செவ்வாய், 17 மார்ச், 2026

ஸ்பேனர் இல்லை... கொடியைக் கழட்ட முடியாது" - கோவையில் பறக்கும் படையுடன் தி.மு.க வைச் சேர்ந்த நபர் வாக்குவாதம் !!!

SHARE

ஸ்பேனர் இல்லை... கொடியைக் கழட்ட முடியாது" - கோவையில் பறக்கும் படையுடன் தி.மு.க வைச் சேர்ந்த நபர் வாக்குவாதம் !!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கோவையின் பேரூர் - சிறுவாணி சாலையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் தி.மு.க வைச் சேர்ந்த ஒருவர் இடையே ஏற்பட்ட ‘ஸ்பேனர்’ வாக்குவாதம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அரசியல் கட்சியினர் தங்கள் வாகனங்களில் கட்சிச் சின்னங்களையோ, கொடிகளையோ அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாது என்பது விதியாகும்.

இந்நிலையில் பேரூர் - சிறுவாணி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர், துணை ராணுவத்தினருடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றில் தி.மு.க கொடி கட்டப்பட்டு இருந்தது. இதைக் கண்ட சித்ரா அதிகாரிகள், காரை உடனடியாக நிறுத்தி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் காரில் உள்ள கொடியை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

காரில் இருந்த தி.மு.க வைச் சேர்ந்த நபர், அதிகாரிகளிடம் "கொடியைக் கழற்றுவதற்கு என்னிடம் இப்போது ஸ்பேனர் (Spanner) கிடையாது" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

ஸ்பேனர் இல்லாமல் கொடியை அவிழ்க்க முடியாது என்பதால், கொடியுடனேயே வாகனத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு அவர் கோரினார். 

ஆனால், "கொடியுடன் காரைச் செல்ல அனுமதிக்க முடியாது" என அதிகாரி சித்ரா மறுத்து விட்டனர்.

​சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, "சரி, நானே எங்காவது ஸ்பேனர் எடுத்து வந்து கொடியை அவிழ்த்து விட்டு, அதன் பிறகு காரை எடுத்துச் செல்கிறேன்" எனக் கூறி விட்டு அந்த நபர் அங்கு இருந்து காரை நிறுத்தி விட்டு சென்றார்.

 தேர்தல் விதிகளைச் செயல்படுத்துவதில் அதிகாரி சித்ரா காட்டிய கறார் தன்மையும், தி.மு.க தொண்டரின் ‘ஸ்பேனர்’ விளக்கமும் அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: