அமெரிக்கா வரியை குறைத்து இருப்பது இந்திய பொருளாதாரத்துக்கு சாதகம்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி !!!
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஒருநாள் பயணமாக மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மதுரை கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், சிவகங்கை சமஸ்தானம் ராணி மதுராந்தக நாச்சியார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை கல்லூரி வளாக ஹெலிபேட் தளத்திற்கு சென்று அடைந்தார்.
அங்கு இருந்து காரில்சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலுக்கு சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மூலவர் மற்றும் பிற சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் சிவகங்கை வந்த அவர், அரண்மனை வாசல் முன்பு உள்ள வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
‘‘மகத்தான சரித்திரத்திற்கு சொந்தமான மண் சிவகங்கை. மகாராணி வேலுநாச்சியார், இழந்த அரசை போர் புரிந்து மீண்டும் கைப்பற்றியவர். இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்பில் செயல்படும் நாட்டில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது வளர்ச்சிக்கு அவசியம். இணைந்து செயல்பட்டால் தான் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளின் முன்னேற்றம் சாத்தியம்.
மக்கள் நலத் திட்டங்கள் விரைவாக நிறைவேற இது உதவும். அமெரிக்கா சார்பில் முதலில் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும்’’ என்றார். பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்: