பெண்களுக்குப் பாதுகாப்பு 'அரண்': தற்காப்பு முதல் சட்ட ஆலோசனை வரை - மகளிர் தினத்தில் திட்டத்தை துவக்கி வைத்த தேசிய மகளிர் அணி தலைவி எம்.எல்.ஏ வானதி !!!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் கல்வி மற்றும் தொழில் மையமான கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் *"அரண்"* என்ற புதிய பாதுகாப்புத் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
கோவை, விடுதி உரிமையாளர்கள் சங்கம் (Hostel Owners Association) மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்து உள்ள இந்த துவக்க நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் வரப்பிரசாதமாக இருந்தாலும், மறுபுறம் பெண்களுக்குப் பல்வேறு சவால்களையும், அச்சுறுத்தல்களையும் உருவாக்கி வரும் நிலையில், இந்த *"அரண்"* திட்டம் ஒரு கேடயமாக அமையும் என விழாவில் பேசப்பட்டது.
சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசும்போது...
விடுதி உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு விவகாரத்தில், தான் முன்னின்று மத்திய அரசிடம் பேசித் தீர்வு கண்டதை பாராட்டிய விடுதி உரிமையாளர்கள், அதை நினைவு கூர்ந்த அவர், அதற்கு நன்றி சொல்ல வந்தவர்களிடம் தான் வைத்த ஒரு கோரிக்கை குறித்துப் பேசினார்.
"வழக்கம் போல பூங்கொத்து, சால்வை கொடுத்து விட்டு நன்றி சொல்லி விட்டு மட்டும் போக உங்களை விட மாட்டேன்" என்று தான் சொன்ன போது, விடுதி உரிமையாளர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்ததனர் என்றும், "எம்.எல்.ஏ வேறு என்ன கேட்கப்போகிறாரோ ?" எனப் பயந்ததாக அவர் சிரித்துக் கொண்டே குறிப்பிட்டார்.
அந்தப் பயத்தைப் போக்கும் விதமாக, "உங்கள் விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு திட்டத்தை அமைத்துக் கொடுங்கள்" எனத் தான் கேட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே கடந்த 7, 8 மாத காலத் திட்டமிடலுக்குப் பிறகு இன்று இந்த 'அரண்' திட்டம் அரங்கேறி உள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், ஒரு வாரம் முழுவதும் வேலை செய்த களைப்பில் ஓய்வெடுக்க நினைக்காமல், விடுதி உரிமையாளர்கள் உங்களை இங்கே கூட்டி வந்து விட்டார்களே என நீங்கள் நினைக்கலாம் என மாணவிகளிடம் நகைச் சுவையாகப் பேசிய வானதி சீனிவாசன்,
கால மாற்றத்தின் அவசியத்தை "ஒரு காலத்தில் பெண்களுக்குப் படிப்பே கிடையாது என்ற நிலை இருந்தது; பிறகு பள்ளி, கல்லூரி என முன்னேறி, இன்று வீட்டை விட்டு வெளியேறி விடுதிகளில் தங்கிப் படிக்கும் அளவிற்கு காலம் மாறி இருக்கிறது. படித்த படிப்பு வீணாகக் கூடாது என்பதற்காகப் பெண்கள் வேலைக்குச் செல்வதோடு மட்டுமன்றி, இரவு நேரங்களில் கூடப் பணிக்குச் செல்ல வீடுகளில் அனுமதிக்கும் அளவிற்குப் பெரியதொரு சமூக மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது" என அவர் உரையாற்றினார்.
இப்படி வெளியே வந்து சாதிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்புச் சவால்கள் வரும் போது, அதை எதிர்கொள்ளும் துணிச்சலைத் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.
மேலும் பெண்கள் எதிர்கொள்ளும் மன ரீதியான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது முதல், அவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குவது வரை இந்தத் திட்டம் விரிவான பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
குறிப்பாக, ஆபத்துக் காலங்களில் தற்காப்பு கலைகளின் அவசியம் குறித்தும், சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும் இந்தப் பயிற்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும்
*"பெண்கள் வெறும் புகார்களை மட்டும் சுமந்து செல்பவர்கள் அல்ல, அவர்கள் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்கள்"* என கூறினார்.

0 கருத்துகள்: