கோவை அருகே 120 இடங்களில் காவல்துறை அதிரடி சோதனை : கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேர் கைது - உயர்ரக போதைப்பொருள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் !!!
கோவை அருகே 120 இடங்களில் காவல் துறையினர் அதிரடி சோதனை, நடத்தி கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து உயரக போதைப் பொருள்கள், 22 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை அடுத்த கருமத்தம்பட்டி, பேரூர் உட்கோட்டம் பகுதிகளில் மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும், இடங்களில் போதைப்பொருட்கள் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல் கண்காணிப்பாளர் கரிக்கோல் பாரி சங்கர், சுரேஷ் மற்றும் ஒன்பது காவல் ஆய்வாளர்கள் 300 போலீசார் நேற்று காலை 6 மணி முதல் ஒன்பது மணி வரை செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி உள்ளிட்ட இடங்களில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகள் மற்றும் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது மாணவர்கள் தங்கி இருக்கும் சில அறைகளில் போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அது போல் பத்துக்கு மேற்பட்ட செல்போன்கள், இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து செட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவற்றை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது
கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் இடங்கள் உள்பட 120 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்ததாகவும், அப்பொழுது எவ்வித ஆவணங்கள் இல்லாமல் போலியான வாகன பதிவு உடன் இருந்த 22 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தவிர மாணவர்களின் அறைகளில் இருந்து உயர் ரகத்தைச் சேர்ந்த 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி கஞ்சா ஆயில், 2 கிலோ கஞ்சா சாக்லேட், மெத்தபெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவை மாணவர்களுக்கு எப்படி ? கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஐந்து கல்லூரி மாணவர்கள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் இரண்டு பேர் ஏற்கனவே கல்லூரி படிப்பை முடித்தவர்கள், அவர்கள் மீது திருட்டு கொலை முயற்சி போதைப் பொருள்கள் விற்றது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது.
கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கத்தில், சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளியில் அறை எடுத்து தங்கும் மாணவர்கள் தங்களுடன் தங்கி வருபவர்களின் பின்னணி குறித்து தெரிந்து கொண்ட பிறகு அறைகளுக்கு அனுமதிக்க வேண்டும், சிலர் சொந்த ஊர்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு மாணவர்களின் அறைகளை அடைக்கலம் ஆகின்றனர். மேலும் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அத்துடன் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும், போதைப் பொருள்கள் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும், கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

0 கருத்துகள்: