செவ்வாய், 10 மார்ச், 2026

மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு !!!

SHARE

 மாநிலங்களவைத் தேர்தல்: தம்பிதுரை, திருச்சி சிவா உள்பட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு !!!

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிதுரை, அன்புமணி, திருச்சி சிவா உள்ளிட்ட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யான தி.மு.க வின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அ.தி.மு.க வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதை அடுத்து தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க வின் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

அதேபோல தி.மு.க சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க சார்பில் எல்.கே. சுதீஷ் ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

 கடந்த மார்ச் 6 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று இறுதி நாள் ஆகும். வேறு யாரும் போட்டியிட்டால் தேர்தல் நடைபெறும் என்ற சூழ்நிலையில் இதுவரை வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தம்பிதுரை, அன்புமணி ஆகியோருக்கு வெற்றிச் சான்றிதழ் முதலில் வழங்கப்பட்டது. தொடர்ந்து தி.மு.க மற்றும் கூட்டணியைச் சேர்ந்த திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இவர்கள் 6 பேரும் மாநிலங்களவைக்கு எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கட்சி எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இல்லாததாலும் வேட்பு மனுவை முழுமையாக நிரப்பாததாலும் பா.ம.க வின் ராமதாஸ் ஆதரவு வேட்பாளர் சுவாமிநாதனின் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: