தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா ? - நயினார் நாகேந்திரன் விளக்கம் !!!
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா ? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. விஜய் வருவதில் விருப்பம் உள்ளதா ? என்பதில் நான் கருத்து கூற முடியாது என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வேண்டும் என்றே பெட்ரோல், டீசல் தட்டுபாடு உள்ளது போன்று நிலையை தி.மு.க வினர் உருவாக்குகிறார்கள் என அவர் கூறினார்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க தேர்தல் ஊடக பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது :
முன்பெல்லாம் பெரியவர்கள் சாதியை சொல்லி அழைத்து பேசுவார்கள், அப்போது சாதி உதட்டில் மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது உள்ளத்தில் சாதி உள்ளது. அனைவரும் நடிக்க பழகி விட்டனர். செய்தியாளர்களுடன் பேசும் போது கவனமாக பேச வேண்டும் கொஞ்சம் வார்த்தை தவறினால் பிரச்னையாகிவிடும். அதற்கு நானே உதாரணம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில் (ஏஐ) பெரிய போர் உருவாகி விட்டது. தேர்தல் நேரத்தில் கட்சி தலைமை என்ன சொல்கிறது என்ற அடிப்படையில் பேச வேண்டும். சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும். பா.ஜ.க வின் நல்ல திட்டங்கள் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். அந்தந்த பகுதிகளுக்கேற்ற செய்திகளை வழங்க வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் முக்கிய பிரச்னை பெண்களுக்கு எதிரான வன்கொடுமை. இதற்கு காரணம் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு தான். இதனை முதல்வர் கட்டுபாட்டில் உள்ள காவல் துறைதான் கட்டுபடுத்த வேண்டும்.
40 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி. தி.மு.க ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கஞ்சா, சட்டம்- ஒழுங்கு, சிறை கைதிகள் சாவுகள் குறித்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
மேலும், சமீபத்தில் திருப்பதி சென்ற போது அங்கு பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் இல்லை, ஆனால் இங்கு பெட்ரோல் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாக செய்திகள் வருகிறது. காரணம் தி.மு.க வினர் 100 பேர் இருசக்கர வாகனத்தில் சென்று பெட்ரோல் நிலையங்கள் முன்பு நின்று கொண்டு பெட்ரோல், தட்டுப்பாடு இருப்பது போன்ற செயற்கையாக தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை தடுக்க வேண்டும் என தெவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:
வரும் பேரவைத் தேர்தலில் மோசமான தி.மு.க ஆட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவது நிச்சயம்.
தமிழ்நாட்டுக்கும் - டெல்லிக்குமான தேர்தல் என்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் குடும்ப ஆட்சிக்கும் - தமிழக மக்களுக்குமான தேர்தல் இது. 2 வயது சிறுமி கூட பாதுகாப்பாக இல்லை, ரத்த காயங்களுடன் வன்புணர்வு செய்யப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் விளாத்திகுளம் சம்பவம் போல் நாள்தோறும் நடந்து வருகிறது. ஆட்சியின் அவலங்கள் நாள்தோறும் வெளியாகி வருகிறது. கஞ்சாவுடன் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருகிறாரா ? நேரடியாகவோ ? மறைமுகமாகவோ ? பேச்சுவார்த்தை நடத்தினீர்களா ? என்ற கேள்விக்கு,
அதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கு தெரிந்த அளவுக்கு கூட எனக்கு அதுகுறித்த விவரம் இல்லை.
விஜய்யை பா.ஜ.க, சி.பி.ஐ விசாரணை என்று அழைத்து மிரட்டி கூட்டணிக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே ? என்ற கேள்விக்கு,
எதிர்கட்சிகள் நாங்கள் விஜய்யை மிரட்டுவதாக கூட கூறலாம். ஆனால் அவை பொய்... தமிழ்நாட்டில் நாள்தோறும் கொலை, கொள்ளை நடக்கிறது. நாங்குநேரி, சிவகங்கையில் கஞ்சா போதையில் வருவோர் போவோரை எல்லாம் வெட்டுகிறார்கள். இதை ஆளும்கட்சி தான் செய்கிறது. அதற்கு காரணம் கஞ்சா தானே. நான் நாட்டு மக்களுக்கு நடக்கும் தீயவைகள் குறித்து பேசுகிறேன் உங்களுக்கு இருக்கும் ஒரே கவலை கூட்டணி இருக்கிறதா, இல்லையா ? என்பதாக உள்ளது.
உங்கள் கூட்டணிக்கு விஜய் வர வேண்டும் என்று விரும்புகிறீகளா ? என்ற கேள்விக்கு
விஜய் வருவதில் விருப்பம் உள்ளதா என நான் கூற முடியாது என்றார்.
விஜய் ஒருநாள் முன்பே விஜய் டெல்லி செல்வதால் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதா ? என்ற கேள்விக்கு
கரூர் சம்பவத்திற்காக டெல்லி செல்கிறார். அதனை வேறு விஷயங்களுடன் தொடர்பு படுத்தக் கூடாது எனக் கூறினார்.
விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா ?
இது குறித்து நான் கருத்து கூற முடியாது என்றார்.
வரும் 17 தேதி அ.தி.மு.க வுடன் இணைந்து தி.மு.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். 17 ஆம் தேதிக்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.

0 கருத்துகள்: