4 மாதத்தில் விசாரணை முடிந்தது : கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை - கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !!!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. சம்பவம் நடந்து 4 மாதத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மதுரை சேர்ந்த 21 வயது மாணவி கோவையில் விடுதியில் தங்கி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது ஆண் நண்பருடன், கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரில் காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.
பின்னர் அவர் சிறுநீர் கழிக்க மறைவான பகுதிக்கு சென்றார். அங்கு இருளில் பதுங்கி இருந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், அவர்களின் உறவினரான மதுரையைச் சேர்ந்த குணா என்ற தவசி ஆகியோர் அரிவாளை காட்டி மாணவியை மிரட்டினர்.
அதை தூரத்தில் இருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆண் நண்பர் மூன்று வாலிபர்களையும் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரை வெளியே இழுத்து தலையில் வெட்டினர். பின்னர் மாணவியை அரை கிலோ மீட்டர் தூரம் கடத்திச் சென்று மூன்று பேரும் கூட்டுச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதற்கு இடையே ரத்தக் காயத்துடன் சாலைக்கு ஓடி வந்த ஆண் நண்பர் எதிரே வந்த ஒருவரிடம் செல்போனை வாங்கி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இரவு 10:45 மணி அளவில் போலீசார் விரைந்து வந்து மாணவியை தேடினர். இதை அறிந்தவர்கள், மூன்று பேரும் மாணவியை அருகில் இருந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி பின்புறப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு இருந்து சுவரைத் தாண்டிச் சென்று மோட்டர் பம்ப் அறையில் வைத்து மாணவியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
சுவரின் மறுபக்கத்தில் போலீசார் தேடிய போதும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமையை அரங்கேற்றினர். அப்பொழுது கூச்சல் போட்டால், கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் எதுவும் செய்ய முடியாமல் மாணவி தவித்தார். இதனால் போலீசார் அதிகாலை 4:00 மணி வரை மாணவியை மீட்க முடியவில்லை.
இந்நிலையில் பாலியல் பலாத்கார ஆசாமிகள் அதிகாலை 4 மணி அளவில் வாலிபர்கள் மூன்று பேரும் அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்தக் கொடூர சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்து மீளாத அந்த மாணவி அருகில் இருந்த வீடுகளை நோக்கிச் சென்று கதவை தட்டி தனக்கு நேர்ந்த கதி குறித்து மாணவி கூறி அழுதார்.
மேலும் அவர்களிடம் போன் வாங்கி தனது தாயாருக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் காவல் துறையினர் மாணவியை மீட்டனர். மேலும் தப்பிய மூன்று பேரையும் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தினார்.
இதில் அந்த மூன்று பேரும் பஸ் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கோவை காவல் ஆணையராக பதவி வகித்த சரவண சுந்தர் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் தேவநாதன், கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் நம்பர் மற்றும் 200 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்து, குற்றவாளிகள் குறித்து விவரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணையில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட கருப்புசாமி, அவருடைய தம்பி காளீஸ்வரன், உறவினர் தவசி என்பதும் அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மறுநாள் 3 ம் தேதி துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் ஒரு இடத்தில் அந்த மூன்று பேரும் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது காவல்து றையினர் அங்கு விரைந்து சென்ற போது அவர்களை தாக்கி விட்டு மூன்று பேரும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டு 3 பேரையும் பிடித்தனர். கூட்டு பாலியல் பலாத்காரம், ஆயுதங்களை பயன்படுத்துதல், பெண்களை ஆடைகளை வலுக்கட்டாயமாக கலைந்து பெண்ணுக்கு இழிவு படுத்துதல், பலவந்தமாக அடைதல் உள்ளிட்ட 8 கடும் சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிந்து மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதை அடுத்து இந்த வழக்கில் பீளமேடு இன்ஸ்பெக்டர் அர்ஜுன், சிறப்பு இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டனர்.
கைதான மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு கோவில்பாளையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த தேவராஜ் என்பவரை கொலை செய்து விட்டு இரு சக்கர வாகனத்தை திருடிக் கொண்டு வரும் போது இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் தெரிவித்தனர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் மீது கிணத்துக்கடவில் ஒரு கொலை வழக்கும், சூலூரில் கஞ்சா கடத்தல் வழக்கும், சத்தியமங்கலத்தில் சந்தன மரங்களை வெட்டிய வழக்கும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் ஒரு இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும், அது தொடர்பான புகார் செய்யாததால் காவல் துறையினர் பிடியில் இருந்து தப்பியதும் தெரிய வந்தது.
தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள் அதாவது கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ம் தேதி இரண்டாவது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு குற்றப்பத்திரிகைகளும் மொத்தம் 350 பக்கங்கள் கொண்டது. இது தவிர குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ரத்தம், அரிவாள் உள்ளிட்ட தடயங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மரபணு பரிசோதனை அறிக்கையும் சென்னை தடையவியல் பரிசோதனை மையம் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.
கோவை அனைத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் இந்த வழக்கை துரிதமாக விசாரணை நடத்தினார். பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கி 23 ஆம் தேதி சாட்சிகள் விசாரணை முடிந்தது. மொத்தம் 112 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். இதில் 72 பேர் நீதிமன்றத்தில் நேரடியாக வந்து சாட்சியம் அளித்தனர். கல்லூரி மாணவி, மாணவியரின் ஆண் நண்பர், மாணவியின் தாய், விசாரணை போலீஸ் அதிகாரிகள் உட்பட பலரும் அளித்த சாட்சியம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலு சேர்த்தது.
இதைத்தொடர்ந்து அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் 27ஆம் தேதி முடிவு அடைந்தது. இதனால் தீர்ப்பு 7 ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி சுந்தரராஜன் தெரிவித்தார்.
அதன்படி இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படுவதை ஒட்டி கோவை நீதிமன்றம் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்ட காளீஸ்வரன் காலில் காயம் ஆறாததால், அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கருப்பசாமி, தவசி ஆகியோர் கோவை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிற்பகல் ஒரு மணி அளவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டன. பிற்பகல் 2.10 மணி அளவில் இந்த வழக்கில் கைதான மூன்று பேரும் குற்றவாளிகள் என நீதிபதி சுந்தரராஜன் அறிவித்தார்.
அப்பொழுது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாலை 3:30 மணிக்கு கூட்டு பாலியல் பலாத்கார சட்ட பிரிவு 70(1) பிரிவில் சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூபாய் 500 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார்.
இதில் 309(4) வழிப்பறி சட்டப் பிரிவில் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதம், 324(4) சேதம் ஏற்படுத்துதல் சட்டப் பிரிவில் இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதமும், ஆயுதங்களை காட்டி கொள்ளை அடித்தல் சட்டப் பிரிவுக்கு இரண்டு வருட தண்டனையும், தாக்கி காயப்படுத்துதல், பலாத்காரம் செய்தல் பிரிவில் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதமும், 76 வது சட்டப்பிரிவில் பெண்ணுக்கு களங்கம் ஏற்படுத்துதலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 500 அபராதமும், அடைத்து வைத்தல் சட்டப் பிரிவில் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் ஏழு லட்சமும், குற்றவாளிகளால் காயம் அடைந்த ஆண் நண்பருக்கு ரூபாய் 2 லட்சம் நிவாரண நிதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா இந்த வழக்கில் சிறப்பாக வாதிட்டதாக நீதிபதி பாராட்டினார்.
இதை அடுத்து அவர்கள் மூன்று பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு செல்ல வாகனத்தில் ஏற்றிய போது
அதில் ஒரு குற்றவாளி கேமரா முன்பு மீசையை முறுக்கிக் கொண்டு கையினால் சைகை காண்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சம்பவம் நடைபெற்று 126 நாட்களுக்குள் துரிதமாக விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
4 மாதத்தில் தீர்ப்பு
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலில் பலாத்கர் சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கருப்புசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு கடந்த மாதம் இரண்டாம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு கூறினார். குற்ற சம்பவம் நடைபெற்று 126 நாட்களுக்குள் அதாவது நான்கு மாதங்களுக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் பூர்வ ஆதாரங்களை திரட்டி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா பேட்டி
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் அரசு தரப்பில் வாதம் செய்த வழக்கறிஞர் ஜிஷா கூறும் போது
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட தடயங்கள், தடையைவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட அரிவாளில் படிந்த ரத்தமும், ஆண் நண்பர் தலையில் ஏற்பட்ட ரத்தமும் பரிசோதனை செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது. டி.என்.ஏ பரிசோதனை, 200 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் உட்பட பல்வேறு ஆதாரங்களை அறிவியல் பூர்வமாக திரட்டி நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மூலம் குற்றவாளிகள் அவர்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டது. 8 கடும் சட்டப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டன. இதில் 7 சட்டப் பிரிவுகளுக்கு கடும் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தடையவியல் சான்றுகளை ஆய்வு செய்து சமர்ப்பித்த கிருஷ்ணராஜ் பங்களிப்பு முக்கியமானது. காவல் துறையினரும் சிறப்பாக செயல்பட்டு 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மகளிர் தினத்திற்கு முந்தைய நாளில் இந்த வழக்கில் கடும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.
தண்டனை பெற்றவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிகுமார் கூறும் போது 7 சட்ட பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதில் கூட்டாக சேர்ந்து குற்றங்களில் ஈடுபடுதல், என்ற சட்டப் பிரிவில் மட்டும் விடுவிக்கப்பட்டு உள்ளனர், வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்றார்.














0 கருத்துகள்: