ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு: பா.ஜ.க., அ.தி.மு.க.வின் 'சீட்' கனவை கலைத்த ஜான் பாண்டியன் - ராஜேந்திர பாலாஜியின் அரசியல் சதுரங்கம் !!!
கௌதமி, கோபால்சாமிக்கு ஏமாற்றம்; சத்தமில்லாமல் தொகுதியை தட்டித் தூக்கிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ..
ராஜபாளையம் தொகுதியில் பா.ஜ.க முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்கிய நிலையில் 2021 தேர்தலை போல் இந்த முறையும் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க வுக்கு ஒதுக்கப்படாததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மக்களவை தேர்தலில் அமைதியாக இருந்து கடைசி நேரத்தில் தென்காசி தொகுதியை பெற்ற ஜான் பாண்டியன், சட்டபேரவை தேர்தலிலும் யாரும் எதிர்பாராதவிதமாக ராஜபாளையம் தொகுதியை பெற்று உள்ளார்.
ராஜபாளையம் தொகுதியில் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பா.ஜ.க பொறுப்பாளராக நடிகை கவுதமியை பா.ஜ.க மேலிடம் அறிவித்தது. உடனடியாக ராஜபாளையத்தில் வீடு எடுத்து குடியேறிய கவுதமி, அங்கேயே தங்கி இருந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன் இருந்தே வேட்பாளர் போல தொகுதி முழுவதும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தார்.
ஆனால், தொகுதி பங்கீட்டில் ராஜபாளையம் தொகுதியை பா.ஜ.க வுக்கு ஒதுக்காமல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் பா.ஜ.க தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அ.தி.மு.க வில் இணைந்த கவுதமி, 2026 தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார்.
அதேபோல் அ.தி.மு.க வில் இருந்து பா.ஜ.க வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ கோபால்சாமி, ராஜபாளையம் தொகுதியை எதிர்பார்த்து கடந்த 6 மாதங்களாக தேர்தல் பணியாற்றி வந்தார். பா.ஜ.க வின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதும், கோபால்சாமி மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனால் சீட் கிடைக்கும் என உறுதியாக நம்பி இருந்தார் கோபால்சாமி. ஆனால் திடீர் திருப்பமாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ராஜபாளையத்தில் அக்கட்சி தலைவர் ஜான் பாண்டியன் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
2021 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும், ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகமும் இடம்பெற்று இருந்தன.
அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்த போது இரு கட்சிகளுமே பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து வந்தன. கிருஷ்ணசாமி தான் 6 முறை போட்டியிட்ட தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாராகி சட்டப்பேரவை தொகுதிவாரியாக கட்சி அலுவலகங்களை திறந்து முன்கூட்டியே பணிகளை தொடங்கினார்.
ஆனால் பா.ஜ.க வை சேர்ந்த ஆனந்தன் அய்யாசாமி தென்காசியில் போட்டியிட தயாரானதால் அதிருப்தி அடைந்த கிருஷ்ணசாமி அ.தி.மு.க கூட்டணிக்கு மாறி, தென்காசியில் சீட் பெற்றார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பா.ஜ.க கூட்டணியில் தென்காசி தொகுதியை பெற்ற ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார்.
அதேபோல் ராஜபாளையம் தொகுதிக்கு பா.ஜ.க, அ.தி.மு.க முனைப்பு காட்டி வந்த நிலையில், சத்தமில்லாமல் ஜான் பாண்டியன் ராஜபாளையம் தொகுதியை பெற்று, இரட்டை இலை அல்லது தாமரை எந்த சின்னத்தில் போட்டியிடலாம் என யோசித்து வருகிறார்.
ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்த ராஜேந்திர பாலாஜி:
முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் சாத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு பல்வேறு பணிகளையும், பொதுச் செயலாளர் பழனிசாமியின் யாத்திரை ஏற்பாடுகளையும் அவரே செய்தார். இவர் சாத்தூர் எம்.எல்.ஏ வாக இருந்த போது ராஜேந்திர பாலாஜி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதேபோல், ராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ கோபால்சாமி அ.தி.மு.க வில் ராஜேந்திர பாலாஜி உடன் ஏற்பட்ட மோதலால் பா.ஜ.க வில் இணைந்தவர். இருவருக்கும் சீட் கிடைக்கக் கூடாது என தொடக்கம் முதலே காய் நகர்த்தி வந்தார் ராஜேந்திர பாலாஜி.
சாத்தூரை பா.ஜ.க வுக்கும், ராஜபாளையத்தை ஜான் பண்டியனுக்கும் ஒதுக்கியதன் மூலம் ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடித்து உள்ளார் ராஜேந்திர பாலாஜி என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

0 கருத்துகள்: