வெள்ளி, 27 மார்ச், 2026

மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு: ஒருதலைப்பட்சமான நடவடிக்கை - தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கண்டனம் !!

SHARE

 மாம்பழச் சின்னம் ஒதுக்கீடு: ஒருதலைப்பட்சமான நடவடிக்கை - தேர்தல் ஆணையத்திற்கு ராமதாஸ் கண்டனம் !!!

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு மாம்பழச் சின்னத்தை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஒதுக்கியது ஜனநாயகப் படுகொலை எனப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், மாம்பழச் சின்னம் வழங்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து உள்ள நடவடிக்கைகள் ஒருதலைபட்சமானது எனக் கூறி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் கூறும்போது,

 சமூக நீதி, இடஒதுக்கீடு, பூரண மதுவிலக்கு மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் ஆகிய முக்கியக் கொள்கைகளை முன்னிறுத்தி, உழைக்கும் மக்களின் பேராதரவோடும் எழுச்சியோடும் கடந்த 16.07.1989 அன்று பாட்டாளி மக்கள் கட்சியைத் தான் தொடங்கியதாக டாக்டர் ராமதாஸ் குறிப்பிட்டு உள்ளார். கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டின் குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை வீதி தோறும் மக்களைச் சந்தித்து, அவர்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தி, தானும் கட்சியின் தொண்டர்களும் சிறைக் கொடுமைகளை அனுபவித்து இந்த இயக்கத்தைக் கட்டிக்காப்பாற்றி வருவதாக அவர் உருக்கமாகத் தெரிவித்து உள்ளார்.

பாட்டாளிகள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில், நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிட்டு பல மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் ஆயிரக் கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகளை உருவாக்கியதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்திமிக்க இயக்கமாக பா.ம.க-வை வளர்த்தெடுத்ததாக அவர் கூறி உள்ளார். 

இது ஒட்டுமொத்த பாட்டாளி சமூகத்திற்கும் வளர்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சூழ்நிலையில், தம்மால் வளர்க்கப்பட்டவர்களே தம்மைப் புறந்தள்ளி விட்டு, போலியான ஆவணங்களை உருவாக்கித் தம்மால் உருவாக்கப்பட்ட கட்சியை அபகரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். அத்தகைய நபர்கள் தேர்தல் ஆணையத்தில் முறைகேடான வழிகளைக் கையாண்டு கட்சியை அபகரிக்க முயற்சிப்பதாகவும், தம்மால் உருவாக்கப்பட்ட கட்சி, கொடி மற்றும் சின்னத்தை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றங்களில் முறையிட்டும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஒவ்வொரு முறையும் அத்தகைய சதிகாரர்களுக்குத் துணை போகும் வகையிலேயே அமைந்து உள்ளதாக அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாம்பழச் சின்னத்தை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட போது, "எந்த அடிப்படையில் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தை வழங்கினீர்கள் ?" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, இது குறித்து மூன்று நாட்களில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இருப்பினும், தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், ஒருதலைபட்சமாகவும் கட்சியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு ஆதரவாக உரிமையியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளதாக அவர் சாடி உள்ளார். அங்கீகாரமற்ற ஒரு கட்சிக்குச் சின்னம் வழங்குவது தொடர்பாக, ஜனநாயக ரீதியாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது ஒரு "ஜனநாயகப் படுகொலை" என்று அவர் வர்ணித்து உள்ளார்.

ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் எதிரான தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும், தேர்தல் ஆணையம் தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்பட வேண்டுமே தவிர, ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளுக்குத் துணை போகக் கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: