வேலூர் த.வெ.க கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல் - காவல்துறை !!!
வேலூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் கூட்டத்துக்கு தாமதமாக அனுமதி கொடுக்கப்பட்டதாக நிர்வாகிகளின் குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது.
மேலும், விஜய் பிரசாரக் கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க நிர்வாகிகள், விஜய் நிகழ்ச்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக அனுமதி கோரி போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பு தான் அனுமதி கடிதம் கிடைத்ததாகவும், கடிதத்தை பார்த்த பிறகே அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து வேலூர் காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து திங்கள்கிழமை அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், ”கடந்த 28.01.2026-ம் தேதி, த.வெ.க கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு கூட்டத்தை 08.02.2026 அன்று நடத்த உள்ளதாகவும், அதில் தங்கள் கட்சியின் தலைவர் மற்றும் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அனுமதி கோரி மனு அளித்தார். இதுகுறித்து காவல் துறை சார்பில் 30.01.2026 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றி தமிழக அரசால் வழங்கப்பட்ட அரசாணை எண். 05-ன் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது.
இந்நிலையில் 05.02.2026 அன்று த.வெ.க நிர்வாகம் சார்பாக சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாள் தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆதலால், நாங்கள் எங்கள் தலைமையிடம் மாற்று தேதி கேட்டு தங்களிடம் மீண்டும் மனு கொடுக்க உள்ளோம்" என மனு அளித்தார்.
மீண்டும், 06.02.2026-ம் தேதி அன்று த.வெ.க நிர்வாகம் சார்பாக மேற்படி நிகழ்ச்சியை 23.02.2026 அன்று நடத்த உள்ளதாகவும், அதில் சுமார் 25,000 நபர்கள் கலந்து கொள்வார்கள் என மனு அளித்தார். இதுகுறித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்ட நிலையில் 18.02.2026 அன்று அளித்த மனுவில் "வேலூர் மாவட்டத்தில் 23.02.2026 அன்று எங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு 06.02.2026 அன்று கடிதம் கொடுத்து இருந்தோம். அந்த நிகழ்வில் பொதுமக்கள் 25,000 கலந்து கொள்ள அனுமதி கேட்டு இருந்தோம்". "மேலும் இந்த சந்திப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 4,900 பேர் கலந்து கொள்ள திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது"
இதுதொடர்பாக காவல் துறையினரால் 19.02.2026-ம் தேதியன்று நிகழ்ச்சி நடத்துவதற்கு தேவையான அடிப்படை தகவல்கள் கேட்டு கேள்வியுரை வழங்கப்பட்டது. அதற்கான தகவல்கள் அடங்கிய பதிலுரையினை தமிழக வெற்றிக் கழகத்தினர் 20.02.2026-ம் தேதி சமர்பித்தனர்.
த.வெ.க நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு 5 நாட்களுக்கு முன்பாக மனு அளித்து இருந்த போதிலும் பொது மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை கள ஆய்வு செய்தும், வாகன நிறுத்தும் இடங்களை பரிசீலனை செய்தும் 22.02.2026-ம் தேதி காவல் துறை சார்பில் அனுமதிக்கான செயல்முறை ஆணை அளிக்கப்பட்டது. காவல்துறை அனுமதி வழங்கியதில் எவ்வித காலதாமதமும் செய்யாமல் மனு அளிக்கப்பட்ட நான்கு நாட்களில் உரிய அனுமதி வழங்கப்பட்டது.
த.வெ.க கட்சி நிர்வாகிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காவல் துறையினரிடம் அனுமதி பெற கடந்த ஒன்றரை மாதங்களாக போராடியதாகவும், நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 20 மணி நேரத்திற்கு முன்பாக தான் காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டது என கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
மேலும், த.வெ.க கட்சியினர் அளித்த மணுவில் கோரப்பட்டபடி 4,900 கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து செயல்முறை ஆணை வழங்கப்பட்டது. ஆனால், இன்று 23.02.2026-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மனுவில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக குறைந்தபட்சம் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிய வருகிறது. இச்செயலானது உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணை எண்.05-ல் நிகழ்ச்சி நடத்துவதற்கு அறிவுறுத்தி உள்ள விதிமுறைகளை மீறி செயல்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் காவல் துறையினரால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பு வழங்கப்பட்டது” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

0 கருத்துகள்: