எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு : இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு - பெயர் இல்லாதவர்கள் சட்டப் பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியாது !!!
எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு அடைந்ததை அடுத்து தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வர உள்ள சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும். தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025 ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27 ம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்று இருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.
இதில் 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர் இறந்த வாக்காளராகவும், 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 இரட்டை பதிவு வாக்காளர்கள் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19 ம் தேதி முதல் பிப்ரவரி 10 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக பெயர் சேர்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து பட்டியலில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதேபோல், இணையதளம் வழியாக 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தை தொடர்ந்து பிப்ரவரி 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முதலில் தெரிவித்து இருந்தார்.
இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது. அதாவது நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் தீர்ப்புகளின் அடிப்படையில் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டது.
அதே நேரத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் என்று காட்டப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. ஆனால் சுமார் 23 லட்சம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்து உள்ளனர். அதன்படி கணக்கிடும் போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மாவட்டங்களில் காலை 10 மணிக்கு மேல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதன்படி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியீடுவார்கள். தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாநிலம் முழுவதும் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிடுகிறார்.
அப்போது எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற முழு விவரம் தெரியவரும். இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் ஓட்டப்படும். அதில் தங்கள் பெயர் இடம் பெற்று உள்ளதா ? என்பதை வாக்காளர் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும். பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது.
அதனால், இன்று வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: