செவ்வாய், 10 மார்ச், 2026

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் !!!

SHARE

 சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் !!!

சென்னையில் வணிக ரீதியான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்து உள்ளது.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பெங்களூருவில் இன்று உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், சென்னையிலும் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் எதிரொலியாக சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருந்த நிலையில், தற்போது பல்வேறு நகரங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது, சமையலுக்கு பயன்படும் எல்.பி.ஜி என்னும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு பிரித்தெடுக்கப்படுகிறது. தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம் எதிரொலியாக, பெங்களூரில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மும்பையிலும் ஹோட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு இருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், சென்னையிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

உலகளாவிய அரசியல் சூழலால் சிலிண்டர் எரிவாயு விநியோகச் சங்கிலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தட்டுப்பாடு எதிரொலியாக தொழில், வணிக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக சென்னை ஹோட்டல்கள் உரிமையாளர் சங்கம் அறிவித்து உள்ளது.

வீடுகளிலும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர் காலியான பின், முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் வழக்கமாக ஓரிரு நாள்களில் சிலிண்டர் விநியோகப்பட்டு விடும்.

ஆனால், தற்போது எரிவாயு சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் 8 நாள்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்து இருக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்து வைத்துக் கொள்வதாக தகவல் வெளியானது.

எரிபொருள் தட்டுப்பாடால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.

இதன்படி, ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தது 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களில் 25 நாள்கள் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை மார்ச் மாத இறுதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: