பா.ஜ.க சீலுடன் தேர்தல் ஆணையத்தின் கடிதம் : சி.பி.எம் விமர்சனம் - தேர்தல் ஆணையம் விளக்கம் !!!
கேரளாவில் பா.ஜ.க முத்திரையுடன் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வெளியான நிலையில், தவறு நடந்து விட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது.
கேரளாவில் 2 நாட்களுகு முன்பு, பா.ஜ.க முத்திரையுடன் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்தின் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம், ஊடகங்களில் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்து உள்ளது. அதில், "அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் குற்ற பின்னணியை வெளியிடுவது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம், கடந்த 2019-இல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது. அந்த நெறிமுறைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு அண்மையில் கேரள பா.ஜ.க, மாநில தேர்தல் ஆணையத்த்தில் கடிதம் அளித்தது. அந்த கடிதத்துடன், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய உத்தரவின் நகலையும் இணைத்து இருந்தனர்.
ஆனால் பா.ஜ.க வின் முத்திரை இருப்பதை கவனிக்காமல், அந்த நகலையே, மற்ற அரசியல் கட்சிகளுக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் துணை தலைமை தேர்தல் அதிகாரி, மார்ச் 19 ஆம் தேதி மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார்.
இதில், தவறு நடந்து விட்டதை அறிந்து, உடனடியாக அந்த சுற்றறிக்கையை திரும்ப பெறுவது தொடர்பாக அனைத்து கட்சிகளும் முறையாக கடிதம் அனுப்பப்பட்டது.
எனவே, பொதுமக்களும், ஊடகங்களும் இந்த தவறை பெரிதுபடுத்தி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. எந்தவொரு வெளிப்புறத் தாக்கத்திற்கும் இடம் கொடுக்காமல் தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதில் தேர்தல் ஆணையம் உறுதி பூண்டு உள்ளது" என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க முத்திரையுடன் கூடிய தேர்தல் ஆணையத்தின் கடிதம், இரண்டு நாட்களுக்கு முன்பு, கேரளாவில் உள்ள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சி சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், "தேர்தல் ஆணையத்தையும் பா.ஜ.க வையும் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது ஒரே அதிகார மையம் தான் என்பதில் எந்த ரகசியமும் இல்லை.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில், எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரை சின்னத்தை காட்டுவது போன்று, இதுவும் ஒரு தற்செயலான நிகழ்வு தான். தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வும் ஒரே முத்திரையை பயன்படுத்தி வருகின்றன" என்று விமர்சித்து உள்ளது.

0 கருத்துகள்: