செவ்வாய், 17 மார்ச், 2026

கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 22 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி !!!

SHARE

 கோவையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 22 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி !!!

கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல், கொண்டு சென்ற ரூபாய் 22 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அத்துடன் உரிய ஆவணங்கள் இல்லாமல், ரூபாய் 50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 90 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகனங்களை சோதனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கூடலூர், கவுண்டம்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 4 லட்சத்து 27 ஆயிரம் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாய்பாபா காலனி, அழகேசன் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மோப்பேரி பாளையம் நான்கு ரோடு பகுதியில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் ரூபாய் 66 ஆயிரத்து 400 இருந்தது அதற்கான ஆவணங்கள் இல்லை, இதை அடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இது தவிர கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா கார்னர் பகுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரில் 25 தட்டுகள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை, இதை அடுத்து அதிகாரிகள் அந்த தட்டுகளை பறிமுதல் செய்தனர். அது போன்று மோப்பேரி பாளையத்தில் 48 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை மாவட்ட அன்னூர் அருகே நேற்று தேர்தல் பறக்கும் படையினர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுஜாதா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அன்னூர் அருகே வடவள்ளி ஊராட்சி பெரிய புதூர் செங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஆவணங்கள் இன்று கொண்டு வந்த ரூபாய் 14 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணம் அவிநாசி துணை தேர்தல் அதிகாரி ஸ்ரீ நந்தினி இடம் ஒப்படைக்கப்பட்டது.

 இதேபோன்று ரூபாய் 6 லட்சம் மதிப்பு உள்ள ரேடியம் முலாம் பூசப்பட்ட வெள்ளி ஆபரணங்களை, கைக்கடிகாரங்கள் உள்ளிட்டவை உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்தப் பொருள்களை குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கடைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வதாக, அவற்றைக் கொண்டு வந்தவர் பறக்கும் படை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளார்.

இதேபோல் போத்தனூர், செட்டிபாளையம் சாலையில், நஞ்சுண்டாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த சொகுசு காரில் 38 உயர் ரக வெளிநாடு மதுபானங்கள் இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிஸ்வரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கோவையில் உள்ள பிரபல துணிக்கடை உரிமையாளரின் கார் டிரைவர் என்பது தெரியவந்தது.

கிணத்துக்கடவு அருகே வீரப்ப கவுண்டனூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வாகனத்தில் வந்த கோவை சுண்டக்காமுத்தூர் குறிச்சி கார்டன் பகுதியைச் சேர்ந்த சிவசுந்தர், என்பவர் ஆவணங்கள் இன்றி ரூபாய் 95 ஆயிரம் வைத்து இருந்தார் விசாரித்த போது மாட்டு தீவன வியாபாரத்தில் பெறப்பட்ட பணம் என்றும் கூறினார். எனினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மதுக்கரை தாசில்தார் இடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தத்தில் நேற்று கோவை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 22 லட்சம் மற்றும் வெள்ளி பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: