காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி - செல்வப்பெருந்தகை தகவல் !!!
காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக தி.மு.க உறுதி அளித்து இருப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் , காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் மாநில தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் சென்று இருந்தனர்.
முதலாவதாக காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க வின் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அதன்படி பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் ஆகியோர் செய்தியாளர்களுடன் பேசினர்.
செல்வப்பெருந்தகை பேசுகையில்,
"தி.மு.க வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறோம். எங்களுக்கு என்ன தேவையோ ? அதை நாங்கள் கேட்டு இருக்கிறோம். அவர்களும் பரிசீலிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். முதல்வரிடம் கலந்து ஆலோசிப்பதாக கூறி இருக்கிறார்கள்.
காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்து இருக்கிறார்.
பேச்சுவார்த்தை வெற்றிகரமாகவும் நம்பிக்கையோடும் சென்று கொண்டு இருக்கிறது. எந்தவித பிரச்னையும் இல்லை.
இந்த கூட்டணி கொள்கை கூட்டணி, இயற்கையான கூட்டணி, நம்பிக்கையுள்ள உறுதியான கூட்டணி, தமிழ்நாட்டைக் காக்கும் கூட்டணி, மதவாதிகளை விரட்டும் கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டில் பா.ஜ.க விற்கும், அ.தி.மு.க விற்கும் இடமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

0 கருத்துகள்: