தி.மு.க, அ.தி.மு.க வினரை வேட்பாளர்களாக களமிறக்கிய த.வெ.க - அமைச்சர் கீதா ஜீவன் விமர்சனம் !!!
தி.மு.க, அ.தி.மு.க வினரை தேடிப்பிடித்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்து உள்ளார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ள கீதா ஜீவன் தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ கொரோனா, பெருவெள்ளம் உள்ளிட்ட அனைத்து அவசர சூழ்நிலைகளிலும் மக்களுடன் இருந்து பணியாற்றி, எந்த நிலையிலும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளேன். முதலமைச்சர் அறிவித்தபடி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
முதலமைச்சர் அறிவித்து உள்ள தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு ரூ.8000 கூப்பன், காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களுக்கு லேப்டாப், மகளிர் உரிமைத்தொகை உயர்வு, விவசாயிகளுக்கு நவீன பம்பு செட், நகரப்பகுதிகளில் வீடுகள், கோயில் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களை வீடு தோறும் எடுத்துச் சென்று விளக்க உள்ளோம்.
சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம்' என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளதே தி.மு.க தேர்தல் அறிக்கையின் பலம். தூத்துக்குடி தொகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத புதிய தொழிற்சாலைகள், SIPCOT வளாகத்தில் மல்டி லெவல் லாஜிஸ்டிக்ஸ் பார்க், சாலை மற்றும் மேம்பால வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அ.தி.மு.க வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கீதாஜீவன்,
“இப்போது போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் களமே தெரியாதவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்தப் பிரச்சனையிலும் மக்களுடன் இருக்கவில்லை. தி.மு.க 50,000-க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.
தொடர்ந்து, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கா.கருணாநிதிக்கு ஆதரவாக தெற்கு திட்டங்குளத்தில் உள்ள தனியார் தினசரி சந்தை நிர்வாகிகளிடம் அமைச்சர் கீதா ஜீவன் வாக்கு சேகரித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
”கோவில்பட்டி தொகுதியில் இந்த முறை வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. நிச்சயமாக தி.மு.க வெல்லும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை தி.மு.க காப்பி அடித்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுவது உண்மை அல்ல. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை எல்லாம் தேர்தல் வாக்குறுதிகளாக கூறி இருந்தனர். நேற்று தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர போக்குவரத்து தொடங்கப்படும் என வாக்குறுதி கொடுத்து உள்ளனர்.
அதே போன்று, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முயற்சியினால், புதிய கிழக்கு கடற்கரை சாலை வழி உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த புதிய கிழக்கு கடற்கரை சாலை வழித்தடம் குறித்து அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் உள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் இதுவரை திமுகவின் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக இருக்கும். தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தான் மக்கள் நம்புவார்கள்” என பேசினார்.
மேலும், “கோவில்பட்டி மார்க்கெட் விவகாரத்தில் அதிருப்தி என்பது எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம். தனியார் மார்க்கெட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளோம். தனியார் மார்க்கெட் அமைப்பதற்கு தி.மு.க அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து உள்ளது. பெரிய மார்க்கெட் உருவாகும். இப்பகுதி வளர்ச்சிக்கு வித்திடும்” என்றார்.
விஜய்யின் த.வெ.க குறித்து பேசிய அவர், “த.வெ.க-வின் நிலைமை எந்த அளவுக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது, கீழ் இறங்கி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். த.வெ.க, வேட்பாளர்களை தேடிய கதை நமக்கு தெரியும். ஆர்.எஸ். முருகன் என்பவர் தி.மு.க வில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். இங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் த.வெ.க வேட்பாளர். அதேபோன்று அ.தி.மு.க வை சேர்ந்த நாராயணன் என்பவர் நாங்குநேரியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். அங்கு அவருக்கு கிடைக்கவில்லை. இன்றைக்கு அவர் த.வெ.க வேட்பாளர்.
தேடித் தேடி பிடித்து வேட்பாளர்களை கொண்டு செல்வது தான் அவர்களது நிலைமை. விஜய் சொல்லிக் கொண்டு இருப்பதை சொல்லிக் கொண்டே இருக்கட்டும். தேர்தல் முடிந்ததும் உண்மை நிலைமையை அவர் அறிவார்” என்றார்.

0 கருத்துகள்: