திங்கள், 16 பிப்ரவரி, 2026

கோவை பட்ஜெட் ; தேர்தலை முன்னிட்டு மாயாஜால வெறும் போட்டோ ஷூட் பட்ஜெட் தான் - அ.தி.மு.க உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு.

SHARE

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 2026-2027க்கான பட்ஜெட் வெளியீடு -இந்த பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த பயனும் இல்லை என அ.தி.மு.க மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் குற்றச்சாட்டு.....

கோவை மாநகராட்சியின் 2026–2027 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் மாமன்ற கூட்டம், மாநகராட்சியின் பிரதான அரங்கில் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒரே நிற சேலையில் கலந்து கொண்டது கவனத்தை ஈர்த்தது.

2026–2027 நிதியாண்டிற்கான வருவாய் வரவினம் மற்றும் மூலதன வரவினம் மொத்தம் ரூ.4,915.50 கோடியாகவும், வருவாய் செலவினம் மற்றும் மூலதன செலவினம் ரூ.5,041.71 கோடியாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரூ.126.21 கோடி நிகர பற்றாக்குறை ஏற்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டின் முக்கிய அறிவிப்பாக, கோவையின் செம்மொழி பூங்காவில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். “இந்த பட்ஜெட் வெற்று பட்ஜெட்; மக்களுக்கு எந்த பயனும் இல்லை. கடந்த முறை கூறிய அறிவிப்புகளையே மீண்டும் கூறியுள்ளனர்” என அ.தி.மு.க மாமன்ற குழுத் தலைவர் பிரபாகரன் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ், பெண்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை, கிராஸ் கட் சாலையில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட திட்டங்களையே மீண்டும் அறிவித்துள்ளதாகவும், புதிய திட்டங்கள் எதுவும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

சக்தி சாலை விரிவாக்கம், ஆகாயத்தாமரை தூர்வாருதல் போன்ற பணிகளில் புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லையெனவும், மாற்றுத்திறனாளிகளுக்கான பூங்கா திட்டமும் மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

மேலும், கிரிக்கெட் ஸ்டேடியம் மற்றும் நீச்சல் குளம் அமைப்பது தொடர்பாக பலமுறை அறிவிக்கப்பட்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. “தேர்தலை முன்னிட்டு மாயாஜால பட்ஜெட் அறிவித்து உள்ளனர்; இது வெறும் ஃபோட்டோ ஷூட் பட்ஜெட் தான்” எனக் கூறி அ.தி.மு.க  உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.

அ.தி.மு.க  ஆட்சிக் காலத்தில் அவினாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மேம்பாலங்கள் போன்ற முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போதைய மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: