தி.மு.க ஆட்சியில் 4 அதிகார மையங்கள் உள்ளன- தேர்தல் பிரச்சாரத்தில் ஈ.பி.எஸ் குற்றச்சாட்டு !!!
தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் 4 அதிகார மையங்கள் உள்ளன என்றும், தி.மு.க கூட்டணி கட்சிகள், தி.மு.க விற்கு அடிமையாகவே உள்ளன என்றும், சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டி, தேர்தலை பிரச்சாரத்தை தொடங்கி விட்ட எடப்பாடி பழனிசாமி, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்திற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு காசிமேடு சூரியநாராயண தெருவில் இருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை வரை அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில், அவர் இருந்த போது செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும், அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு செயல்படுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சியின் போது இந்தப் பகுதியில் தொழில்நுட்ப கல்லூரி, போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் கொண்டு வரப்பட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.63 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தியது அ.தி.மு.க. இதுதான் அ.தி.மு.க வின் சாதனை.
இந்த தொகுதி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் சொல்லும் படியாக ஏதேனும் திட்டத்தை தி.மு.க செயல்படுத்தி உள்ளதா ? இல்லை. பொதுமக்கள் பயன்படுத்திய கழிவறைகளை கூட விட்டு வைக்காமல் கமிஷன், கலக்சன், கரப்சன் என்ற வழியிலேயே தி.மு.க செயல்பட்டு வருகிறது.
தி.மு.க வில் வாரிசை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தனது மகன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கி தி.மு.க வின் இளைஞரணி செயலாளர் ஆக்கி உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இதில் கனிமொழி தி.மு.க துணை பொதுசெயலாளராக இருந்து வருகிறார். தி.மு.க வில் பொறுப்பு வாங்க ஸ்டாலின் உறவினர்கள் மட்டும் தான் உள்ளார்களா ? வேறு யாரும் இல்லையா ?
ஆனால், சாதாரண சாமானியனும் பதவிக்கு வர முடியும் என்ற வகையில் தான் அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க வில் கட்சியினர் உடையை குழப்பத்தை ஏற்படுத்த வழக்கு தொடர்ந்து கட்சியை அழிக்க நினைத்தவர்களின் அனைத்து திட்டங்களையும் முறியடித்து உள்ளோம்.
இந்த தேர்தல் தி.மு.க விற்கும், டெல்லியில் உள்ள என்.டி.ஏ கூட்டணிக்கும் இடையே தான் போட்டி என முதல்வர் ஸ்டாலின் கூறிவருகிறார். நாங்கள் கூட்டணி வைக்கும் போதே, தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்பதை முடிவு செய்து விட்டோம். தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றால் அ.தி.மு.க ஆட்சி தான் அமைக்கப்படும்.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, என்.டி.ஏ கூட்டணி வெற்றி வேட்பாளர் ஈ.பி.எஸ் என மத்திய உள்துறை அமைச்சரே தெரிவித்தார். நான் எப்போது டெல்லி சென்றாலும் என்ன நடக்குமோ ? என்ற பயம் ஸ்டாலினுக்கு வந்து விட்டது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம் மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும்; சாதாரண குப்புசாமியும், ராமசாமியும் ஆட்சி செய்யக் கூடாதா ? இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்று புள்ளி வைப்போம்.
தமிழகத்தில் 4 அதிகார மையங்கள் உள்ளன. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் ஸடாலினின் மனைவி என 4 அதிகார மையங்கள் உள்ளன. இது தமிழகத்திற்கு தேவையா என்பதை உணர வேண்டும்.
தமிழக மக்களோடு பயணிக்கும் வேட்பாளர்களை நியமித்து நாம் கூட்டணி அமைத்து உள்ளோம். தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள், 10 ஆண்டுகளாக அடிமையாகத் தான் இருந்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க வில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன.
மக்களின் நலனுக்காக கட்சி ஆரம்பித்து விட்டு தி.மு.க விற்கு அடிமையாக இருப்பதை பற்றி தி.மு.க கூட்டணி கட்சியினர் சிந்திக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தனது மகனை முதல்வராக்கவே கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார். முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார் என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.
வீட்டு வரி, மின்சார வரி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விண்ணை தாண்டி உயர்ந்து உள்ளது. இது குறித்து தி.மு.க எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா இல்லாத நடவடிக்கை எடுப்பதற்கும், பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்க அ.தி.மு.க ஆட்சி அமைய வேண்டும். மேலும் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் தி.மு.க ஆட்சியில் அரங்கேறி வருகிறது என்று" அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: