ஆன்மீக அன்பர்களும், இறை பற்றாளர்களும் விரும்பக் கூடிய அரசு தான் திராவிட மாடல் அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் !!!
சென்னை, மயிலாப்பூர், ஆர்.கே. மடம் சாலை, கபாலீசுவரர் திடலில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, உங்களையெல்லாம் ஒருசேர பார்க்கும்போது, மனதில் பெரு மகிழ்ச்சி பெருக்கெடுக்கின்றது. நம்முடைய திராவிட மாடல் ஆட்சிப் பற்றி நாம் சொல்வது எல்லாருக்கும் எல்லாம் அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்த விழா "எல்லாருக்கும் எல்லாம்" என்று நாம் சொல்வது, வாய் வார்த்தைக்காக அல்ல; சொற்களில் சொல்வதை, செயலில் நிரூபிக்கிறோம் என்பதற்கான அடையாளம் தான் இந்த மாநாடு.
உண்மையான ஆன்மீக அன்பர்களும், இறை பற்றாளர்களும் விரும்பக் கூடிய அரசு தான், திராவிட மாடல் அரசு. இந்த மாநாட்டைப் பார்க்கும் போது, பலருக்கு வியப்பாக இருக்கலாம்; ஏன் ? சிலருக்கு எரிச்சல் கூட வரலாம். கிராம கோயில்களில் பணியாற்றுகின்ற கிராமப் பூசாரிகளான நீங்களும் இந்த சமுதாயத்தில் ஒரு அங்கம் தான். உங்களுடைய வாழ்விலும், விடியல் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான், நம்முடைய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்த மண்ணில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்களுடைய உரிமைகளை நிலை நிறுத்திய திராவிட இயக்கத்தின் உணர்வை, நம்முடைய அரசில் தான் நிலைநாட்டி இருக்கிறோம்.
ஒருகாலத்தில், கோயில் இருக்கின்ற தெருக்களில் கூட பலரால் நுழைய முடியாத நிலை தான் இருந்தது; அதை மாற்றி, இன்றைக்கு கோயில்களுக்கு உள்ளே அனைத்து மக்களும் வரலாம்; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்; அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்று மாற்றி இருக்கிறோம். இந்த மாற்றம் தான், நாம் விரும்புகின்ற சமூக முன்னேற்றம். இதைத் தான் உண்மையான இறைப் பற்றாளர்களும் விரும்புவார்கள். இறை நம்பிக்கையை பொறுத்தவரைக்கும், தி.மு.க வின் நிலைப்பாடு என்பது, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று திருமூலர் சொன்ன வழி தான் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார்.
அதே போல தான், தலைவர் கலைஞர், “கோயில்கள் கூடாது என்பதல்ல; அவை கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது” என்று சொல்லி இருக்கிறார். அந்த வழியில் தான், அனைவருக்கும் மதிப்பளிக்கும், அனைவரது மாண்பையும் காக்கும், அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கும் துறையாக, நம்முடைய அறநிலையத் துறை செயல்பட்டு வருகிறது.
இன்னும் சொல்லப்போனால், கடந்த ஆட்சிக் காலங்களில், அறநிலையத் துறை அமைச்சர் யார் என்பது கூட மக்களுக்கு நினைவில் இருக்காது. ஆனால், இப்போது தமிழ்நாட்டில் இருக்கின்ற யாரை கேட்டாலும், நம்முடைய சேகர்பாபு அவர்களின் பெயரை பளிச்சென்று சொல்வார்கள். அந்த அளவுக்கு நாள்தோறும் ஏதாவது ஒரு விழா, ஒரு கோயிலை புதுப்பிப்பது என்று அவர் செய்து கொண்டே இருக்கிறார்.
இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், நான் அதிகமாக் எந்த துறையினுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீர்கள் என்று யாராவது கேட்டால், இந்து சமய அறநிலையத் துறை நிகழ்ச்சிகள் என்று உடனே பதில் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு, சிறப்பாக, வேகமாக செயல்படுகிறார் அமைச்சர் சேகர்பாபு.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, நம்முடைய அரசு பொறுப்பேற்ற ஆயிரத்து 759 நாட்களில், 4 ஆயிரத்து 335 கோயில்களில் திருப் பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு இருக்கிறது.
அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தின் கீழ், 29 அர்ச்சகர்களை பணி நியமனம் செய்து இருக்கிறோம்.
12 பெண் ஓதுவார்கள் உட்பட 46 ஓதுவார்களை பணி நியமனம் செய்து இருக்கிறோம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக, இந்தத் துறையில், 813 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 946 அலுவலர்களின் பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது.
அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் 2 ஆயிரத்து 500 ஆகவும் உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.
19 ஆயிரம் ஒரு கால பூசை திட்ட திருக்கோயில்கள் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ஊக்க தொகையாக ஆயிரத்து 500 ரூபாயை வழங்கிக் கொண்டு வருகிறோம்.
221 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 616 குடியிருப்புகளை கட்டித் தந்து இருக்கிறோம்.
பணிக் காலத்தில், இயற்கை எய்திய திருக்கோயில் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு, குடும்ப நல நிதியாக ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
கோயில் சொத்துகளை மீட்கவேண்டும் என பெருமுயற்சி எடுத்து, அதிலும் சாதனை படைத்து இருக்கிறோம்.
8 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஆயிரத்து 140 ஏக்கர் நிலங்களை மீட்டு இருக்கிறோம்.
இப்போது, நான் சொன்ன சாதனைகள் எல்லாம் மிகவும் குறைவு தான். பெரிய சாதனை புத்தகத்தின் சில பக்கங்கள்தான்! ஏராளமான சாதனைகள் இருக்கிறது.
எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். அப்படி இருக்கும் போது, உங்களின் இந்த மாநாட்டுக்கு வந்து விட்டு புதிய அறிவிப்புகளை வெளியிடாமல் இருக்க முடியுமா ? அதனால், பூசாரிகளின் நலனுக்கான 11 புதிய அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன்.
முதலாவது அறிவிப்பு - ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாடை வழங்கப்படும்.
உறுப்பினர் மரணம் அடைந்தால், அவருடைய வாரிசுதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும்.
கிராம கோயில் பூசாரிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக ஏற்கனவே உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது உங்களுடைய கோரிக்கையை ஏற்று ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது வழங்கப்படும் பள்ளிக் கல்வி நிதி உதவி, மேலும் ரூ.ஆயிரம் உயர்த்தப்பட்டு, 2 ஆயிரம் மற்றும் 2 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி ஆண்டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்படும்.
பூசாரிகளின் மகன், மகளுக்கு தற்போது ஒவ்வொரு கல்வி ஆண்டும் வழங்கப்படும் தொழில் சார்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு நிதி உதவி, ஆண்டுக்கு மேலும் ரூ.2 ஆயிரம் உயர்த்தப்படும்.
பூசாரிகளின் மகன், மகள் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயில ஆண்டுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
உறுப்பினர்களுக்கு மூக்குக் கண்ணாடி வாங்க தற்போது வழங்கப்படும் ரூ.500 நிதி உதவி ரூ.ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மகிழ்ச்சியா ? நானும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் மகிழ்ச்சி என்றால், நானும் மகிழ்ச்சி.
நம்மைப் பொறுத்தவரைக்கும், சமத்துவத்தை போற்றும் அனைவரையும் நாம் போற்றுவோம். மக்களுடைய சுயமரியாதையும் - உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். அதை நாம் சரியாக செய்வதால் தான், ஆன்மீகப் பெரியோர்கள் தொடர்ந்து நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இத்தகைய சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைபெற வேண்டும். மக்களுக்கு உள்ளே ஒற்றுமை தான் ஓங்கி வளரவேண்டும். மக்களை பிரிக்க நினைக்கின்ற கும்பல்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
இங்கே வந்து இருக்கின்ற பக்தர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும், திருக்கோயில் பணியாளர்களுக்கும் கொடுக்கின்ற வாக்குறுதி என்பது, உங்கள் நலன் காக்க, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். உங்கள் ஆதரவோடு திராவிட மாடல் ஆட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும். வெல்வோம் ஒன்றாக என அவர் கூறினார்.

0 கருத்துகள்: