ஆறு தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் : குறைந்த தொகுதி ஏற்றுக் கொள்ள முடியவில்லை - சி.பி.எம் சண்முகம் ஆதங்கம் !!!
தி.மு.க 5 இடங்களை கொடுத்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம் ஆதங்கத்துடன் கூறினார்.
தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நீண்ட இழுபறிக்குப் பின்னர் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளை தி.மு.க ஒதுக்கி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தி.மு.க ஆறு இடங்களை ஒதுக்கிய நிலையில், இப்போது ஒரு தொகுதி குறைத்து வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களை ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.பி.எம் மாநில செயலாளர் சண்முகம், '' அதிகமான கட்சிகள் அணியில் இடம் பெற்று இருப்பதாலும், புதிய கட்சிகள் சேர்ந்து இருப்பதாலும் தொகுதியை பகிர்ந்து அளிக்கும் சூழ்நிலையில் தி.மு.க உள்ளது. இதனால் நாங்கள் கேட்கும் எண்ணிக்கையிலான தொகுதியை தர இயலவில்லை என்று, தி.மு.க தரப்பில் தெரிவித்தனர்.
ஆகையால் 6 என்பதில் ஒரு தொகுதியை குறைத்து 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுக்கும் நிலைப்பாடு எந்த விதத்திலும் என்.டி.ஏ கூட்டணிக்கு உதவி செய்யும் வகையில் இருந்து விடக் கூடாது; நாங்கள் எடுக்கும் முடிவு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வோடு இந்த தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டோம்.
இருப்பினும், இந்த எண்ணிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. தி.மு.க தலைமையிலான அணி வெற்றி பெற தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சியை மேற்கொள்ளும். தொகுதி குறைப்பு என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறோம் ? என்ற பட்டியலை முதலமைச்சரிடம் வழங்கி உள்ளோம். சென்னை மாநகருக்குள் ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்று எங்களது பட்டியலை கொடுத்து உள்ளோம். தொகுதி எண்ணிக்கை குறைவதால் கட்சி அழிந்து போகும் என்ற தன்மை இந்த அணியில் இல்லை'' என கூறினார்.

0 கருத்துகள்: