சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிக்க கூடாது'... சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு !!!
தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளார். பா.ம.க தலைவராக தன்னை அதிகாரப் பூர்வமாகப் பதிவு செய்யும் வரை, தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர் கோரி உள்ளார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அடுத்த வாரம் தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை தந்த பிறகு, மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பா.ம.க.வில் நிலவும் உட்கட்சிப் பூசல் காரணமாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தற்போது பா.ம.க வில் ராமதாஸ் ஒரு அணியாகவும், அன்புமணி ராமதாஸ் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் அணியினர் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து உள்ளனர். "தாங்களே உண்மையான பா.ம.க" என்று இரு தரப்பும் கூறி வந்த நிலையில், அன்புமணி ராமதாஸே பாம.க.வின் தலைவர் என்றும், கட்சியின் 'மாம்பழம்' சின்னம் அவருக்கே சொந்தம் என்றும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து ராமதாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில், அன்புமணிக்கு எதிராக சிவில் நீதிமன்ற உத்தரவு வந்தால் மட்டுமே ஆவணங்களை மாற்ற முடியும் எனத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனால், பா.ம.க தலைவராகத் தன்னை மீண்டும் பதிவு செய்யும் வரை தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும், தேர்தல் தேதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால், 'மாம்பழம்' சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் ராமதாஸ் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.

0 கருத்துகள்: