செவ்வாய், 10 மார்ச், 2026

ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க வலியுறுத்தல் : கோவையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் அதிரடி கைது !!!

SHARE

 ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க வலியுறுத்தல் : கோவையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் அதிரடி கைது !!!

மத்திய அரசு திட்டங்களுக்குத் தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது" - பா.ஜ.க மத்திய அரசு நலத் திட்ட பிரிவு குற்றச்சாட்டு !!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தியும், மத்திய அரசு திட்டங்களைச் மறைப்பதாக கூறி தமிழக அரசைக் கண்டித்தும் கோவையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.க வினர் 49 பேரை போலீசார் கைது செய்தனர்.

​மத்திய அரசின் 'அன்ன யோஜனா' (PMGKAY) திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மாதந்தோறும் சுமார் இரண்டு லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்த தகவல் பலகையும், பிரதமர் மோடியின் புகைப்படமும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இடம்பெற வேண்டும் என்று பா.ஜ.க மத்திய அரசு நலத் திட்ட பிரிவினர் வலியுறுத்தினர். மேலும்

​மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) மருத்துவக் காப்பீடு அட்டையை மருத்துவமனைகள் ஏற்க மறுப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். 

இத்திட்டத்தை மாநில அரசுத் திட்டமாக (முதலமைச்சர் காப்பீடு) மாற்றிக் காட்ட முயற்சி நடப்பதாகவும், இதனால் ஏழை நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

​மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் திட்டங்களில் பிரதமரின் பெயர் தெரியக் கூடாது என்பதற்காகத் தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்படுவதாகப் போராட்டக் குழுவினர் அதிருப்தி தெரிவித்தனர். 

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கியதாகக் கூறினர்.

​முன்னதாக, மாநகர காவல் ஆணையரிடம் உரிய அனுமதி பெற்றே அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்ததாக பா.ஜ.க வினர் தெரிவித்தனர். 

இருப்பினும், போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி போலீசார் அவர்களைக் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும் பா.ஜ.க வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இறுதியில், சுமார் 49 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: