கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க விற்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ.க வினர் திடீர் சாலை மறியல் போராட்டம் - தொண்டர் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு !!!
கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க விற்கு ஒதுக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ.க வினர் இன்று மாலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு , கோவை வடக்கு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளதால் பா.ஜ.க தொண்டர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். குறிப்பாக கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி இந்த முறை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அக்கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த ராஜன் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் ஏராளமான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வந்து இருந்தார். இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க விற்கு ஒதுக்கப்பட்டு விட்டது.
இந்நிலையில் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தெற்கு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியினர் இன்று மாலை ஒன்று கூடி ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஆவேசம் அடைந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் திடீரென பொள்ளாச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது பாஜகவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் திடீரென தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கிணத்துக்கடவு தொகுதி தங்களுக்கு வேண்டும் என பா.ஜ.க தொண்டர்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க தொண்டர்களை அக்கட்சியின் நிர்வாகிகள் சமரசப்படுத்தி மீண்டும் அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
அப்பொழுது கோவை கிணத்துக்கடவு தொகுதி பா.ஜ.க விற்கு ஒதுக்கப்படும் என ஒதுக்க எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒதுக்கப்படாததால் தொண்டர்கள் ஆவேசம் அடைந்ததாகவும் அவர்களை சமரசப்படுத்தி இருப்பதாகவும் முன்னாள் மாவட்ட தலைவர் வசந்த ராஜன் தெரிவித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களை பெற்று கட்சியினருக்கு வாய்ப்புகளை பெறுவோம் என சொல்லி சமரச படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே தங்களது லட்சியம் எனவும் தற்பொழுது ஏற்பட்டுள்ள கோபம் ஒரு சில தினங்களில் மறைந்து போகும் எனவும் அவர் தெரிவித்தார். ஈச்சனாரி பகுதியில் நடந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது....

0 கருத்துகள்: