திங்கள், 23 மார்ச், 2026

துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு !!!

SHARE

 துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு !!!

துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘துரந்தர்’. பான் இந்தியா திரைப்படமான இதனை பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கி இருந்தார். கடந்த டிசம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த நிலையில், அதன் இரண்டாவது பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ மார்ச் 19 ஆம் தேதி வெளியானது.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் ஓடும் இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் தமிழக திரையரங்குகளில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு வழக்கறிஞர் ஷீலா என்பவர் அவசர முறையீடு செய்தார்.

"தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாகவும், ஒரு கட்சி சார்பான கருத்துகள் அதிகம் வலியுறுத்தப்படுவதாலும் 'துரந்தர் 2' திரைப்படத்தை, தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் வெளியிட தடை விதிக்க வேண்டும். தேர்தலுக்கு பின் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கலாம்" என அதில் அவர் கோரியிருந்தார்.

இந்த முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, திரைப்படம் வெளியாகி விட்டது. முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்

இதன் இடையே, இந்த திரைப்படம் மீது மும்பையைச் சேர்ந்த சிக்கிய அமைப்பும் புகார் அளித்து இருக்கிறது. இந்த படத்தில் சீக்கிய மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங், தலைப்பாகை, தாடியுடன், கையில் கடா அணிந்து கொண்டு சிகரெட்டை பிடித்தபடி, சீக்கியர்களின் பாரம்பரிய உடையில் இருக்கும் போஸ்டர் இந்த சர்ச்சைக்கு காரணமாகி இருக்கிறது.

இது குறித்து மகாராஷ்டிரா சீக்கியர்கள் குழுவின் தலைவர் சர்தார் குர்ஜோத் சிங், "சீக்கிய மதத்தில் இந்த அடையாளங்கள் ஆழ்ந்த ஆன்மிக அர்த்தங்களை கொண்டு உள்ளன. அவை இந்த படத்தில் அவமரியாதை செய்யப்பட்டு இருக்கிறது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நடிகர் மாதவன், குர்பானி வசனத்தை கூறிக் கொண்டே புகைபிடிக்கும் காட்சியும் படத்தில் இடம்பெற்று இருக்கிறது. எனவே சர்ச்சைக்குரிய அந்த போஸ்டரை நீக்க வேண்டுமென்றும், அதே போல் நடிகர் மாதவன் பேசும் வசனத்தை நீக்க வேண்டுமெனவும் சீக்கிய அமைப்பு சார்பில் கோரிக்கை வைத்து இருக்கிறோம். மேலும், தேவையான திருத்தங்களை செய்யும் வரை படத்திற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.

மேலும் அந்த புகாரில், படத்தின் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்கள் உள்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டு உள்ள நிலையில், இதுவரை படக்குழு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: