வெள்ளி, 27 மார்ச், 2026

வெளிநாட்டு வேலை மோசடி வழக்கு : 5 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை - கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!

SHARE

 வெளிநாட்டு வேலை மோசடி வழக்கு : 5 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை - கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!!

​7 கோடி ரூபாய் சுருட்டிய கும்பலுக்கு சி.பி.ஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ; 5 கோடி மதிப்பு உள்ள சொத்துக்கள் பறிமுதல் !!!

கோவையில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூற்றுக் கணக்கானோரிடம் 7 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளிகள் 5 பேருக்குத் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்து உள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டு கோவை, காந்திபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த கும்பல், வெளிநாடுகளில் கவர்ச்சிகரமான வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தலா 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை என மொத்தம் 7 கோடி ரூபாய் வசூலித்து விட்டு தலைமறைவாகினர்.

​பாதிக்கப்பட்டவர்களின் புகாரைத் தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு சி.பி.ஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. 

மும்பையைச் சேர்ந்த பி.சி.செரியன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

​விசாரணைக்குப் பிறகு, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவாகுமார் தீர்ப்பு வழங்கினார்.

பி.சி.செரியன் (மும்பை) 14 ஆண்டுகள் ₹12 லட்சம்

பிரான்சிஸ் அருண் 14 ஆண்டுகள் ₹15 லட்சம்

ஆஷா சார்லெட் 14 ஆண்டுகள் ₹15 லட்சம்

சந்தோஷ் வில்லியம் 14 ஆண்டுகள் ₹12 லட்சம்

பிரீத்தா குமாரி 4 ஆண்டுகள் மேலும் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

​இவ்வழக்கில் தொடர்புடைய ரமேஸ்பாபு, சயின், பெஜ்ஜமின் வில்லியம் ஆகிய மூவர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சி.பி.ஐ வழக்கறிஞர் அளித்த பேட்டியில், "இந்த வழக்கில் 130 சாட்சியங்களிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து 450 கிராம் தங்க நகை மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு உடமையாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

தண்டனை பெற்று உள்ள இந்த கும்பல் மீது இதே போன்ற வேலைவாய்ப்பு மோசடி வழக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

22 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்து உள்ள இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மக்கள் இடையே ஒரு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: