திங்கள், 16 பிப்ரவரி, 2026

தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களின் நிதியை கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

SHARE

தமிழ்நாடு அரசு பட்டியலின மக்களின் நிதியை கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு



புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அரசின் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

தமிழ்நாடு அரசால் ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் ரூ.5,000 வழங்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட SCA மற்றும் SCP திட்டங்களிலிருந்து நிதி எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.6,550 கோடி அளவிலான நிதி பட்டியலின மக்களுக்கான பிரத்யேக நிதியிலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பட்டியலின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டிய இந்த பிரத்யேக நிதியை மாநில அரசின் கவர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், SCP திட்டத்தின் அடிப்படை நோக்கத்தை தமிழக அரசு முழுமையாக சிதைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ரூ.5,000 வழங்கப்பட்டிருப்பதால் இது ஓட்டிற்கான கையூட்டாகவே பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

அதிமுக ஆட்சிக்காலத்திலும் பட்டியலின மக்களின் நிதி பயன்படுத்தப்படவில்லையா என்ற கேள்விக்கு, கூட்டணியையும் இந்த குற்றச்சாட்டையும் தொடர்புபடுத்த வேண்டாம் என மழுப்பலான பதில் அளித்தார்.

ரூ.5,000 வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உறுதியாக தேர்தல் ஆணையத்தை அணுகுவோம் என்றும், தேர்தல் விதிமுறைகளை ஜனவரி மாதத்திலேயே அமல்படுத்த வேண்டும் என்று முன்பே கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும், பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். கூட்டணி ஆட்சியிலும் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சி கூட்டம் நடத்த வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் அரசு மற்றும் காவல்துறை அனுமதி வழங்கியது நியாயமல்ல என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: