கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்டு குழந்தைகள் பாதிப்பு – கோவை லுலு மால் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர் புகார்...
கோவை மதுக்கரையை சேர்ந்த சசிகுமார் என்பவர், நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் தனது இரண்டு குழந்தைகளுடன் கோவை புளியகுளம் சாலையில் உள்ள லுலு மாலுக்கு சென்று உள்ளார். அப்போது அங்குள்ள உணவகத்தில் இருந்து சிக்கன் லாலிபாப் பார்சல் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து உள்ளார். குழந்தைகள் அந்த சிக்கனை சாப்பிட்ட சில நேரங்களிலேயே கடுமையான வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த சசிகுமார், மீதமிருந்த சிக்கனை பரிசோதித்த போது அதில் துர்நாற்றம் வீசி உள்ளது.
இதை அடுத்து உடனடியாக அந்த உணவகம் தொடர்பான பணியாளர்களிடம் புகார் தெரிவித்த போது, அவர்கள் அலட்சியமாக பதில் அளித்து, உரிய விளக்கம் தராமல் தவிர்த்து உள்ளனர்.
இதனால் மேலும் அதிருப்தி அடைந்த அவர், சம்பவத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து தனது குடும்பத்துடன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்துக்கு சென்று, கெட்டுப்போனதாக கூறப்படும் சிக்கன் உணவுப் பொருளுடன் நேரடியாக மனு அளித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த சிக்கனை சாப்பிட்டதால் என் இரண்டு குழந்தைகளும் நானும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். இதுபோன்ற சம்பவங்கள் மற்றவர்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும் ஏற்படாமல் இருக்க உரிய விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட லுலு மால் மற்றும் உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து, கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு நடத்தி உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சேமிப்பு முறைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், நகரில் உள்ள பெரிய வணிக வளாகங்களில் உணவு பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி உள்ளது.

0 கருத்துகள்: