? அல்லது தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நினைப்பவர்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், அதனால் ஏற்கனவே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அவருக்கு நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் என்கின்ற உயர்ந்த அங்கீகாரத்தை கொடுத்ததாகவும், அதனால் அவர் எந்த தனிப்பட்ட காரணத்திற்காக போயிருக்கிறார் என்பது தெரியாது. ஆனால் ஒட்டுமொத்த இளைஞர்கள் சமுதாயம் தேசிய ஜனநாயக கூட்டணி வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.


0 கருத்துகள்: