கோவையில் 12 ஆண்டுகளுக்குப் பின் சவுடேஸ்வரி அம்மன் ‘கத்தி போடும் திருவிழா’; “வீசுக்கோ... தீசுக்கோ...” கோஷத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்தம் சொட்டச் சொட்ட நேர்த்திக் கடன் !!!
மார்பிலும், முதுகிலும் கூர்மையான கத்திகளால் காயப்படுத்தி அம்மன் அழைப்பு: அதிரவைத்த ‘ஆன்மீக’ ஆக்ஷன் !!!
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் கத்தி போடும் திருவிழா, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு விமரிசையாக அரங்கேறியது.
இந்த விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட தேவாங்க குலப் பக்தர்கள், தங்களது உடம்பில் ரத்தம் சொட்டச் சொட்டக் கூர்மையான கத்திகளால் மார்பிலும், முதுகிலும் காயப்படுத்திக் கொண்டு அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்த நெஞ்சை உலுக்கும் காட்சிகள் கொங்கு மண்டலத்தையே அதிரவைத்து உள்ளது.
கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தி போடும் திருவிழா, பல்வேறு காரணங்களால் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான திருவிழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தக் கோவில் நிர்வாகிகள் திட்டமிட்டனர்.
இதன்படி, விழாவின் மிக முக்கிய நிகழ்வான சவுடேஸ்வரி அம்மன் அழைப்பு மற்றும் கத்தி போடும் வைபவம் இன்று அசாத்திய பக்திப் பெருக்குடன் தொடங்கியது.
நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் (Bus Stop) அருகில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனைப் பாரம்பரிய முறைப்படி அழைத்து வரும் ஊர்வலம் புறப்பட்டது.
இந்த ஊர்வலத்தின் போது, அம்மனின் குலவழக்கக் காவல்காரர்களாகக் கருதப்படும் வீரக்குமாரர்கள், கைகளில் பளபளக்கும் கூர்மையான கத்திகளை ஏந்தி அனல் பறக்கக் களம் இறங்கினர். அவர்கள் “வீசுக்கோ... தீசுக்கோ...” என்ற தங்களின் குலதெய்வ வீர கோஷங்களை விண் அதிரும் வண்ணம் எழுப்பியவாறு, காற்றில் கத்திகளைச் சுழற்றித் தங்களது கைகள், மார்பு மற்றும் முதுகுப் பகுதிகளில் ‘டமால் டமால்’ எனக் வெட்டிக் கொண்டனர்.
கூர்மையான கத்திகள் பட்டு உடம்பில் இருந்து ரத்தம் சொட்டச் சொட்ட, அணுவளவும் வலியைக் காட்டாமல் அம்மனை அவர்கள் பரவசத்துடன் ஊர்வலமாகத் தாங்கி வந்த ஆன்மீகக் காட்சி, அங்கு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த அசாத்திய நேர்த்திக்கடன் ஊர்வலம், முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியாக ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த திருவிழாவைக் காண்பதற்காகக் கோவையின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்து அம்மனைத் தரிசனம் செய்தனர்.
விழாவின் நிறைவாக, வந்திருந்த அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அசாத்தியப் பாதுகாப்பு மற்றும் சிறப்பான ஏற்பாடுகளை ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்து இருந்தனர்.
12 ஆண்டுகளுக்குப் பின் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அரங்கேறிய இந்த வீரமிக்கக் கத்தி போடும் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.