சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு - குடிநீர் எடுக்கும் அளவு குறைப்பு !!!
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் அணையில் எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சியில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி, பில்லூர் 1,2 மற்றும் 3 உள்ளிட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறுவாணி அணை நீரானது மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 23 வார்டுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இது தவிர வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பருவமழை நன்றாக பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் தண்ணீர் நிரம்பி காணப்பட்டன. கோவை சிறுவாணி அணையும் தண்ணீர் நிரம்பியது. இந்த அணை 49.5 அடி உயரம் கொண்டது. இருப்பினும் பாதுகாப்புக் கருதி இந்த அணையில் 44 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க கேரளா அதிகாரிகள் அனுமதிக்கின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்பொழுது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்தால், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதன்படி தற்போது ஒரு நாளைக்கு 5 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் துறை அலுவலர்கள் கூறும் போது
சிறுவாணி அணையானது கேரளா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த அணையில் இருந்து நாள்தோறும் 10 கோடி லிட்டர் தண்ணீர் குடிநீருக்காக எடுக்க முடியும், தற்பொழுது அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக சரிந்ததால் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் அளவை 5 கோடி லிட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 20 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்தது. கோடை மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் மே இறுதி அல்லது ஜூன் மாதம் தொடக்கத்தில் பருவமழை பெய்யும் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.


0 கருத்துகள்: