பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்; வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் !!!
ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியம் கிடையாது. அவருக்கும், தி.மு.க அரசுக்கும் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ளை அடிப்பது தான் முக்கியம் என்று த.வெ.க தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இவற்றில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதே வேகத்தில் பெரம்பூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்.
பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் பேசிய அவர், "வடசென்னையில் மிகப்பெரிய அடையளத்தின் ஒன்றாக பெரம்பூர் தொகுதி திகழ்கிறது. லூர்து அன்னை தேவாலயம், பிரசன்ன நரசிம்மர் கோயில், பல புகழ் பெற்ற மசூதிகள் இருக்கின்ற இடத்தில் இருந்து நாம் பிரச்சாரத்தை தொடங்குகிறோம். உழைக்கும் மக்களின் வாசனை இருக்கின்ற இடத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று என்னுடைய மனசு சொன்னது. அதனால் தான் நான் இங்கிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறேன்" என்றார்
தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் அதிகமாக இருக்கின்ற தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டை இப்படியொரு நிலைமைக்கு கொண்டு வந்தது யாரென நான் சொல்லி தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. தி.மு.க ஆட்சி தான் காரணம், ஸ்டாலின் சார் தான் காரணம்.
https://x.com/i/status/2038534258185367649
கடந்த 5 வருடத்தில் என்ன ஆட்சி நடத்தினார்கள் ? ஒரு டீ கடையில் நின்று டீ கூட குடிக்க முடியவில்லை. போதையில் வந்து வெட்டி விட்டு செல்கிறார்கள். இது என்ன நாடா இல்ல காடா?” என கோபத்துடன் மக்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார்.
மேலும், இங்கு அரசு என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா ? 5 வருடம் காவல்துறையை கையில் வைத்து இருப்பவரால், அடிப்படை பாதுகாப்பு கூட கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு இந்த ஆட்சி ? எதற்கு இந்த அதிகாரம் ? என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகளே, தோழர்களே, இந்த தீயசக்தி தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா ? குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா ? நீங்கள் நிம்மதியா இருக்கிறீர்களா ? என்று பரப்புரை இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை நோக்கி விஜய் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியம் கிடையாது. அவருக்கும், தி.மு.க அரசுக்கும் குடும்பத்துடன் சேர்ந்து கொள்ளை அடுப்பது தான் முக்கியம். டாஸ்மாக்கில் மட்டும் 1000 கோடிக்கு மேல் ஊழல், இது வெளியில் தெரிந்தது, வெளியில் தெரியாமல் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ ? நகராட்சி துறையிலும் 1000 கோடிக்கு மேல் ஊழல்.
வண்டி, வண்டியா வைச்சி இருக்கிற பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், உங்களிடம் கொடுத்து எப்படியாவது ஜெயிச்சு விடலாம் என்று கனவு கண்டுக் கொண்டு இருப்பார்கள். அதனை எல்லாத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள். வாங் கிட்டு, அவர்கள் காதிலேயே விசில் ஊதி அனுப்புங்கள் என்று வாக்காளர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார்.
அத்துடன், ஏப்ரல் 23-ம் தேதி காலையில் ரெடியாகி, விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். இது உங்களுக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையாக இருந்தாலும், எல்லாத்தையும் உதறி தள்ளி விட்டு, உங்களுக்கு நன்றி கடன் செலுத்தவே வந்து இருக்கிறேன். எல்லா வலிகளையும் தாங்கி கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்து இருக்கிறேன். ஒரு நாளும் பொய் சொல்லி உங்களை ஏமாற்ற மாட்டேன். 4 முனை, 40 முனை போட்டி என்று சொன்னாலும், இங்கு 2 முனை போட்டி தான். மக்கள் விரோத ஆட்சி நடத்துகின்ற ஸ்டாலின் சார் வேண்டுமா, மக்களை நேசிக்கின்ற விஜய் வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய விஜய், ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள். இது ஒரு விசில் சின்னத்தின் புரட்சியாக இருக்க வேண்டும். த.வெ.க வேட்பாளர்களும் நானும் வேறு, வேறு இல்லை. நம்பிக்கையுடன் இருங்கள், வெற்றி நிச்சயம் என்று விஜய் பேசினார்.

0 கருத்துகள்: