வெள்ளி, 27 மார்ச், 2026

கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தி ; தி.மு.கவில் இணைந்த அ.ம.மு.க முக்கிய நிர்வாகி !!!

SHARE

 கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால் அதிருப்தி ; தி.மு.கவில் இணைந்த அ.ம.மு.க முக்கிய நிர்வாகி !!!

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, பாபநாசம் தொகுதி ஒதுக்கப்படாத அதிருப்தியில் அக்கட்சியில் இருந்து விலகி முறைப்படி தி.மு.க வில் இணைந்தார்.

தஞ்சாவூர் மாவட்ட அரசியலில் நீண்ட காலமாகச் செல்வாக்குடன் விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) துணைப் பொதுச் செயலாளருமான எம். ரெங்கசாமி, நேற்று முறைப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க) இணைந்து உள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு இடையே, தற்போது ரெங்கசாமியின் இந்த அதிரடி முடிவு டெல்டா மாவட்ட அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் டி.டி.வி தினகரனை ஆதரித்த காரணத்தால், ரெங்கசாமி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இருப்பினும் அ.ம.மு.க வில் மிக முக்கியப் பொறுப்பில் இருந்து வந்த அவர், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டுப் பாபநாசம் தொகுதியில் மீண்டும் போட்டியிடத் தயாராக இருந்தார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் அதே பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட அவர், சுமார் 19,000 வாக்குகள் வரை பெற்றுத் தனது செல்வாக்கை நிரூபித்து இருந்தார்.

தற்போது அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க இடம் பெற்று உள்ள நிலையில், பாபநாசம் தொகுதி மீண்டும் அ.ம.மு.க வுக்கு ஒதுக்கப்படும் என்று ரெங்கசாமி தரப்பு பெரிதும் எதிர்பார்த்தது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாபநாசம் தொகுதி அ.ம.மு.க வுக்குக் கிடைக்காதது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணியின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த ரெங்கசாமி, தனது அரசியல் பயணத்தைத் தி.மு.க வில் தொடர முடிவெடுத்து உள்ளார்.

தி.மு.க வில் இணைந்த கையோடு, பாபநாசம் தொகுதியில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ரெங்கசாமி தரப்பினர் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது வருகை தி.மு.க வுக்குப் பாபநாசம் பகுதியில் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் எனக் கருதப்படுவதால், அத்தொகுதி அவருக்கே ஒதுக்கப்படலாம் என்ற பலமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: