வியாழன், 26 பிப்ரவரி, 2026

எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி !!!

SHARE

 எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி !!!

எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.

எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவா்.

விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா்: கடந்த 1925- ஆம் ஆண்டு டிச. 25-ஆம் தேதி, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நல்லகண்ணு. நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் என பெரிய விவசாயக் குடும்பத்தில் வளா்ந்தவர்.

ஸ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., திருநெல்வேலியில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரியில் இன்டர்மீடியட் முடித்தார். பின்னர் தமிழில் 2 ஆண்டுகள் பி.ஓ.எல். படித்துக் கொண்டு இருந்த போது, படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, தீவிர அரசியலுக்கு வந்து விட்டார்.

சுதந்திரப் போராட்டத்தில்...

 பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார். சிறுவர்களை அணி திரட்டி பாரதியின் பாடல்களை தெருத் தெருவாகப் பாடி சுதந்திரக் கனலை மூட்டினார்.

அவரது பள்ளி ஆசிரியர் பலவேசம் வாயிலாக கம்யூனிஸ்ட் கொள்கை வழியைத் தேர்வு செய்தார். 1943-44இல் ‘கலைத் தொண்டர் கழகம்’ எனும் அமைப்பை உருவாக்கி அதன் செயலராகச் செயல்பட்டார். எட்டயபுரத்தில் பாரதி நினைவு மண்டபம் கட்டுவதற்கு அந்த அமைப்பின் சாா்பில் நிதி திரட்டிக் கொடுத்தார்.

1944-இல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். அதைத் தொடர்ந்து சென்னைக்கு வந்து ‘ஜனசக்தி’ அலுவலகத்தில் செய்திக் குழுவில் பணியாற்றத் தொடங்கினார். இருப்பினும் நகர வாழ்க்கை பிடிக்காததால் சென்னையில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி வட்டத்தில் விவசாய சங்க ஊழியராகச் செயல்பட்டார்.

தலைமறைவு வாழ்க்கை:

 1948- இல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், நல்லகண்ணு தலைமறைவானார். 1949 டிசம்பரில் அவர் கைது செய்யப்பட்ட போது கூட்டாளிகளைப் பற்றியும், அவர்களது மறைவிடங்கள் பற்றியும் கேட்டு அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீஸார் சித்திரவதை செய்த போதும் தன் நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதிப்பாட்டுடனும் இருந்தார்.

நான்குனேரி கிளைச் சிறையில் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் நெல்லை சதி வழக்கிலும் சேர்க்கப்பட்டதால் அவரது 29 - வது வயதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் ஏழாண்டுகள் தண்டனை அனுபவித்து 1956-இல் விடுதலையானார்.

சிறையில் இருந்து வெளியே வந்த நல்லகண்ணுக்கு ஜாதி ஒழிப்புப் போராளி அன்னச்சாமியின் மகள் ரஞ்சிதம் என்பவருடன் 5.6.1958-இல் நெல்லையில் திருமணம் நடைபெற்றது. ஆசிரியையாகப் பணியாற்றிய ரஞ்சிதம், நல்லகண்ணுவின் பொதுவாழ்வுக்குப் பெரும் துணையாக இருந்தார். (கடந்த 2016-இல் அவர் காலமானார்). அவர்களுக்கு காசி பாரதி, ஆண்டாள் என இரு மகள்கள் உள்ளனர்.

முன்மாதிரி அரசியல்: 

தீவிர அரசியலில் பயணித்த நல்லகண்ணு, சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். விவசாயத் தொழிலாளா்களின் கோரிக்கைகளுக்காக தமிழகம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று போராட்டங்களில் பங்கேற்றார். 13 ஆண்டு காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலராகப் பணியாற்றினார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார்.

அவரது செயல்பாடுகளால் முன்மாதிரி அரசியல்வாதியாக பாராட்டுப் பெற்ற நல்லகண்ணு, முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்துக் கட்சியினராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

எளிமையின் இலக்கணம்:

 கொண்ட கொள்கையில் உறுதியுடனும், எளிமையின் இலக்கணமாகவும் திகழ்ந்த நல்லகண்ணுவின் 80 - வது பிறந்த நாளையொட்டி, ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஆனால், அதைக் கட்சிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்.

தமிழக அரசு சார்பில் கடந்த 2007-இல் ‘அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டது. அதனுடன் வழங்கப்பட்ட ரூ. 1 லட்சத்தில், பாதியைக் கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார். அதேபோல அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட காரை கட்சிக்கே கொடுத்துவிட்டார்.


தகைசால் தமிழர் : தமிழினத்தின் வளா்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்த நல்லகண்ணுக்கு 2022 - ஆம் ஆண்டு ‘தகைசால் தமிழா்’ விருதை தமிழக அரசு வழங்கியது. விருதுடன் ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. அத் தொகையுடன் ரூ.5,000-ஐ சேர்த்து ரூ.10 லட்சத்து 5ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாண நிதிக்கு வழங்கினார் நல்லகண்ணு.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: