செவ்வாய், 31 மார்ச், 2026

பாசிச பா.ஜ.க வை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக் கூடாது - காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் !!!

SHARE

 பாசிச பா.ஜ.க வை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக் கூடாது - காஞ்சிபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் !!!

பாசிச பா.ஜ.க வை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக் கூடாது என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பரபரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சார பயணத்தை தொடங்கி உள்ளன. தி.மு.க தேர்தல் அறிக்கையை முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

முதல் நிகழ்வாக, பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்ற அவர், அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பேரறிஞர் அண்ணாவின் வழியில் மாநில உரிமைகளை காத்திட, தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களை சந்தித்து வெல்வோம் ஒன்றாக என அங்கு இருந்த குறிப்பேட்டில் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,

 "கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காஞ்சிபுரத்தில் இருந்து அண்ணாவை வணங்கி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினேன். நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இங்கு இருந்து தான் பிரச்சாரத்தை துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இம்முறை சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அது மகிழ்ச்சியாக இருப்பதால் அதற்கான ஆதரவை மக்கள் தெரிவிப்பார்கள்.

தமிழக மக்கள் மீண்டும் திராவிட மாடல் ஆட்சியை விரும்புகிறார்கள். தி.மு.க என்றுமே மக்களை சந்திக்க பயந்ததில்லை. முதலமைச்சரே எங்களுக்கு ரோல் மாடலாக இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

உத்திரமேரூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் சுந்தர், காஞ்சிபுரம் வேட்பாளர் நித்யா சுகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் தி.மு.க வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து, திறந்த வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,

 "வாக்காளர்களாகிய உங்களின் எழுச்சி மற்றும் மகிழ்ச்சியான முகங்களை பார்க்கும் போது, ஏற்கெனவே சட்டமன்ற தேர்தலில் வெற்றியை நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் என்றே தெரிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கொள்கை தலைவர்கள் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி தான். நமது கொள்கை தலைவர்கள் பேரறிஞர் அண்ணா போன்றவர்கள். மோடி மற்றும் அமித் ஷாவை, தமிழ்நாட்டிற்குள் நுழைய விடலாமா ? அதற்கு தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல். பாசிச பா.ஜ.க சக்தியை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக் கூடாது" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: